வெட்சி காலாண்டிதழ் - கவிதை வாசிப்புக் கலந்துரையாடல் நிகழ்வு - 1 25.04.2020, காலை 11.00 மணியளவில் Zoom செயலி வாயிலாக நடைபெற்றது. ராஜன் ஆத்தியப்பனின் "திணையிலி", சல்மாவின் "இந்தமண் என்னை மூடும் பொழுது", இராகுலனின் "இரண்டாம் இருதயம்", சம்பத்குமாரின் பெயரிடப்படாத கவிதை ஆகிய கவிதைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. படைப்பு இலக்கியத்தையும் விவாத முறைகளையும் வளர்த்தெடுக்கும் விதமாக இதழ் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கூட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தோழமைகள் க.வினோதா, அஜய்சுந்தர், சம்பத்குமார், ப.காளிமுத்து, மணிமொழி, கா.விக்னேஷ், கானகநாடன், வெற்றிச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய பார்வைகளை முன்வைத்தனர்.
இராகுலன் கவிதைகள் குறித்து - ப.காளிமுத்து உரையாடல்
ஒரு படைப்பாளிக்கு கவிதை வசப்படும் சமயத்தில் தன் சிரசின் மீது அமர்ந்திருக்கும் ஓர் அழகிய தொப்பியை அதன் மீது அணிந்து அழகு பார்க்கிறான்... குறை, நிறைகளை நேர்த்தியாக்குகிறான்... பகடி செய்கிறான்... அது காட்டும் திசையில் பயணிக்கவும் செய்கிறான்...ஒரு துரோகத்தையோ, ஒரு சூழ்ச்சியையோ செய்தவனை " உனக்கெல்லாம் இதயம்ன்னு ஒன்னு இருக்குதா இல்லையா...?" என யாரோ ஒருவர் கேட்டுக் கொண்டிருப்பதை நாம் எப்பொழுதாவது எதிர்கொண்டிருக்கக்கூடும்... அப்படியான, மனித ஈரமிக்க உயிராய் இதயம் இருந்து கொண்டுதான் இருக்கிறது...
துடித்துக் கொண்டிருக்கும் அவரவர்களின் இதயம் கூறிக் கொண்டிருப்பதென்ன...? உறவுகளின் மகிழ்வை, ஓர் அபூர்வ காலத்தை, ஒரு மனிதனின் மகிமையை என உணர்ந்துகொண்டும் தான் உணர்ந்தவற்றை அல்லது கண்டுகொண்டதை அதேயளவு பூரிப்போடு யாரிடமாவது கடத்திக்கொள்ள இயலுமா என காத்திருக்கவே செய்கிறது
இரத்தச் சுத்திகரிப்பு, உடலியக்கம் என்பவை ஒருவகையில் இதயத்திற்கு உயிர் இட்ட கட்டளைகள்.. இரண்டாவது இதயத்தின் பயன் யாது? அது புறமிருந்து அகத்தை இயக்குவதாகத் தோன்றுகிறது.. அது சக மனிதன் மீதான, உயிர்கள் மீதான, அன்றாடைய சூழல் மீதான உணர்வுகளைக் கொண்டு துடித்துக் கொண்டிருக்கிறது.. அவைகளையே மூலப் பொருளாகவும் கொண்டு இயங்கச் செய்கிறது..
*************************
கவிதை........
இரண்டாம் இருதயம்
ஒவ்வொருவருக்குள்ளும்
துடித்துக் கொண்டிருக்கிறது
அவர்களது கற்பனைகள் குறித்த
அவர்களது இரண்டாம் இருதயம்
அவர்கள் இறந்தபின்
அது தன் துடிப்பை வேகப்படுத்தி
பிற உடலுக்குள் பொருந்தி இயங்கலாம்
வான்வெளிகளில் தன்
கற்பனையின் திடவடிவத்தைக் கட்டிக்கொண்டிருக்கலாம்
எங்கும் உடலின்றி நிர்வாணமாகவும் திரியலாம்..
- இராகுலன்.
-வெட்சி காலாண்டிதழ் - இதழ் எண் :16.
அது கவிதையில் குறிப்பிட்டவாறு உடல்களற்ற, வெறுப்பற்ற, வஞ்சகமற்ற ஆகச் சிறந்த மனிதத்தையே நிர்வாணத்தின் மேனியாகக் காணலாம்..
இரண்டாம் இருதயம் கவிதை வாசகமனதில் தங்களுக்கான இரண்டாம் இதயம் பற்றி வினா எழுப்புகிறது... அவனைச் சோதித்துப் பார்க்கச் செய்கின்றது.. துடித்துக் கொண்டிருக்கக்கூடும் இல்லையெனில் இரண்டாவது இதயத்தை உயிர்ப்பிக்கத் தூண்டுகிறது.
----------------------------------------------------
அடுத்த கவிதை...
மையத்தில் நான்
தேடுவதற்குள்
பார்ப்பதற்குள்
அறிந்து கொள்வதற்குள்
புரிந்து கொள்வதற்குள்
கற்பதற்குள்
நேசிப்பதற்குள்
அடைவதற்குள்
கடப்பதற்குள்
உணர்வதற்குள்
வெளியேறுவதற்குள்
செத்து விடுகிறேன்.
-இராகுலன்
வெட்சி காலாண்டிதழ் - இதழ் எண்: 16.
இக்கவிதை நிகழ்காலத்தை நினைவு கூறச் செய்கிறது ... தனிமனிதத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, ஒரு வாழ்வை முழுமையாக்கிக் கொள்வற்கு, ஒரு பட்டினியைச் சகித்துக் கொள்வதற்கு, ஒரு தனிமையைக் கடப்பதற்கு என ஒவ்வொன்றிற்கும் செத்துத்தான் போகவேண்டியுள்ளது இம்மண்ணில்...
மரணத்தைப் புரிந்து கொள்வதற்கு மரணித்துத்தான் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை..நெருங்கியிருப்பவர்களின் கடைசிப் பொழுதையோ..யாராவது மரணத்தையோ நினைவுபடுத்தல் போதுமானதாகிறது.. அப்படியான மரணத்தின் ஒத்திகையை அடிக்கடி நிகழ்த்த வேண்டியுள்ளது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக