நிகழ்ச்சித் தொகுப்பு
தமிழ் - ஜப்பானிய ஒப்பியல் அறிஞர் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நூற்றாண்டினையொட்டி
வெட்சி இதழ், கடந்த ஆகஸ்ட் 23, 24, 25 ஆகிய மூன்றுநாட்கள் இணையவழிக் கருத்தரங்கை ஏற்பாடு
செய்திருந்தது. இந்நிகழ்வில் தமிழ் - ஜப்பானிய ஒப்பாய்வில் ஈடுபட்டுவரும் பேராசிரியர்கள்,
ஆய்வாளர்கள் தங்களின் கருத்துரைகளையும் ஆய்வுரைகளையும் வழங்கினர்.
தோக்கியோவில் 1919 ஆகஸ்ட், 23 இல் பிறந்தவர் சுசுமு ஓனோ. டோக்கியோ பல்கலைக்கழகத்தில்
மொழியியலில் பட்டம் பெற்றவர். கக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
1950களில் ஜப்பானிய மொழியின் தோற்றம், வேர் குறித்த ஆய்வில் நாட்டம் கொண்ட பேராசிரியர்
சுசுமு ஓனோ அவர்கள் ஆஸ்திரினேஸ்ய மொழி, கொரிய மொழிகளுடன் ஒப்பீடு செய்து பார்த்தார். ஆனால் அதில் அவர்க்கு நிறைவு இல்லாத படியால் அவரின்
கவனம் திராவிட மொழிகளின் பக்கம் திரும்பியது. A Dravidian Etymological Dictionary என்ற
நூலின் துணையோடு யப்பானிய சொற்களை ஒப்பிட்டுப் பார்த்து, தமிழ் - ஜப்பானிய ஒலி - சொல்
- தொடர் - பொருள் என்ற அடிப்படையில் ஆய்வினைத் தொடர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகப்
பேராசிரியர் பொற்கோவின் வழிகாட்டலில் இந்த ஆய்வு தீவிரம் கொண்டது. சென்னை வந்து பொற்கோவிடம்
முறையாகத் தமிழ்க்கற்றுக் கொண்டார். 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ்
மாநாட்டில் The Relationship of the Tamil and Japanese Languages என்ற கட்டுரையை வழங்கினார்.
தமிழ் - ஜப்பானிய ஒப்பாய்வில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரையாகவும், தொடக்கமாகவும்
இதனைக் குறிப்பிட வேண்டும். ஒலி - சொல் - பொருள் ஒப்புமையுடைய 300 மேற்பட்ட சொற்களைப்
பட்டியலிட்டுக் காட்டினார். இச்சொற்களில் பெரும்பாலான சொற்கள் அரிசிப்பண்பாட்டை முதன்மைப்படுத்தியிருந்தன.
அவருடைய ஆய்வுக்கு அங்கிருந்த அச்சு ஊடகங்கள் துணைநின்றன. ஆகையால் ஆய்வு குறித்த செய்திகள்,
கட்டுரைகள் தொடர்ச்சியாக இதழ்களில் வெளியாகவே மக்களும் அறிந்துகொண்டதோடு ஆர்வமும் காட்டினர்.
அவரின் ஒப்பாய்வுக்கு ஆசகி, கெங்கோ போன்ற இதழ்கள் துணைநின்றன. பண்டைய தமிழ் மற்றும்
பண்டைய யப்பானிய சொற்களை முதன்மைப்படுத்தியே ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகச்
சங்க இலக்கியத்திற்கும் யப்பானிய செவ்விலக்கியமான மன்யோசுவிற்குமான இலக்கிய அடிப்படையிலான
ஒப்பாய்வும் முதன்மைபெற்றது. அவரோடு ஈழத்துத் தமிழறிஞர்கள் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ்,
அவரின் துணைவியார் மனோன்மணி ஆகியோர் இவ்வாய்வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவரோடு
கக்சுயின் பல்கலைக்கழகத்தில் ஆய்வினைத் தொடர்ச்சியாக மேற்கொண்டனர். மொழி அடிப்படையில்
நிகழ்ந்த ஆய்வு, இலக்கியம், பண்பாடு, தொல்லியல் தளங்களில் விரிவடைந்தது.
பொங்கல் விழாவிற்கும் யப்பானியப் புத்தாண்டுக்குமான
ஒற்றுமைகளைப் பேராசிரியர் ஓனோ விளக்கினார். தமிழகத்திற்கு நேரிடையாக வந்து களப்பணி
வாயிலாகப் பெற்ற தரவுகளைக் கொண்டு யப்பானிலும் தைப்பொங்கல் என்ற கட்டுரையை வெளியிட்டார்.
பொங்கலுக்கும் யப்பானியப் புத்தாண்டுக்குமான 17 ஒற்றுமை நிலைகளைப் பட்டியலிட்டார்.
பொங்கலோ பொங்கல் என்று ஒலிக்கும் வழக்கம் யப்பானில் புத்தாண்டில் வைக்கப்படும் பொங்கலின்போது
ஹொங்கரா ஹொங்கரா என்று ஒலிக்கப்படுவதையும் அது பொங்கலோ பொங்கல் என்று வழங்குவதின் திரிபு
என்பதை மொழியியல் அடிப்படையில் விளக்கியது முக்கியமான ஆய்வாகும்.
தமிழ் - ஜப்பானிய ஒப்பாய்வு தொல்லியல் அடிப்படையிலும் ஒப்புமை கொண்டிருப்பதை
அறிந்த ஓனோ, பேராசிரியர் கா.ராஜன் போன்றோரின் உதவியுடன் தொல்லியல் படிப்பினையும் கற்றார்.
எல்லா வகையிலும் தன்னை ஆய்விற்காகத் தகுதிப்படுத்திக் கொண்டார். மண்தாழிகளில் பெயர்பொறிக்கும் வழக்கம், நடுகல் வழிபாடு,
இயற்கை வழிபாடு, தாழிப்பண்பாடு போன்றவற்றில் உள்ள இருபண்பாட்டு ஒற்றுமைகளை எடுத்திக்
காட்டியுள்ளார் ஓனோ.
இவரின் ஆய்வுகள் குறித்து பல மேலைநாட்டு ஆய்வாளர்கள் வரவேற்று எழுதியுள்ளனர்.
“ஜப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட
முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின்
இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்.” என கமில் சுவலபிலும், “ஓனோவின்
எடுகோளாகிய தமிழ் யப்பானிய உறவு வெறும் தற்செயல் அல்லது ஓர் இடர்நிகழ்வு அல்ல.” என
யொரெஸ்லாவ் வாச்செக்கும் வரவேற்று எழுதியுள்ளனர்.
இந்த ஒப்பாய்வு தொடர்பான நூல்கள் யப்பானில்
பல இலட்சம் படிகள் விற்பனையாகியுள்ளன. யப்பானில் ஓர் ஆய்வுநூலுக்குக் கிடைத்த வரவேற்பு
நமது சூழலில் அவ்வாறு வரவேற்கப்படுவதில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விடயமாகும்.
தன் வாழ்நாள் முழுதும் இந்த ஆய்வில் ஆர்வங்கொண்டிருந்த ஓனோ அவர்கள் 2008 ஆம்
ஆண்டு காலமானார். 40 ஆண்டுகாலமாக அவரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வு இன்றும் தொடர்கிறது
என்பதில் பெருமை மட்டுமல்ல, இன்னும் தமிழ் ஆய்வாளர்கள் கவனமும் தீவிரமும் காட்டவேண்டும்
என்பதுதான் இந்நூற்றாண்டு விழாவின் நோக்கமாக உள்ளது. துடிப்பான ஓர் இளந்தலைமுறை ஆய்வாளர்கள்
புத்தொளி பாய்ச்சிட முன்வர வேண்டும். அதற்கு அவரின் ஆய்வுகள் வழிகாட்டுதல்களாக அமையும்.
கருத்தரங்கின் முதல்நாள் முனைவர் சிவராமன், திருமதி பிரசன்னகுமாரி ஆகியோர் சிலப்பதிகார
மங்கலவாழ்த்துப் பாடி நிகழ்வினைத் தொடங்கி வைத்தனர். நூற்றாண்டு விழாவினையொட்டி இரண்டு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
1.
பேராசிரியர் சுசுமு ஓனோவின் ஆய்வுகளையும் அதனையொட்டி நடைபெற்ற தமிழ் - ஜப்பானிய
மொழி, இலக்கண, பண்பாட்டு, தொல்லியல் ஒப்பாய்வுகளைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில்
மொழியியல், ஒப்பிலக்கியம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய பாடத்திட்டத்தில் ஒருபகுதியாக
இணைக்கப் பேராசிரியர்கள் முன்வருதல் வேண்டும். பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள்
மொழிபெயர்த்த ஜப்பானியக் காதற்பாடல்கள் தொகுதி 10, 11 ஆகியவற்றுள் ஒருசில பாடல்களை
மொழிபெயர்ப்புப் பகுதியில் இணைத்து மாணவர்களுக்குக் கற்பிக்கலாம். அதனையொட்டி மாணவர்களுக்குக்
கீழைத்தேய இலக்கிய, பண்பாட்டு மரபுகளையும் அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகள், தனித்தன்மைகள்
குறித்த ஆய்வில் ஈடுபடுவதற்கு வாய்ப்பாகவும்,
மேற்கொண்டு சமஸ்கிருத, பிராகிருத, பாலி, சீனம், கொரியம், திபெத்திய மொழிகளின் ஊடாக
இலக்கியங்களை ஒப்பாய்வு செய்யவும் வழிவகைகள் ஏற்படும்.
2.
தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வில் பேராசிரியர்
சுசுமு ஓனோவோடு இணைந்து ஆய்வுகளை நிகழ்த்திய ஆய்வாளர்களின் உரைகள் தொகுக்கப்படும்,
ஆய்வின் அடுத்தக்கட்ட தேவை, முன்னெடுப்புகள், இலக்கிய ஒப்பாய்வுகள், பண்பாட்டு ஒப்பாய்வுகள்,
சமூக உறவுகள், தொல்லியல் ஆய்வுகள் குறித்து நேர்காணல்கள் (ஒலி ஒளி - உரை வடிவங்களில்) செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படும்.
சென்னைப்
பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தரும் தமிழறிஞருமான பேராசிரியர் பொற்கோ, “தமிழ் - ஜப்பானிய
ஒப்பாய்வு இன்றும் இனியும்” என்ற பொருண்மையில் சுசுமு ஓனோவின் கருதுகோள், அந்த ஆய்வின்
மீதான நம்பகத்தன்மை மேலும் இந்த ஆய்வை வலுப்படுத்துவதற்காக இளம்தலைமுறையினர் அக்கறை
செலுத்த வேண்டியதன் தேவை ஆகியவற்றை உள்ளடக்கி உரையாற்றினார். இது இன்றைக்கு அவசியம்
தொடர வேண்டிய ஆய்வு என்று வலியுறுத்தினார்.
அடுத்து,
“சுசுமு ஓனோவின் ஆய்வு வளர்ச்சியும் அதில் எங்கள் பங்களிப்பும்” என்னும் பொருண்மையில்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தகைசால் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் உரையாற்றினார்.
ஆய்வின் வளர்ச்சிநிலைகளை ஐந்து கட்டங்களாகப் பகுத்து அவற்றின் போக்குகளை விரிவாக எடுத்துக்காட்டினார்.
தாழிப்பண்பாடு தமிழகத்திலிருந்து ஜப்பானுக்குக் கடல் நீரோட்டம் வழியாக வந்திருக்க வேண்டுமென
கடலோடி ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளதையும், மேலும் இந்த ஆய்வுக்கு புவியியலும் மொழியியலும்
ஒருங்கிணைந்த ஆய்வு வளரவேண்டும் எனக் குறிப்பிட்டார். தமிழ் - ஜப்பானிய ஒப்பியலாய்வின்
மீதான மீள்ஆய்வுகள் தொடர வேண்டியுள்ளதை வலியுறுத்திப் பேசினார். இவரின் உரையை அடுத்து
கக்சுயின் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்,
“ஜப்பான் - மன்யோசு செவ்வியல் இலக்கியத்தைக் கற்கத் தொல்காப்பியம் ஒரு திறவுகோல்” என்ற
பொருண்மையில் மன்யோசு இலக்கியத்தைத் தொல்காப்பியத்தின் துணையோடு எளிதில் பொருள்கொள்ளும்
முறையையும், தொல்காப்பியம் - சங்க அகஇலக்கியம் - மன்யோசு காதற்பாடல்களின் இணைவுகளையும்
கற்பதற்கான சில வழிமுறைகளை வரையறுத்தும் சான்றுகளோடு எடுத்துக்காட்டிப் பேசினார்.
இரண்டாம்
நாள் நிகழ்வினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் முனைவர் ஸ்ரீ. நாகபூஷணி
அரங்கராஜ், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடித் தொடங்கி வைத்தார். இரண்டாம் நாள் அமர்வில்
மலாயப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் குமரன், “தமிழ் - ஜப்பானியப் பண்பாட்டுறவு”
எனும் பொருளில் உரைநிகழ்த்தினார். பண்டைய ஜப்பானிய இலக்கியங்களான கொஜிகி, நிகொன்சொகி,
மன்யோசு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பழந்தமிழ்ப் பண்பாட்டு மரபுகளை இணைத்து ஒப்பிட்டுப்
பேசினார். அவருடைய ஆய்வுரையில் மானுடவியல், தொல்லியல் போன்ற அறிவியல் துறைகள் இந்த
ஆய்வோடு இணைய வேண்டும் என வலியுறுத்தினார். அடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை
விரிவுரையாளர் திருமதி. செல்வ அம்பிகை நடராஜன், சங்க அகப்பாடல்களிலும் யப்பானிய மன்யோசு
காதற்பாடல்களிலும் இயற்கை - ஓர் ஒப்பாய்வு எனும் பொருண்மையில் இவ்விரு மரபுகளில் காணப்படும்
இயற்கை வெளிப்பாட்டு முறைகளைப் பகுப்பாய்வு செய்து விளக்கினார்.
மூன்றாம் நாள் முனைவர் சிவராமன், திருமதி பிரசன்னகுமாரி ஆகியோர்
பரிபாடல், திருப்புகழ் பாடி நிகழ்வினைத் தொடங்கி வைத்தனர். தொடக்கமாகப் பச்சையப்பன்
கல்லூரியின் முன்னைத் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.இராம.குருநாதன், “சங்க இலக்கியப் பின்னணியில்
மன்யோசு பாடல்கள் : கையறுநிலைப் பாடல்களை முன்வைத்து” எனும் பொருண்மையில், அகஇலக்கியங்களுக்கிடையே
உள்ள ஒற்றுமைகளைக் கடந்து புறப்பாடல்களில் காணப்படும் ஒற்றுமைகளைக் கண்டறியும் தன்மையில்
கையறுநிலைப்பாடல்களைக் கொண்டு ஒப்பிட்டுக் காட்டிப் பேசினார். அடுத்து ஜவகர்லால் நேரு
பல்கலைக்கழகத்தில் தமிழ் - ஜப்பானிய ஒப்பாய்வில் முனைவர்பட்டம் பெற்ற முனைவர் இரா.இரம்யா,
“கூற்று அடிப்படையில் குறுந்தொகை, மன்யோசு தொகுதி பத்தின் பாடல்கள் : ஓர் ஒப்பீடு”
எனும் பொருண்மையில் கூற்று அடிப்படையில் உணர்வுநிலை சார்ந்த நிலைகளைப் பகுப்பாய்வு
செய்து விளக்கினார். இறுதியாக, ஆய்வாளர் நி.கனகராசு, “ஐங்குறுநூறும் மன்யோசு காதற்பாடல்களும்
: தொல்காப்பியச் செய்யுளியலை முன்வைத்து” என்னும் பொருண்மையில், வடிவம், உள்ளடக்கம்,
உத்தி என்று பகுப்பாய்வு செய்து இவ்விரு மரபுகளையும் ஒப்பிட்டுக் காட்டி, கருப்பொருட்கள்
பெறும் சமூகப் பண்பாட்டு மதிப்புகளை எடுத்துக்காட்டினார்.
வெட்சி இதழுக்கான திணைக்களம் ஒருங்கிணைத்த முதல் கருத்தரங்கில் ஏரளமான பேராசிரியர்கள்
தொடக்கநாள் முதல் இறுதிநாள் நிகழ்வுவரை கலந்துகொண்டு விவாதங்களை ஏற்படுத்தி கருத்துரைகளை
வழங்கினர்.
இந்நிகழ்வு சிறப்புற நிகழ்ந்தேற பலவழிகளில்
உறுதுணையாக நின்ற பேராசிரியர்கள், நண்பர்கள், ஆய்வாளர்கள் குறிப்பாக, தமிழ்சங்கர்,
சிபி நந்தன் ஆகியோர்க்கும் தொழில்நுட்ப உதவிகள் புரிந்து இணையவழிக் கருத்தரங்கை நடத்தித்
தந்த த.க.தமிழ்பரதன், ஆசைமணி ஆறுமுகம் ஆகியோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நிகழ்ச்சித்
தொகுப்புகள் சீர்செய்யப்பட்டு விரைவில் வெட்சி இதழ்த் திணைக்கள வலையொளியில் பதிவேற்றப்படும்.
அன்புள்ள,
வெட்சி இதழுக்கான திணைக்களம்