17.11.2019 அன்று நடைபெற்ற பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 79-ஆவது சந்திப்பில் வெட்சி இதழ் குறித்து மணிமொழி செய்துவைத்தார்.
அவரின் உரை
வெட்சி இதழ் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலக்கிய மாத இதழாகத் தொடங்கப்பட்டு தற்போது இலக்கியக் காலாண்டிதழாக வெளிவருகிறது. தமிழாய்வு உலகில் விளிம்பு நிலையிலிருக்கும் ஆய்வாளர்கள் படைப்பாளர்கள் ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர்களின் படைப்புகளை தமிழாய்வுலகிற்கு வழங்குவதே வெட்சி இதழின் நோக்கமாகும்.
4 ஆண்டுகளாக இந்நோக்கில் செயல்பட்டு தற்போது ஐந்தாமாண்டில் காலெடுத்து வைத்திருக்கிறது வெட்சி.
வெட்சி என்பது மலரின் பெயர். அது கொத்தாக மலரும் ஒரு மலர். தனியாக மலராது. அதேபோல் தான் வெட்சி இதழும். இதில் கவிதை, ஓவியம், கட்டுரை என இலக்கியங்களும் பல்வேறு துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளும் தமிழாய்வாளர்கள், கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்களும் இடம்பெறுகின்றன.
தமிழாய்வுலகில் இன்றைய ஆய்வுப்போக்குகளின் நிலை அனைவரும் அறிந்த ஒன்றுதான். இன்றைய தமிழாய்வுகள் பெரும்பாலும் சுயவிளம்பரங்களாகவும் பிரச்சாரத்தன்மையுடையனவாகவுமே உள்ளன. திரைப்படப் பாடல்களில் நடத்தப்படும் ஆய்வுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சங்க இலக்கிய ஆய்வுகளுக்கோ இலக்கண ஆய்வுகளுக்கோ கொடுப்பதில்லை என்பது வருந்தத்தக்க ஒன்று. சங்க இலக்கியங்களைப் புதுமையோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போக்குகள் மிகவும் அருகியுள்ளது எனலாம். அப்படி தமிழ் சார்ந்த புதுமையான ஆய்வுகளை, பிறதுறை சார்ந்த ஆய்வுகளை ஆய்வாளர்களை அவ்வளவு எளிதில் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.
கவிதை போன்ற இலக்கியங்களிலும் வெளிப்படையாகப் பொருள் புரிவது மட்டுமே கவிதை எனவும் பிறவற்றைக் கவிதையாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலையே பெரும்பாலும் நிலவுகிறது.
வைரமுத்து கவிதைகளை இரசிக்கும் அளவுக்கு மனுஷ்யபுத்ரன் கவிதைகளையோ சுகிர்தராணி கவிதைகளையோ யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களின் எழுத்துகளை ஒரு குறிப்பிட்ட குழு அரசியலுக்குள் அடக்கிவிடுகின்றனர். இத்தகையோரின் எழுத்துகளும் ஆய்வுகளும் புறக்கணிக்கப்பட்ட எழுத்துகளாகின்றன. இதுபோன்ற புறக்கணிக்கப்பட்ட, ஆய்வுலகிற்கு அறியப்படாத எழுத்தாளர்களை, ஆய்வாளர்களை தமிழுலகிற்கு அறியப்படுத்தவே வெட்சி இதழ் முயற்சிக்கிறது. அந்த முயற்சியை ஓரளவு நிறைவேற்றி வருகிறது.
14ஆம் வெட்சி இதழில் இடம்பெற்ற தமிழ் வட்டார வழக்குகளின் ஒப்பியல் அகராதி மிகவும் பயனுள்ளதொரு முயற்சியாக அமைந்தது.
16ஆம் இதழில் உடுக்கையடிக் கலைஞர் மயில்சாமி அவர்களின் நேர்காணல் இடம்பெற்றிருந்தது. இன்றைய நிலையில் பழங்கலைகளுக்கு மதிப்பில்லை; திரைப்படம் போன்றவை மட்டுமே அனைவராலும் இரசிக்கப்படுகின்றன என்றவொரு பொதுக்கருத்து நிலவுகிறது. ஆனால் மயில்சாமி தனது நேர்காணலில், "விஞ்ஞானம் வளர்ந்துள்ள காலகட்டத்திலும் நேரடியாகக் களத்திற்குச்சென்று நிகழ்த்தும் கலைகளை மக்கள் இரசிக்கத்தான் செய்கிறார்கள்";என்று கூறுவதன் மூலம் உண்மை நிலையினை அறிந்து கொள்ள முடிகிறது.
17ஆம் இதழில் என்.தியாகராசன் அவர்களின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது. இவர் 91 வருடங்களாக பூம்புகார் பற்றி ஆய்வு செய்து சங்க இலக்கியங்களில் பூம்புகார் குறித்த செய்திகள் பலவற்றை அடையாளங்கண்டு கூறியுள்ளார்.
இந்த இதழின் மற்றுமொரு ஸ்வாரஸ்யமான கட்டுரை தி.மோகன்ராஜ் எழுதிய 'மொழியமைப்படிப்படையில் நகைச்சுவைத் துணுக்குகள்' என்னும் கட்டுரை. இன்றைய ஆய்வுகளே நகைச்சுவையானவையாக இருக்கும்போது நகைச்சுவையை வைத்தே ஆய்வு செய்திருப்பது வியப்பான ஒன்றாக இருந்தது.
