வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்
இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழல் பல்துறை ஆய்வுகளை உள்ளடக்கிய பார்வைக்கு முதன்மை அளிக்கும் இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. நவீன அறிவு மரபினை வளர்த்தெடுக்கும் போக்குகள் மேலெழுந்துள்ளன. ஆனால் தமிழ் வெளியில் ஆய்வாளர்களிடையே இவை இயக்கமாக மாற வேண்டும். கல்விப்புலம் சாராத பலர் தமிழியல் ஆய்வுகளைக் காத்திரமாகவும் நவீனப் போக்குகளோடும் ஆய்வு முறையியல்களோடும் நிகழ்த்தி வருகின்றனர். ஆனால் பல்வேறு புலமைப் பரிசில்களை, ஆராய்ச்சிக்கான நிதியுதவிகளைப் பெறுகின்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி புலங்கள் இவ்வாறு செய்கின்றார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. பெறுகின்ற உதவித்தொகைகளை வைத்து சாதாரணமான முறையிலே நல்ல ஆய்வுகளைத் தரமுடியும். ஆனால், இங்கே சிந்தனை முறையில், வாசிப்பில், விவாதம் முறைகளில், கலந்துரையாடல்களில் ஒரு பெருந்தேக்கம். கல்விப்புலங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் தமிழியல் ஆய்வுகளைக் கவனமாக எவ்வளவுக்கு எவ்வளவு முதன்மை அளிக்க இயலுமோ அவ்வளவு முதன்மை அளித்து அடுத்தகட்ட ஆய்வு மேம்பாட்டுக்கான வழிகளைத் திறக்கவேண்டிய இடத்திலுள்ளன. சில ஆண்டுகளாகக் கல்விப் புலங்களில் ஆராய்ச்சி நிறுவனங்களில் நிகழ்த்தப்பெறும் பெரும்பாலான ஆய்வுகள், பாடத்திட்டங்களில் வைக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், கருத்தரங்கத் தொகுப்புகள் ஆகியன ஆய்வு நெறிமுறைகளற்றும் உள்ளீடற்று வெற்றுச் சொற்கோலமிடும் தன்மையிலும் எடுத்துக்கொண்ட பொருண்மையைச் சொற்பொழிவாற்றும் போக்கிலும் விளக்கமுறையிலும் அமைந்திருக்கின்றன. கருதுகோள், முன்னாய்வுகள், ஆய்வு முறையியல் அற்ற நிலையில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன; அவை நூலாக்கமும் பெற்று விருதுகளும் தரப்படுகின்றன; சில கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்திலும் வைக்கப்படுகின்றன. கோட்பாட்டை நேரடியாகப் படித்து உள்வாங்காது போனபோக்கில் அளந்துவிடும் பண்புகளும் கோட்பாட்டை உள்வாங்கி எழுதிய ஆய்வுகளை மாதிரியாகக் கொண்டு நூல்களை, வரிகளை, படங்களை மாற்றிப் போட்டு ஆய்வை நிறைவு செய்யும் போக்குகளும் பெருகிவிட்டன. இன்னொரு புறம் ஆராய்ச்சி இதழ்கள் (UGC பட்டியலில் இடம்பெற்ற இதழ்கள் உட்பட) கட்டுரையாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு தரமற்ற ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுகின்றன. இந்த அவல நிலைகளுக்குப் பேராசிரியர்களும் உடந்தையாக உள்ளனர். வெறுமனே குறைகளை, சீர்கேடுகளைப் புலம்பிக் கொண்டிருக்காமல் இளம் தலைமுறை ஆய்வாளர்களுக்கு, பேராசிரியர் பட்டங்களைச் சூட்டிக்கொள்வோர்க்கு, தமிழியல் ஆய்வின் கடந்தகால சில நல்ல ஆய்வுகளை முன்மாதிரியாகக் கொண்டும் நவீன கோட்பாட்டுச் சிந்தனை மரபின் அறிவோடும் வழிகாட்டவும் முன்நகர்த்தவும் வேண்டிய கடமை வெட்சி இதழுக்கு உள்ளது. எனவே ஆண்டுக்கு ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டுமென கடந்த ஆண்டே திட்டமிட்டோம். சில சூழல் காரணமாக இந்தாண்டிலிருந்து நிகழ்வை நடத்த முன்வருகிறோம். இக்கருத்தரங்கு தமிழியலின் பல்வேறு பரிணாமங்களை முன்வைப்பதாக அமைய விரும்புகிறோம். மாற்றுத்திறனாளிகள், பழங்குடிகள், நாட்டார் மரபுகள், திருநர், பெண்ணியம், விளிம்புநிலை ஆய்வுகள் எனப் பன்மைத்துவ அமைப்புகளோடு உள்ளடக்கியதாய் அமைத்திட முயற்சிக்கிறோம். சமூகவியல், வரலாற்றியல், இலக்கணவியல், மொழியியல், ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, சூழலியல், மெய்யியல், கவிதையியல், புலம்பெயர்வு, மேலைத்தேய, கீழைத்தேய கலை, இலக்கிய, பண்பாட்டு, சமயக் கோட்பாடுகள், நாடகம், கூத்து, திரைப்படம், ஓவியம், சிற்பம், இசை எனப் பல்வெளிகளை இணைத்ததாய் இக்கருத்தரங்கம் நிகழ துறைசார்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நண்பர்கள் வழிகாட்டவும் பங்கெடுத்தும் தங்கள் ஆதரவினைத் தந்தும் உதவ வேண்டுகிறோம்.
முதல் கருத்தரங்கம் என்பதால் "தமிழியல் ஆய்வின் திசைவழி" எனும் பொதுப் பொருண்மையில் கருத்தரங்கை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளோம். இக்கருத்தரங்கம், முன்னர் நிகழ்ந்த ஆய்வுகளிலிருந்து புதிய பரிணாமத்தை நோக்கிய நகர்வாகவும் புதிய ஆய்வுகளுக்கான திறப்புகளைக் காட்டவும் கருத்தியல் ரீதியான சிக்கல்களைக் களைந்து சில முன்மொழிதல்களை, முன்னெடுப்புகளைக் கொடுக்கும் முறையிலும் முன்னுரையாகவே அமையவுள்ளது. முன்னர் பேசப்பட்ட, வாசிக்கப்பட்ட கட்டுரைகளைத் திரும்பப் படிக்காமல் புதிய சிந்தனைகளோடும் ஆய்வு முறையியல்களோடும் எழுதப்படும் கட்டுரைகள் இங்கு வாசிக்க முதன்மை அளிக்கப்படும் என்ற உறுதியை முன்வைக்கிறோம்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் கருத்தரங்க அமர்வுகள் இணைய வாயிலாக நடத்தப்படவுள்ளன. ஆய்வுக்கட்டுரைகள்
கட்டுரை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : vetchiidhal@gmail.com
தமிழியல் ஆய்வின் திசைவழியைக் கண்டடைந்து சீரான நெறிமுறைகளுடன் கூடிய ஆய்வுகளை முன்னெடுக்க அதற்கான வாயிலாக இக்கருத்தரங்கம் அமைய கைகோர்ப்போம்.
அன்புடன்
வெட்சி இதழுக்கான திணைக்களம்
இந்த இதழ் எமக்கு பெருவியப்பையும் மகிழ்வையும் அளிக்கிறது. வடிவம்,உள்ளடக்கம் ஆகிய நிலைகளில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளமை பாராட்டத்தக்கது. வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு