ஞாயிறு, 11 ஜூலை, 2021

வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்

 

வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்

 

இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழல் பல்துறை ஆய்வுகளை உள்ளடக்கிய பார்வைக்கு முதன்மை அளிக்கும் இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. நவீன அறிவு மரபினை வளர்த்தெடுக்கும் போக்குகள் மேலெழுந்துள்ளன.  ஆனால் தமிழ் வெளியில் ஆய்வாளர்களிடையே இவை இயக்கமாக மாற வேண்டும். கல்விப்புலம் சாராத பலர் தமிழியல் ஆய்வுகளைக் காத்திரமாகவும் நவீனப் போக்குகளோடும் ஆய்வு முறையியல்களோடும் நிகழ்த்தி வருகின்றனர். ஆனால் பல்வேறு புலமைப் பரிசில்களை,  ஆராய்ச்சிக்கான நிதியுதவிகளைப் பெறுகின்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி புலங்கள் இவ்வாறு செய்கின்றார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. பெறுகின்ற உதவித்தொகைகளை வைத்து சாதாரணமான முறையிலே நல்ல ஆய்வுகளைத் தரமுடியும்.  ஆனால்,  இங்கே சிந்தனை முறையில், வாசிப்பில், விவாதம் முறைகளில், கலந்துரையாடல்களில் ஒரு பெருந்தேக்கம்.  கல்விப்புலங்கள்,  ஆராய்ச்சி நிறுவனங்கள் தமிழியல் ஆய்வுகளைக் கவனமாக எவ்வளவுக்கு எவ்வளவு முதன்மை அளிக்க இயலுமோ அவ்வளவு முதன்மை அளித்து அடுத்தகட்ட ஆய்வு மேம்பாட்டுக்கான வழிகளைத் திறக்கவேண்டிய இடத்திலுள்ளன. சில ஆண்டுகளாகக் கல்விப் புலங்களில் ஆராய்ச்சி நிறுவனங்களில் நிகழ்த்தப்பெறும் பெரும்பாலான ஆய்வுகள், பாடத்திட்டங்களில் வைக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகள்,  கருத்தரங்கத் தொகுப்புகள் ஆகியன ஆய்வு நெறிமுறைகளற்றும் உள்ளீடற்று வெற்றுச் சொற்கோலமிடும் தன்மையிலும் எடுத்துக்கொண்ட பொருண்மையைச் சொற்பொழிவாற்றும் போக்கிலும்  விளக்கமுறையிலும் அமைந்திருக்கின்றன. கருதுகோள், முன்னாய்வுகள், ஆய்வு முறையியல் அற்ற நிலையில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன; அவை நூலாக்கமும் பெற்று விருதுகளும் தரப்படுகின்றன; சில கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்திலும் வைக்கப்படுகின்றன. கோட்பாட்டை நேரடியாகப் படித்து உள்வாங்காது போனபோக்கில் அளந்துவிடும் பண்புகளும் கோட்பாட்டை உள்வாங்கி எழுதிய ஆய்வுகளை மாதிரியாகக் கொண்டு நூல்களை, வரிகளை, படங்களை மாற்றிப் போட்டு ஆய்வை நிறைவு செய்யும் போக்குகளும் பெருகிவிட்டன. இன்னொரு புறம் ஆராய்ச்சி இதழ்கள் (UGC பட்டியலில் இடம்பெற்ற இதழ்கள் உட்பட) கட்டுரையாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு தரமற்ற ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுகின்றன. இந்த அவல நிலைகளுக்குப் பேராசிரியர்களும் உடந்தையாக உள்ளனர்.  வெறுமனே குறைகளை,  சீர்கேடுகளைப் புலம்பிக் கொண்டிருக்காமல் இளம் தலைமுறை ஆய்வாளர்களுக்கு, பேராசிரியர் பட்டங்களைச் சூட்டிக்கொள்வோர்க்கு,  தமிழியல் ஆய்வின் கடந்தகால சில நல்ல ஆய்வுகளை முன்மாதிரியாகக் கொண்டும் நவீன கோட்பாட்டுச் சிந்தனை மரபின் அறிவோடும் வழிகாட்டவும் முன்நகர்த்தவும் வேண்டிய கடமை வெட்சி இதழுக்கு உள்ளது. எனவே ஆண்டுக்கு ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டுமென கடந்த ஆண்டே திட்டமிட்டோம். சில சூழல் காரணமாக இந்தாண்டிலிருந்து நிகழ்வை நடத்த முன்வருகிறோம். இக்கருத்தரங்கு தமிழியலின் பல்வேறு பரிணாமங்களை முன்வைப்பதாக அமைய விரும்புகிறோம்.  மாற்றுத்திறனாளிகள், பழங்குடிகள், நாட்டார் மரபுகள், திருநர், பெண்ணியம், விளிம்புநிலை ஆய்வுகள் எனப் பன்மைத்துவ அமைப்புகளோடு உள்ளடக்கியதாய் அமைத்திட முயற்சிக்கிறோம். சமூகவியல், வரலாற்றியல், இலக்கணவியல், மொழியியல்,  ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, சூழலியல், மெய்யியல், கவிதையியல், புலம்பெயர்வு, மேலைத்தேய, கீழைத்தேய கலை, இலக்கிய, பண்பாட்டு, சமயக் கோட்பாடுகள், நாடகம், கூத்து, திரைப்படம், ஓவியம், சிற்பம், இசை எனப் பல்வெளிகளை இணைத்ததாய் இக்கருத்தரங்கம் நிகழ துறைசார்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நண்பர்கள் வழிகாட்டவும் பங்கெடுத்தும் தங்கள் ஆதரவினைத் தந்தும் உதவ வேண்டுகிறோம்.

 

முதல் கருத்தரங்கம் என்பதால் "தமிழியல் ஆய்வின் திசைவழி" எனும் பொதுப் பொருண்மையில் கருத்தரங்கை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளோம். இக்கருத்தரங்கம், முன்னர் நிகழ்ந்த ஆய்வுகளிலிருந்து புதிய பரிணாமத்தை நோக்கிய நகர்வாகவும் புதிய ஆய்வுகளுக்கான திறப்புகளைக் காட்டவும் கருத்தியல் ரீதியான சிக்கல்களைக் களைந்து சில முன்மொழிதல்களை, முன்னெடுப்புகளைக் கொடுக்கும் முறையிலும் முன்னுரையாகவே அமையவுள்ளது. முன்னர் பேசப்பட்ட, வாசிக்கப்பட்ட கட்டுரைகளைத் திரும்பப் படிக்காமல் புதிய சிந்தனைகளோடும் ஆய்வு முறையியல்களோடும் எழுதப்படும் கட்டுரைகள் இங்கு வாசிக்க முதன்மை அளிக்கப்படும் என்ற உறுதியை முன்வைக்கிறோம்.

 

நவம்பர், டிசம்பர் மாதங்களில் கருத்தரங்க அமர்வுகள் இணைய வாயிலாக நடத்தப்படவுள்ளன. ஆய்வுக்கட்டுரைகள்                                           அக்டோபர் 10 க்குள்ளாக அனுப்பி வைக்க வேண்டுகிறோம். கட்டுரை குறித்த மதிப்பீட்டுக் குழு அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்  கட்டுரைகள் ஆய்வாளரால் செப்பம் செய்யப்பட்டுக் கட்டுரைகள் வாசிக்கப்படும். விவாதங்களுக்கு முதன்மை அளிக்கப்படும். வாசிக்கப்பட்ட கட்டுரைகள் நூலாக்கம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு வெளியிடப்பட உள்ளன.

 

கட்டுரை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : vetchiidhal@gmail.com

 

தமிழியல் ஆய்வின் திசைவழியைக் கண்டடைந்து சீரான நெறிமுறைகளுடன் கூடிய ஆய்வுகளை முன்னெடுக்க அதற்கான வாயிலாக  இக்கருத்தரங்கம் அமைய கைகோர்ப்போம்.

 

அன்புடன்

வெட்சி இதழுக்கான திணைக்களம்


புதன், 26 மே, 2021

முல்லை ஆதவன் நாட்குறிப்பு : 2020-11-21

 

வெட்சி இதழ் : மொழி வரையும் தடம்

=========================



முல்லை ஆதவன் நாட்குறிப்பு : 2020-11-21

===================================

வெட்சி  மலர் : இரண்டு – (இதழ்கள் மூன்று - நான்கு இணைந்து) பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு நினைவிதழாக வெளிவந்திருக்கிறது.

நண்பர் திரு.நி.கனகராசன் - கானகநாடன் அனுப்பி இருந்தார்.  மிகமகிழ்ச்சியுடன்  நன்றி கூறுகிறேன்.

ஒரு பருந்துப் பார்வையாகப் பார்த்து முடித்தவுடனே அவசரமாக என் மகிழ்ச்சியான வாழ்த்துக்களை மட்டும் உடனடியாகப் பதிவு செய்துவிடலாம் என்று  தோன்றியது.

அதைப்பற்றிய விரிவான கருத்துரைகள் எழுதுவதற்கான ஆசை இருக்கிறது பின்னால் விரிவாக எழுதலாம்.

-----------------------------------------------------------

இந்த இதழை வெளியீடு செய்துள்ள  இளைஞர்களுக்கு என்னுடைய மகிழ்ச்சியான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழியல் ஆய்வு மற்றும் படைப்பிலக்கியத் தளங்களில் புதிய இளைஞர்கள் புதிய அலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த இதழில் நான்  காணும் இளைஞர்கள் பெரும்பாலோர் எனக்கு அறிமுகம் ஆகாத புதியவர்கள்- இவர்கள் எழுச்சியை - புதிய சாதனைகளை உருவாக்க வேண்டும் என்று செய்கிற முயற்சிகளைப் பார்த்து மனம் மகிழ்கிறேன்  - இவர்களின் ஆர்வம் மகிழ்வைத் தருகிறது – சில இடங்களில் மிகை ஆர்வமும் காண்கிறேன் – ஆனால் எந்த குருதேவரின் – கொடையாளியின் – கருத்தாளியின் ஆள்கையும் இல்லாமல்  - எந்தப் பெரிய ஆளுமையின் பின்புலமும் கைவிரல் தழுவலும் இல்லாமல் சுயமாக இவர்கள் தம் பறத்தலில் விரிந்திருக்கிறார்கள் - இதுவே இந்த இதழாளிகளின்  பலம் - இதுவே பலவீனமும் கூட – ஆனால் இவர்கள் சரியான திசை வெளிகளில் வலிமையாகப் பறந்துகொண்டிருக்க வேண்டும் என்பது எனது ஆசை.

==============================

மதிப்பீடாக அல்லாமல் – என் பார்வைக்குறிப்பாக – இந்த இளைஞர்களை வாழ்த்துவதற்காக – சில குறிப்புகளைப் பதிவு செய்யலாம் என்று தோன்றியது.

ஜப்பானிய பேராசிரியர் சுசுமோ ஒனோ பற்றி நம்முடைய - பரவல் இலக்கியக் கருத்தாடல் களங்களில் விரிவாக அறிமுகம் ஆகவில்லை என்றே நினைக்கிறேன் - வணிகச் சொற்பொழிவு – பெருவிழாக் கூட்டங்கள் – கையொலி வாயொலி நிறைக்கும் பெரும் வித்தக உரையாளர்களுக்கெல்லாம் சுசுமோ ஒனொ பற்றிப்  பேசுவதற்கு நேரமில்லை - பேசினாலும்  கடைவிரித்தால் கொள்வாரில்லை என்ற கதை இருப்பதால் வியாபாரிகள் கடை விரிக்க மாட்டார்கள் – அல்லவா ? பட்டங்கள் தருவதற்காக - பெறுவதற்கான  ஆராய்ச்சிக் களங்களில் அவரவர் பாடு இருக்கிறது - ஆனாலும் யாரோ சிலர் ஏதாவது செய்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது அல்லவா ?

மொழி வரலாற்று ஆய்விலும் இலக்கண ஆய்வுக் களத்திலும் புலமை பெற்ற சுசுமோ, தமிழ் ஜப்பானிய மொழிகளின்  ஆய்வுக்கு ஆற்றிய பங்களிப்பை - எதிர்காலத்தில் தமிழ் ஒப்பிலக்கிய ஒப்பியல் மொழி ஆய்வாளர்கள் செல்ல வேண்டிய திசைகளை அடையாளம் காட்டிய சுசுமு ஓனொவை நினைவுகூறும் வகையில் இந்த இதழை வெளிக்கொண்டிருப்பதற்கு ஒரு பெரிய பாராட்டைக் கைகள் கொட்டித் தரவேண்டும்.

பண்டைய தமிழ் சப்பானிய ஒப்பாய்வு பற்றி பேராசிரியர் சண்முகதாஸ் மற்றும் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோருடன்               திரு. நி கனகராஜ் மேற்கொண்டிருக்கும் நேர்காணல் மிக அருமையானது.  தமிழ்மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய பல புதிய செய்திகளைத் தருகிறது.

பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் ஜப்பானிய மன்யோசுப் பாடல்களில் ஆயிரம் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் – அதுவும் ஆங்கிலம் வழியாக அல்லாமல் மூல யப்பானிய மொழியில் இருந்தே மொழிபெயர்த்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய செய்தி !

1987 ஆம் ஆண்டில் இருந்து கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளாக மன்யோசு - தமிழ்ப் பாடல்களில் பேரா. மனோன்மணி ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

மன்யோசு  அகப்பாடல் மரபுகளை பற்றி செல்வ அம்பிகை நந்தகுமாரனும் – நி. கனகராசு ஆகியோரும் எழுதி இருக்கும் ஆய்வு கட்டுரைகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன.

தமிழ் ஆய்வுக் களத்தில் பிறமொழிக் கவிதைகளோடு ஒப்பாய்வுக் களத்தை இது வலிமைப் படுத்துகிறது. 

நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் சு வேணுகோபாலன் – தமிழ்க் கதையுலகில் தனக்கேயான ஒரு தனிவழியில் சாதனைகள் செய்துகொண்டு ஓசையில்லாமல் படர்ந்துகொண்டிருப்பவர் – அவருடைய விலகிச் செல்லும் பாதை என்னும் சிறுகதையை மிக விரும்பிப் படித்தேன் – படித்து முடித்த பிறகு நூறாண்டு காலம் வாழ்க என்று கந்தசாமியுடன் சேர்ந்துகொண்டு உரக்கப் பாடிக்கொண்டு வெகுநேரம் இருந்தேன் – சிறுகதை நன்றாக இருந்தது என்றெல்லாம் ஒற்றைவரியில் சொல்ல முடியாத ஒரு வேறு அனுபவம் அது .

சங்க இலக்கியத்தில் மொழி பெயர்ப்புச்சாதனைகளைச் செய்திருக்கும் பேராசிரியர் தட்சிணாமூர்த்தி தமக்குரிய மொழிபெயர்ப்பு அனுபவங்களோடு சங்க இலக்கிய மொழி பெயர்ப்புகளைப் பற்றிய மதிப்பீடுகளைத் தந்திருக்கிறார்.

தமிழ் மலையாள செவ்வியல் கூறுகள் பற்றி கே. நாச்சிமுத்து கட்டுரை ஆழ்ந்து பயணம் வேண்டிய கட்டுரையாக உணர்கிறேன்.

உத்திரமேரூர் கல்வெட்டுகள் பற்றி கே. ஆர். சங்கரன் ஆய்வுரை,  பிரியாபாபு எழுதிய சினிமாவில் திருநங்கைகள் பற்றிய கட்டுரை ,  உயிரொலி விட்டைசைகளும்  தீர்வுகளும் பற்றி தி.மோகன்ராஜு கட்டுரை, தமிழ்-வடமொழி- பாலிமொழி மூன்றாம் வேற்றுமை உருபு பற்றி இராமச்சந்திரன் கட்டுரை, பாரதிதாசன் - பிராஸ்ட் பற்றி                                      இராம. குருநாதன் கட்டுரை என்று பல்வகை வேறுபட்ட தளங்களில்  அடர்த்தியான கட்டுரைகளைப் பார்க்கிறபோது உண்மையில் பெரு வியப்படைகிறேன் –

நினைத்த அடுத்த நொடியே நூறு நூறு உள்ளீடற்ற வெற்று நகல் எழுத்தளிப்பை ஆய்வுக்கட்டுரைகள் என்ற பெயரில்  தயாரித்து நூல்களாக ( கையில் பண்ம் இருந்தால் ) வெளியிட்டு மாலைகள் சூடியபடி பலர் உலா வந்து கொண்டிருக்கும் சூழலில் – அழுத்தமான அசைவுகளைச் செய்துகொண்டிருக்கும் சிலரைப் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

தீண்டாமை உழைப்பாளிகள் நூலைப்பற்றி மிகச்சிறந்த அறிஞரான அறவேந்தன் அறிவியல் நோக்கில்  மதிப்பீடு வழங்கியிருக்கிறார்.

மாலதி மைத்ரி கடல் ஒரு நீலச்சொல்  என்னும் நூலைப் புத்தலைக் கவிஞரான வினோதா அவருக்கே உரிய மொழி ஆளுமையோடு அருமையான ஓர் அறிமுகத்தை வழங்குகிறார். மாலதி மைத்ரி கவிதைக்குள்  உள்ளே ஆழந்து சென்று, இருக்கும் ஆன்மாவை வெளிக்கொண்டு வரும் பயணத்தில் மாலதியைத் தொடர்ந்திருக்கிறார்- வினோதா புதிய திசைகளில் வேறு யாரும் பயணம் செய்யாத மொழியாடல் வெளிகளில் தம் தேடலை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் -  அவருக்கு ஏற்ற ஒரு பயண வெளியாக மாலதி மைத்ரி அமைந்திக்கிறார். நூல்களைப் பற்றிய மதிப்பீடு -அறிமுகம் என்பதாக ஆறு  கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளும்  அவரவர் தளங்களில் செழுமை பெற்றுள்ள தரமான ஆய்வாளர்களால் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்த இதழில் நவீன கவிதைகளுக்கும் சிறப்பிடம் அளிக்கப்பட்டிருக்கின்றன.  மாயா ஆஞ்சலு வின் ஒரு கவிதை தமிழாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

கவிதைகள் ஒவ்வொன்றும் புதுவகையான மொழியாடலுடன்  கருத்தாடலுடன்  தனித்தன்மை பெற்றதாக அமைந்திருக்கின்றன.

எதிர்காலத்தில் தமிழ்க் கவிதை உலகில் புதிய அலைகளை உறுதிப்படுத்தக் கூடிய வீச்சு அலைகளாக நான் அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கும் பூபாலன், அம்சப்பிரியா, சங்கமித்ரா, கானகநாடன், மணிமொழி  கவிதைகளை இந்த இதழிலும் நான் பார்க்கிறேன்.   வினோதா கவிதை காணவில்லையே என்று நினைக்க நினைக்க அவருடைய நூல் மதிப்புரையே கவிதைதானே என்றும் மறு மொழியும் கூடவே வந்தது. 

கண்ணன் என் ஆய்வு என்று கனல்வனன் எழுதிய கவிதை போன்ற ஒரு எழுத்துரை மிகுந்த சூடாக வெப்பம் மிகுந்த சொற்களோடு வெளி வந்திருக்கிறது -  உண்மை எப்போதும் சுடும் – இங்கே சற்று அதிகமாகச் சுடுகிறது – சூடு தெரியாமலே கொதிக்கக்கொதிக்கச் சூடு வைக்கும் எழுத்துக் கலையைக் கைவரப்பெற்றிருக்கிறார் கனல் வனன்.

இராகுலனின் கவிதை பற்றி காளிமுத்து எழுதிய சிற்றுரை  சுருக்கமாக இருந்தாலும் அழுத்தமாகப் பதிகிறது.

என் மீளல் பார்வை மகிழ்விற்காக  நான்கு கவிதைகளைக் குறித்து வைத்திருக்கிறேன்.

=============================

ஊர்கூடித் தேர் இழுத்தல் என்பது போல – ஆசிரியர்குழு பதிப்பாளர்குழு என்று பன்னிரு இளைஞர்கள் புதிய கனவுகளோடு - சிறகுகளை விரித்திருக்கிறார்கள் - ஆய்வுகளம் படைப்புக் களம் இரண்டிலும் தம் அழுத்தமான முத்திரைகளைப் பதிக்கிறார்கள்.

அவர்கள் பறத்தல் மிகச் சிறப்பாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

 


 

கவிஞர் றாம் சந்தோஷ், குப்பம்

வெட்சி இதழ் கிடைத்தது. தமிழ் கல்விப் புல மாணவர்கள் கொண்டுவரும் இதழ். என்னை ஆச்சரியப்பட வைத்தது இதழ். ஆராய்ச்சி, படைப்பு மட்டுமில்லாது, திருநங்கையர் – மாற்றுப் பாலின எழுத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளமை. நிஜமாகவே தமிழ்த்துறை மாணவர்கள் கொண்டுவரும் இதழ்தானா?? கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். மகிழ்ச்சி அளித்தது. இவ்விதழில் இரண்டு திருநங்கையர் தொடர்பான பனுவல்கள் வெளிவந்துள்ளன, திருநங்கை பிரியாபாபு எழுதியவை. அதில் என்னை மேற்கொண்டு ஆச்சரியப்படுத்திய தகவல் இது (இதில் திருநங்கையர் குறித்துத் தமிழ்ப்புல ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை சேர்த்துக் கொள்ளவும்)

மாணவர் படைப்புகள் இன்னும் தீவிரமும், செழுமையும்பட வேண்டும். அன்பான வாழ்த்துகள் மாணவ நண்பர்களுக்கு…

வெள்ளி, 20 நவம்பர், 2020

பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு விழா கருத்தரங்கம் - 2020

 


நிகழ்ச்சித் தொகுப்பு

தமிழ் - ஜப்பானிய ஒப்பியல் அறிஞர் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நூற்றாண்டினையொட்டி வெட்சி இதழ், கடந்த ஆகஸ்ட் 23, 24, 25 ஆகிய மூன்றுநாட்கள் இணையவழிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் தமிழ் - ஜப்பானிய ஒப்பாய்வில் ஈடுபட்டுவரும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் தங்களின் கருத்துரைகளையும் ஆய்வுரைகளையும் வழங்கினர்.

தோக்கியோவில் 1919 ஆகஸ்ட், 23 இல் பிறந்தவர் சுசுமு ஓனோ. டோக்கியோ பல்கலைக்கழகத்தில் மொழியியலில் பட்டம் பெற்றவர். கக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1950களில் ஜப்பானிய மொழியின் தோற்றம், வேர் குறித்த ஆய்வில் நாட்டம் கொண்ட பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள் ஆஸ்திரினேஸ்ய மொழி, கொரிய மொழிகளுடன் ஒப்பீடு செய்து பார்த்தார்.  ஆனால் அதில் அவர்க்கு நிறைவு இல்லாத படியால் அவரின் கவனம் திராவிட மொழிகளின் பக்கம் திரும்பியது.  A Dravidian Etymological Dictionary என்ற நூலின் துணையோடு யப்பானிய சொற்களை ஒப்பிட்டுப் பார்த்து, தமிழ் - ஜப்பானிய ஒலி - சொல் - தொடர் - பொருள் என்ற அடிப்படையில் ஆய்வினைத் தொடர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பொற்கோவின் வழிகாட்டலில் இந்த ஆய்வு தீவிரம் கொண்டது. சென்னை வந்து பொற்கோவிடம் முறையாகத் தமிழ்க்கற்றுக் கொண்டார். 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் The Relationship of the Tamil and Japanese Languages என்ற கட்டுரையை வழங்கினார். தமிழ் - ஜப்பானிய ஒப்பாய்வில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரையாகவும், தொடக்கமாகவும் இதனைக் குறிப்பிட வேண்டும். ஒலி - சொல் - பொருள் ஒப்புமையுடைய 300 மேற்பட்ட சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டினார். இச்சொற்களில் பெரும்பாலான சொற்கள் அரிசிப்பண்பாட்டை முதன்மைப்படுத்தியிருந்தன. அவருடைய ஆய்வுக்கு அங்கிருந்த அச்சு ஊடகங்கள் துணைநின்றன. ஆகையால் ஆய்வு குறித்த செய்திகள், கட்டுரைகள் தொடர்ச்சியாக இதழ்களில் வெளியாகவே மக்களும் அறிந்துகொண்டதோடு ஆர்வமும் காட்டினர். அவரின் ஒப்பாய்வுக்கு ஆசகி, கெங்கோ போன்ற இதழ்கள் துணைநின்றன. பண்டைய தமிழ் மற்றும் பண்டைய யப்பானிய சொற்களை முதன்மைப்படுத்தியே ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகச் சங்க இலக்கியத்திற்கும் யப்பானிய செவ்விலக்கியமான மன்யோசுவிற்குமான இலக்கிய அடிப்படையிலான ஒப்பாய்வும் முதன்மைபெற்றது. அவரோடு ஈழத்துத் தமிழறிஞர்கள் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ், அவரின் துணைவியார் மனோன்மணி ஆகியோர் இவ்வாய்வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவரோடு கக்சுயின் பல்கலைக்கழகத்தில் ஆய்வினைத் தொடர்ச்சியாக மேற்கொண்டனர். மொழி அடிப்படையில் நிகழ்ந்த ஆய்வு, இலக்கியம், பண்பாடு, தொல்லியல் தளங்களில் விரிவடைந்தது.

          பொங்கல் விழாவிற்கும் யப்பானியப் புத்தாண்டுக்குமான ஒற்றுமைகளைப் பேராசிரியர் ஓனோ விளக்கினார். தமிழகத்திற்கு நேரிடையாக வந்து களப்பணி வாயிலாகப் பெற்ற தரவுகளைக் கொண்டு யப்பானிலும் தைப்பொங்கல் என்ற கட்டுரையை வெளியிட்டார். பொங்கலுக்கும் யப்பானியப் புத்தாண்டுக்குமான 17 ஒற்றுமை நிலைகளைப் பட்டியலிட்டார். பொங்கலோ பொங்கல் என்று ஒலிக்கும் வழக்கம் யப்பானில் புத்தாண்டில் வைக்கப்படும் பொங்கலின்போது ஹொங்கரா ஹொங்கரா என்று ஒலிக்கப்படுவதையும் அது பொங்கலோ பொங்கல் என்று வழங்குவதின் திரிபு என்பதை மொழியியல் அடிப்படையில் விளக்கியது முக்கியமான ஆய்வாகும்.

தமிழ் - ஜப்பானிய ஒப்பாய்வு தொல்லியல் அடிப்படையிலும் ஒப்புமை கொண்டிருப்பதை அறிந்த ஓனோ, பேராசிரியர் கா.ராஜன் போன்றோரின் உதவியுடன் தொல்லியல் படிப்பினையும் கற்றார். எல்லா வகையிலும் தன்னை ஆய்விற்காகத் தகுதிப்படுத்திக் கொண்டார்.  மண்தாழிகளில் பெயர்பொறிக்கும் வழக்கம், நடுகல் வழிபாடு, இயற்கை வழிபாடு, தாழிப்பண்பாடு போன்றவற்றில் உள்ள இருபண்பாட்டு ஒற்றுமைகளை எடுத்திக் காட்டியுள்ளார் ஓனோ.

இவரின் ஆய்வுகள் குறித்து பல மேலைநாட்டு ஆய்வாளர்கள் வரவேற்று எழுதியுள்ளனர். “ஜப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்.” என கமில் சுவலபிலும், “ஓனோவின் எடுகோளாகிய தமிழ் யப்பானிய உறவு வெறும் தற்செயல் அல்லது ஓர் இடர்நிகழ்வு அல்ல.” என யொரெஸ்லாவ் வாச்செக்கும் வரவேற்று எழுதியுள்ளனர்.

இந்த ஒப்பாய்வு தொடர்பான நூல்கள் யப்பானில் பல இலட்சம் படிகள் விற்பனையாகியுள்ளன. யப்பானில் ஓர் ஆய்வுநூலுக்குக் கிடைத்த வரவேற்பு நமது சூழலில் அவ்வாறு வரவேற்கப்படுவதில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விடயமாகும். 

தன் வாழ்நாள் முழுதும் இந்த ஆய்வில் ஆர்வங்கொண்டிருந்த ஓனோ அவர்கள் 2008 ஆம் ஆண்டு காலமானார். 40 ஆண்டுகாலமாக அவரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வு இன்றும் தொடர்கிறது என்பதில் பெருமை மட்டுமல்ல, இன்னும் தமிழ் ஆய்வாளர்கள் கவனமும் தீவிரமும் காட்டவேண்டும் என்பதுதான் இந்நூற்றாண்டு விழாவின் நோக்கமாக உள்ளது. துடிப்பான ஓர் இளந்தலைமுறை ஆய்வாளர்கள் புத்தொளி பாய்ச்சிட முன்வர வேண்டும். அதற்கு அவரின் ஆய்வுகள் வழிகாட்டுதல்களாக அமையும்.

கருத்தரங்கின் முதல்நாள் முனைவர் சிவராமன், திருமதி பிரசன்னகுமாரி ஆகியோர் சிலப்பதிகார மங்கலவாழ்த்துப் பாடி நிகழ்வினைத் தொடங்கி வைத்தனர். நூற்றாண்டு விழாவினையொட்டி இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1.     பேராசிரியர் சுசுமு ஓனோவின் ஆய்வுகளையும் அதனையொட்டி நடைபெற்ற தமிழ் - ஜப்பானிய மொழி, இலக்கண, பண்பாட்டு, தொல்லியல் ஒப்பாய்வுகளைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மொழியியல், ஒப்பிலக்கியம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய பாடத்திட்டத்தில் ஒருபகுதியாக இணைக்கப் பேராசிரியர்கள் முன்வருதல் வேண்டும். பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் மொழிபெயர்த்த ஜப்பானியக் காதற்பாடல்கள் தொகுதி 10, 11 ஆகியவற்றுள் ஒருசில பாடல்களை மொழிபெயர்ப்புப் பகுதியில் இணைத்து மாணவர்களுக்குக் கற்பிக்கலாம். அதனையொட்டி மாணவர்களுக்குக் கீழைத்தேய இலக்கிய, பண்பாட்டு மரபுகளையும் அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகள், தனித்தன்மைகள் குறித்த ஆய்வில் ஈடுபடுவதற்கு வாய்ப்பாகவும், மேற்கொண்டு சமஸ்கிருத, பிராகிருத, பாலி, சீனம், கொரியம், திபெத்திய மொழிகளின் ஊடாக இலக்கியங்களை ஒப்பாய்வு செய்யவும் வழிவகைகள் ஏற்படும். 

2.     தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வில் பேராசிரியர் சுசுமு ஓனோவோடு இணைந்து ஆய்வுகளை நிகழ்த்திய ஆய்வாளர்களின் உரைகள் தொகுக்கப்படும், ஆய்வின் அடுத்தக்கட்ட தேவை, முன்னெடுப்புகள், இலக்கிய ஒப்பாய்வுகள், பண்பாட்டு ஒப்பாய்வுகள், சமூக உறவுகள், தொல்லியல் ஆய்வுகள் குறித்து நேர்காணல்கள் (ஒலி  ஒளி - உரை வடிவங்களில்) செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படும்.

சென்னைப் பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தரும் தமிழறிஞருமான பேராசிரியர் பொற்கோ, “தமிழ் - ஜப்பானிய ஒப்பாய்வு இன்றும் இனியும்” என்ற பொருண்மையில் சுசுமு ஓனோவின் கருதுகோள், அந்த ஆய்வின் மீதான நம்பகத்தன்மை மேலும் இந்த ஆய்வை வலுப்படுத்துவதற்காக இளம்தலைமுறையினர் அக்கறை செலுத்த வேண்டியதன் தேவை ஆகியவற்றை உள்ளடக்கி உரையாற்றினார். இது இன்றைக்கு அவசியம் தொடர வேண்டிய ஆய்வு என்று வலியுறுத்தினார்.

அடுத்து, “சுசுமு ஓனோவின் ஆய்வு வளர்ச்சியும் அதில் எங்கள் பங்களிப்பும்” என்னும் பொருண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தகைசால் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் உரையாற்றினார். ஆய்வின் வளர்ச்சிநிலைகளை ஐந்து கட்டங்களாகப் பகுத்து அவற்றின் போக்குகளை விரிவாக எடுத்துக்காட்டினார். தாழிப்பண்பாடு தமிழகத்திலிருந்து ஜப்பானுக்குக் கடல் நீரோட்டம் வழியாக வந்திருக்க வேண்டுமென கடலோடி ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளதையும், மேலும் இந்த ஆய்வுக்கு புவியியலும் மொழியியலும் ஒருங்கிணைந்த ஆய்வு வளரவேண்டும் எனக் குறிப்பிட்டார். தமிழ் - ஜப்பானிய ஒப்பியலாய்வின் மீதான மீள்ஆய்வுகள் தொடர வேண்டியுள்ளதை வலியுறுத்திப் பேசினார். இவரின் உரையை அடுத்து கக்சுயின் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், “ஜப்பான் - மன்யோசு செவ்வியல் இலக்கியத்தைக் கற்கத் தொல்காப்பியம் ஒரு திறவுகோல்” என்ற பொருண்மையில் மன்யோசு இலக்கியத்தைத் தொல்காப்பியத்தின் துணையோடு எளிதில் பொருள்கொள்ளும் முறையையும், தொல்காப்பியம் - சங்க அகஇலக்கியம் - மன்யோசு காதற்பாடல்களின் இணைவுகளையும் கற்பதற்கான சில வழிமுறைகளை வரையறுத்தும் சான்றுகளோடு எடுத்துக்காட்டிப் பேசினார்.

இரண்டாம் நாள் நிகழ்வினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் முனைவர் ஸ்ரீ. நாகபூஷணி அரங்கராஜ், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடித் தொடங்கி வைத்தார். இரண்டாம் நாள் அமர்வில் மலாயப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் குமரன், “தமிழ் - ஜப்பானியப் பண்பாட்டுறவு” எனும் பொருளில் உரைநிகழ்த்தினார். பண்டைய ஜப்பானிய இலக்கியங்களான கொஜிகி, நிகொன்சொகி, மன்யோசு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பழந்தமிழ்ப் பண்பாட்டு மரபுகளை இணைத்து ஒப்பிட்டுப் பேசினார். அவருடைய ஆய்வுரையில் மானுடவியல், தொல்லியல் போன்ற அறிவியல் துறைகள் இந்த ஆய்வோடு இணைய வேண்டும் என வலியுறுத்தினார். அடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் திருமதி. செல்வ அம்பிகை நடராஜன், சங்க அகப்பாடல்களிலும் யப்பானிய மன்யோசு காதற்பாடல்களிலும் இயற்கை - ஓர் ஒப்பாய்வு எனும் பொருண்மையில் இவ்விரு மரபுகளில் காணப்படும் இயற்கை வெளிப்பாட்டு முறைகளைப் பகுப்பாய்வு செய்து விளக்கினார்.

  மூன்றாம் நாள் முனைவர் சிவராமன், திருமதி பிரசன்னகுமாரி ஆகியோர் பரிபாடல், திருப்புகழ் பாடி நிகழ்வினைத் தொடங்கி வைத்தனர். தொடக்கமாகப் பச்சையப்பன் கல்லூரியின் முன்னைத் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.இராம.குருநாதன், “சங்க இலக்கியப் பின்னணியில் மன்யோசு பாடல்கள் : கையறுநிலைப் பாடல்களை முன்வைத்து” எனும் பொருண்மையில், அகஇலக்கியங்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளைக் கடந்து புறப்பாடல்களில் காணப்படும் ஒற்றுமைகளைக் கண்டறியும் தன்மையில் கையறுநிலைப்பாடல்களைக் கொண்டு ஒப்பிட்டுக் காட்டிப் பேசினார். அடுத்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் - ஜப்பானிய ஒப்பாய்வில் முனைவர்பட்டம் பெற்ற முனைவர் இரா.இரம்யா, “கூற்று அடிப்படையில் குறுந்தொகை, மன்யோசு தொகுதி பத்தின் பாடல்கள் : ஓர் ஒப்பீடு” எனும் பொருண்மையில் கூற்று அடிப்படையில் உணர்வுநிலை சார்ந்த நிலைகளைப் பகுப்பாய்வு செய்து விளக்கினார். இறுதியாக, ஆய்வாளர் நி.கனகராசு, “ஐங்குறுநூறும் மன்யோசு காதற்பாடல்களும் : தொல்காப்பியச் செய்யுளியலை முன்வைத்து” என்னும் பொருண்மையில், வடிவம், உள்ளடக்கம், உத்தி என்று பகுப்பாய்வு செய்து இவ்விரு மரபுகளையும் ஒப்பிட்டுக் காட்டி, கருப்பொருட்கள் பெறும் சமூகப் பண்பாட்டு மதிப்புகளை எடுத்துக்காட்டினார்.

வெட்சி இதழுக்கான திணைக்களம் ஒருங்கிணைத்த முதல் கருத்தரங்கில் ஏரளமான பேராசிரியர்கள் தொடக்கநாள் முதல் இறுதிநாள் நிகழ்வுவரை கலந்துகொண்டு விவாதங்களை ஏற்படுத்தி கருத்துரைகளை வழங்கினர்.  

இந்நிகழ்வு சிறப்புற நிகழ்ந்தேற பலவழிகளில் உறுதுணையாக நின்ற பேராசிரியர்கள், நண்பர்கள், ஆய்வாளர்கள் குறிப்பாக, தமிழ்சங்கர், சிபி நந்தன் ஆகியோர்க்கும் தொழில்நுட்ப உதவிகள் புரிந்து இணையவழிக் கருத்தரங்கை நடத்தித் தந்த த.க.தமிழ்பரதன், ஆசைமணி ஆறுமுகம் ஆகியோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சித் தொகுப்புகள் சீர்செய்யப்பட்டு விரைவில் வெட்சி இதழ்த் திணைக்கள வலையொளியில் பதிவேற்றப்படும்.

அன்புள்ள,

வெட்சி இதழுக்கான திணைக்களம்

வெள்ளி, 31 ஜூலை, 2020

பெண்கவிஞர்களின் பெண்மொழிப் புனைவுகள் - முனைவர் இரா.தமிழரசி

நிகழ்வு - 7

30-07-2020, மாலை 6.00 மணியளவில் Google Meet செயலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் இரா.தமிழரசி அவர்கள் பெண்கவிஞர்களின் பெண்மொழிப் புனைவுகள் எனும் பொருண்மையில் உரையாற்றினார். உரையைக் கேட்க..

நிகழ்வு இனிதே நடந்தேற துணைநின்ற நறுநிழல் இராதாகிருஷ்ணன், #இராகுலன், #Asaimani arumugam ஆகியோர்க்கு நன்றிகள். நண்பர்கள் உரை மீதான விவாதங்களை முன்வைக்கலாம்.
வெட்சி நிகழ்வு#7: பெண் கவிஞர்களின் பெண்மொழிப் புனைவுகள் குறித்து முனைவர் தமிழரசி அவர்களின் உ
https://www.youtube.com/watch?v=BKTZTx7woio&feature=youtu.be&fbclid=IwAR2zsGbeXjXDuBFArPLX8phGjaw_KpE_cgL3nn04iEXeDnvAmTKfhFdEprk

புதன், 22 ஜூலை, 2020

கோவை ஞானி காலமானார் - இரங்கற் செய்திக்குறிப்பு

இரங்கல் செய்திக் குறிப்பு

தமிழாய்வுலகின் மூத்த அறிஞரும் போராளியுமான கோவை ஞானி அய்யா இன்று காலை 11.15 மணியளவில் காலமானார். இச்செய்தியறிந்து நமது திணைக்களம் ஆழ்ந்த துயரடைகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே நோயினால் பீடிக்கப்பட்டிற்ற அவரின் பொன்னுடல் இன்று நம்மிடமில்லை. ஆனால் அவரின் ஆன்மா எழுத்துகளிலும் அவரின் நட்புகளிலும் உறைந்திருக்கிறது. நம் கண்முன்னே இயற்கையைப் பேணிய மனிதர், இயற்கையின் அங்கம் நாம் என்பதை உணர்ந்து செயல்பட்ட உயிர்நேயங்கொண்டவர். தமிழை நவீனப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக இயங்கியும் பேசியும் எழுதியும் வந்தவர். மார்க்சியத்தைப் பெரியாரியத்தோடும், நம் அறிவுமரபோடும் இணைத்தவர். சங்க இலக்கியம், தொல்காப்பியம், சித்தர் மரபு, சைவ மரபு ஆகியவற்றை இணைத்து தமிழ்ச்சிந்தனை மரபை நவீனமாக்கியவர். தமிழ் இடதுசாரி ஆய்வுகளின் போதாமைகள் குறித்துப் பேசியவர். மண்ணுக்கேற்ற மரபைப் பேணுவது குறித்து எழுதியவர். தமிழ்க்கல்வி குறித்தும் சிந்தித்து எழுதியிருக்கிறார்.

தமிழ்ச்சிந்தனை மரபின் கொடையான திணைக்கோட்பாட்டை விரிவாக்கம் செய்தவர். அவரின் மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தி ஆய்வுகளைச் செய்ய உதவியவர். பல நூலகங்களுக்குத் தன் நூல்களைக் கொடையாக அளித்தவர். அவர் அடிப்படையில் பள்ளித் தமிழாசிரியர். இலக்கிய அமைப்புகளைக் கோவையில் நடத்தியவர். கவிஞர். நிகழ், தமிழ்நேயம் போன்ற சிற்றிதழ்களை நடத்தியவர். பன்முகங் கொண்ட ஆளுமை.

அவர் தமிழ்ச் சூழலுக்கு அளித்த கொடைகளில் சில, இந்திய தத்துவத்தில் பிரச்சனைகள் (புதுப்புனல் - 2015), மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் (1988), எண்பதுகளில் தமிழ் நாவல்கள் (1994), மார்க்சிய அழகியல் (2002), தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் (2008), செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் (2010), ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் (2012 - புதுப்புனல்), இன்று ஏன் தேவை சங்க இலக்கியம் (தொகுப்பாசிரியர்-2014).

தமிழாய்வில் ஏற்பட வேண்டிய நவீனம், புதியபுதிய முறையியல்கள் குறித்து அக்கறையுள்ளவர்.  

ஒருமுறை நமது குழுவிலுள்ள நண்பர்கள் சந்திக்கச் சென்றிருந்தபோது, நண்பர் ஜவகர் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். எங்களின் ஆய்வுகுறித்தும், ஆர்வம் குறித்தும் எடுத்துச் சொன்னபோது அவர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி முகத்தில் பொலிந்தது. நம்பிக்கையான, ஆர்வமுடைய இளந்தலைமுறையைக் கூடவே வைத்துள்ளீரென பெருமிதம் கொண்டார். எதிர்காலச் சூழல் குறித்தும் கவலைப்பட்டார். வயது பாராது நட்பு பாராட்டுபவர். அவர் எப்போதும் கையில் பகைமுரணைத் தொட்டதில்லை. நட்புமுரண் அவரின் வலிமை.

            நம்மிடமுள்ள ஊக்கமும் நம்பிக்கையெல்லாம் அவரின் எழுத்துகள்தான். அதனைக் கூடுமானவரை எடுத்துச் செல்வோம். வாசிப்போம். விவாதிப்போம்.

உடன்தானில்லை, அவர் நம்மோடே உள்ளார். நாம் அடைகின்ற சுயமரியாதை, பெறுகின்ற இனமானம், அறிவார்ந்த தமிழ்ச்சமூகம், உயிர்நேயம், யாவற்றிலிருந்தும் விடுதலை எங்கும் எங்குமாய் ஞானியே நிறைந்திருப்பார்.

 

வெற்றிடம்

வெற்றிடத்தில்

சில மலர்களை முளைக்கவிடு.

வெற்றிடமும் இப்பொழுது

நான் இல்லாமல்...

என் அருகில் நீ இல்லை

ஆனால்

என் நினைவாக நீ இருப்பாய்

உன் நினைவுகள்

எனக்குள் படுகின்றன.

 

நண்பனே நீ அழுகிறாய்

என்னையும் நினைக்கிறாய்

நன்றி.

எதற்காக நாம் அழுகிறோம்

கூடி நடந்தோம்

நடந்த தடங்களை நினைத்தா

நாம் நடந்து பதிந்த தடத்தில்

என் தடயம் விட்டுப் போனதற்கா

என்னை இழப்பதால்

உன் விழியில் எதையாவது

இழப்பதற்காகவா

எதற்காக அழுகிறாய்

அழ வைக்கிறாய்

சேர்ந்தே நடந்தோம்

சில தடயங்களை விட்டு

இனி முடியுமா

நான் இல்லாமல்

நீ நடக்க வேணும்

 

- கோவை ஞானி

(நன்றி : Pothi கவிதை முகநூல் பக்கத்திலிருந்து)

வெட்சி இதழுக்கான திணைக்களம்

நாள் : 22-07-2020

இடம் : திருவாரூர்


சனி, 18 ஜூலை, 2020

தமிழம் வலை

பொள்ளாச்சி நசன் அவர்கள் தொடங்கிய வலைதளம் 

தமிழ் மரபுசார்ந்த செய்திகளையும் தமிழ்க்கற்றல், கற்பித்தல் தொடர்பான செய்திகளையும் வெளியிட்டு வருகின்றது. நிறைய ஆவணப்படுத்தும் பணிகளை இந்த இணையதளம் செய்துள்ளது. ஓய்வுபெற்ற முதுநிலை பள்ளி ஆசிரியர். தொடர்ச்சியாகத் தமிழ்க் கற்றல், கற்பித்தல் தொடர்பாக இயங்கியும் எழுதியும் வருகின்றார். தமிழம் பண்பலையையும் நடத்தி வருகின்றார். மேலதிக விவரங்களுக்கு https://thamizham.net/.

தொடக்கநிலையினர்க்கான தமிழ்க்கற்றல் கையேடு http://www.thamizham.net/translate/view%20english.pdf

தமிழம் பண்பலையைக் கேட்க. http://www.thamizham.net/thamizhamfm.htm

திருக்குறளைப் படிக்க, இசைவடிவில் கேட்க http://www.thamizham.net/tkl300/index.html

தமிழ்ச் சிற்றிதழாளர்களின் விவரப் பட்டியல் http://www.thamizham.net/ith


azh/editorphoto/editor.htm

கா. கிரா கவிதைகள்


1

மீண்டெழுந்த இரவுகளில்

மாண்டுபோன கனவுகள்

மாறுதலைத் தேடித்தேடி

மர்மங்கள் பலகண்டு

காய்ந்துபோன காலங்களில்

ஓய்ந்துபோன நேரமென

தீர்ந்தழுத தீர்வுகளால்

அடையாளம் காணாதுபோன விதைகள்

இன்னும் மீளத்துடிக்கிறது

மீண்டும் அந்த இரவுகளில்!

(வெட்சி - 2018)


2

ஆதரவு இழந்த ஏடுகள்

அடையாளம் காணாது கிடக்க

அவிழ்ந்துபோன என் கால்கள்

அந்தரமாகத் தொடங்கின

மண்ணகன்ற சோலை

மாரழைத்தபடி மந்திரம் பாடியது

மாலை வண்ணம் மனமழைக்க

ஏடு அவிழ்ந்த கோடுகள்

நிழல் அவிழத் தொடங்கியதும்

அவிழ்ந்துபோன கால்களாலேயே

அவிழ்ந்துபோனது என்ஏடுகள்

 

(மார்ச் - மே 2019 பருவஇதழ்)

 

3

வேர் தொலைத்த கனவுகளுக்கு வண்ணம் பூச

ஈரக்குருதிகள்

கற்பனைக் களத்தில் புலம்பிக் கிடக்கின்றன

கருவுற்ற நினைவுகள் 

குருதியின் வாசனையில் 

முறிந்த விழுதுகளாய்க் கிடக்க

உணர்வுகளை மீட்டெடுக்க

குருதிகளுமில்லை, நினைவுகளுமில்லை

கனவுகள் மட்டும்

ஏதோ ஒரு களத்திற்காக 

மிச்சமாகியே கிடக்கிறது


                    (அக் - டிசம்பர், 2019 பருவஇதழ்) 

வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்

  வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்   இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழல் ப...