வான்மதி கண்டுமதியிழந்த பறவைமீதமுள்ள உதிரம் கொண்டுவலசை வரத்துடிக்கிறதுஇடியைத்தாங்கும் இறகுகள்ஈரப்பனியைத் தாங்க முடியவில்லைஎஞ்சியுள்ள துடிப்போசையில் நீட்டிப் பாய்கிறதுமின்னல் இமைகள்
என்னும் கவிதை மிகவும் சிறப்பாக இருந்தது. மிகப்பெரும் துன்பம் தாங்கும் இதயம் சிறு புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இக்கவிதை அழகோடு உணர்த்துகிறது.
அதிகாரங்களை மீறி விடுதலை பெற எத்தனிக்கும் குரலாய் ஒலிக்கிறது
சிறைமீண்ட பருவமொன்றில்அணிசேர்க்கும் தும்பிகளின்நிமித்தங்களில் உறைந்திருக்கிறதுபெருவெளியைக் கடக்கும்என் உயிர்ப்பு
என்னும் கவிதை.
இந்த வாழ்வை இரசிக்கபெரிய பிரயத்தனங்கள்தேவையில்லைநீளும்ஒரு பனியிரவுஒரு கோப்பைத் தேனீர்ஒரு நீஒரு நான்ஒருசொட்டுகாதல்ஒரு சாளரம்தனித்த நிலவுஇலேசானதூவானம்இதழ் கசியும் முத்தம்கோர்த்த இரு கரங்கள்யாருமற்ற நெடும்பாதைவழியெங்கும் கொட்டிக்கிடக்கும்மஞ்சள் பூக்கள்இவை போதுமென அதிரூபனேவா கொஞ்சம் வாழ்ந்துதான் பார்ப்போம்இந்த வாழ்வைத் திகட்டாது இரசிக்க...
வாழ்வை மனநிறைவோடு, மகிழ்வோடு வாழ பணமோ வேறெதுவுமோ தேவையில்லை.
ஒருதுளி அன்பிருந்தால் போதும் வாழ்க்கை அழகாகும் என்பதை இக்கவிதை உணர்த்துகிறது
ஆதரவு இழந்த ஏடுகள்அடையாளம் காணாது கிடக்கஅவிழ்ந்துபோன என் கால்கள்அந்தரமாகத் தொங்கினமண்ணகன்ற சோலைமாரழைத்தபடி மந்திரம் பாடியதுமாலை வண்ணம் மனமழைக்கஏடு அவிழ்ந்த கோடுகள்நிழல் அவிழத் தொடங்கியதும்அவிழ்ந்துபோன கால்களாலேயேஅவிழ்ந்து போனது என் ஏடுகள்
கனவுகளைத் தொலைத்து சமூகத்தைத் தொடரும் தனிமை நிறைந்த உயிரின் குரல்
தமிழியல் ஆய்வு, இலக்கியம் என இவற்றுக்கு மட்டுமின்றி சமூகப்பிரச்சனைக்கும் அதன் தீர்வுக்குமான ஆலோசனைகளையும் வெட்சி இதழ் வழங்குகிறது.
தற்போது வந்த இதழில் இந்தித் திணிப்பு குறித்த அண்ணாவின் உரை ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இனி வரும் வெட்சி இதழ்களில் நவீன மார்க்சியம், பெண்ணியம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள், பிறதுறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள், விளிம்புநிலையில் உள்ள திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், பெண் எழுத்தாளர்கள், புலம்பெயர்த் தமிழர்கள் ஆகியோரின் படைப்புகளையும்
சிறுவர் இலக்கியங்கள், மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், அறியப்படாத மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரையும் அறிமுகப்படுத்தினால் இன்னும் சிறப்பான நிலையை இதழ் அடையும்.
------
மனதைக் கவரும் வெட்சி
********************************
கடந்த ஞாயிறு 17.11.2019 அன்று நடைபெற்ற பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 79-ஆவது சந்திப்பில் வெட்சி இதழ் அறிமுகம் செய்யப்பட்டது. தொல்காப்பியர் திருநாள் சிறப்பு இதழாக பதிப்பித்துள்ளார்கள்... துவக்ககால படைப்பாளர்கள் மற்றும் வளரும் படைப்பாளர்களுக்கான அங்கீகாரக் களமாகிறது.. தமிழ்த்துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் தொல்காப்பியம் குறித்தான, மொழி குறித்தான ஆய்வுக்கட்டுரைகளால் நிரம்பியுள்ளது...
அட்டைப்பட ஓவியம், நேர்காணல், கவிதைகள், நூல் அறிமுகம் என மிளிர்கிறது...
நண்பர் கனகராஜ் கல்லூரியில் பயிலும் காலத்தே வெட்சி இதழை சொந்த முயற்சியில் நிறைய மாணவர்களின் படைப்புகளுடன் நண்பர்களோடு இணைந்து நடத்திக் கொண்டிருந்தார்...
கடந்த சில வாரங்களுக்கு முன் அம்சப்ரியா அவர்களின் இல்லத்தில் ஓரிரு ஆண்டுக்குப் பின் வெட்சி இதழைப் பார்த்தேன்... அதே உத்வேகத்துடன் வண்ண அட்டைப் படத்துடன் பெரிய வடிவிலான இதழோடு முன் நிற்கிறார்...நண்பருக்கு இனிய வாழ்த்துகள் ...
இதழை அறிமுகப் படுத்திய பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திற்கு பெரும் மகிழ்வுகள்...
(நன்றி .: ப.காளிமுத்துவின் முகநூல் பதிவிலிருந்து.....)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக