திருநங்கைகள் அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய காலம்நெருங்கிவிட்டது! - தோழர் பிரியா பாபு
திருநங்கைகள் குறித்து அண்மையில் வெளிவந்த திருமகள் குறும்படம் பற்றியான கலந்துரையாடல் நிகழ்வு இன்று (03.05.2020) காலை 11. 00 மணியளவில் நடைபெற்றது. தமிழ்ச்சூழலில் விளிம்புநிலை மனிதர்கள், எழுத்துகள், கலைகள் பற்றிய விழிப்புணர்வு, புத்தெழுச்சி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவானது. அதனூடாக விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய குறும்படங்கள், ஆவணப்படங்கள் வெளிவரத் தொடங்கின. அவர்கள் எழுத்தினைத் தங்களுடைய விடுதலைக்கான ஆயுதமாக எடுக்கத் தொடங்கினர். கதை, நாவல், கவிதை, கலைகள் என்ற வடிவில் தங்களுக்கான குரலை முன்வைத்தனர். அந்த வரிசையில் காட்சி ஊடகங்களும் இன்று முன்னிலைப்படுத்தப்படுகின்றன. திருமகள் குறும்படம் குறித்த அறிமுகத்தை மறுமலர்ச்சி காலத்தில் ஏற்பட்ட புத்தெழுச்சியின் பின்னணியோடு மணிமொழி வழங்கினார்.
பிரியாபாபு அடிப்படையில் திருநங்கை. இவர் சிறு வயதிலேயே தன்னிடம் பெண்தன்மை உள்ளதை உணர்ந்ததன் அடிப்படையில் திருநங்கையாக மாறினார். பிழைப்புத் தேடி தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்குச் சென்றார். அங்கு பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் செய்து பெற்ற பணத்தில் புத்தகங்களை வாங்கி வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. சமுத்திரத்தின் வாடாமல்லி நாவலைப் படித்து, புத்துணர்ச்சி கொண்ட பிரியாபாபுவின் மனதில் நாம் ஏன் போராளியாக மாறக்கூடாது என்ற கேள்வி எழுந்தது. அதன் விளைவாகத் திருநங்கையரின் வாழ்விற்காக நல்ல முன்னெடுப்புகளை முன்னெடுக்கத் தொடங்கினார்.
திருநங்கைகள், திருநம்பிகள் என்றழைக்கப்படும் மாற்று பாலினத்தவர் பற்றிய ஆய்வுகளையும் அவர்களுக்காக தொடர்ச்சியான போராட்டங்களையும் செயல்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்ற தோழர் பிரியா பாபு அவர்கள் மதுரையில் தற்போது திருநங்கைகள் ஆவணக்காப்பகத்தை நடத்தி வருகின்றார். திருநங்கைகளுக்கான கல்வி குறித்த விழிப்புணர்வையும் ஆராய்ச்சிக்கான தளத்தினையும் ஏற்படுத்தித் தரும் இரண்டு முக்கியமான பணிகளை இம்மையத்தின் வாயிலாகச் செய்து வருகின்றார். குறும்படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றார். இவர் எழுதிய நூல்களுள் வெற்றிப்பாதையில் திருநங்கைகள், மூன்றாம் பாலின முகம், அரவானிகள் சமூக வரைவியல் ஆகியன குறிப்பிடத்தக்கன. அவர் இந்நிகழ்ச்சிக்கு நம்மழைப்பையேற்று கலந்துரையாட வந்திருந்தார்.
நண்பர்கள் விவாதித்ததன் அடிப்படையில் தன்னுடைய உரையைத் தொடங்கினார் தோழர் பிரியாபாபு. (திருமகள் குறும்படம் வாழ்வியல் எதார்த்தத்தைப் பேசவில்லை, திருநங்கையர்க்குப் பிள்ளைப்பேறு சாத்தியப்படும் ஒன்றா?, மூன்றாம் பாலினம் குறித்த விவாதம், திருநங்கைகள் குறித்த ஆய்வு, ஆவணக் காப்பகத்தின் பணிகள், திருநங்கையரின் எழுத்துகள், திரைப்படங்களில் திருநங்கைகளை இழிவாகக் காண்பிக்கும் போக்கு, அரசியல் நகர்வுகள் குறித்த விவாதங்கள்) அவருடைய பேச்சின் சுருக்கம்.
திருநங்கைகள் குறித்த பல ஏராளமான படங்கள் அதன் வாழ்வியல் யதார்த்தங்களை பற்றி பேசி இருக்கின்றன ஆனால் திரும்பத் திரும்ப எதார்த்தங்களை பேச வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. திருமகள் குறும்படம் அடுத்தகட்ட நகர்விற்கான முன்னெடுப்பு என்றே கருதுகின்றேன் . இன்னும் ஆழமான வலிகள் எங்களுக்கு இருக்கின்றது. அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். புற பிரச்சினைகளை மட்டுமே பேசுவது குறும்படத்தின் நோக்கமாக இருக்காது. எங்களுக்கான அகப் பிரச்சனைகளையும் அது பேச வேண்டும். அதனை இந்தக் குறும்படம் ஓரளவு நிறைவு செய்திருக்கின்றது .
இக்குறும்படத்தில் வரும் பிள்ளைப்பேறு பற்றி பலரும் பேசுகிறார்கள். நடைமுறை அறிவியல் உலகில் வளர்ந்து வரும் மாற்றங்களினால் இது சாத்தியப்படும் என்று நாங்கள் நம்புகின்றோம். இக்குறும்படத்தில் கருவிலேயே திருநங்கைகளுக்கான கூறு இருப்பதனைக் கண்டறிந்து அதனைக் கருவிலேயே கொல்லும் அறிவியல் குறித்த கண்டுபிடிப்பினை ஒரு மருத்துவர் மேற்கொண்டு வருகின்றார் . அதனைக் கண்டறிந்த ஒரு கருவுற்ற பெண், பேசும் பகுதி முக்கியமான விடயம். பிறப்பினால் யாரும் ஊனம் இல்லை. திருநங்கைகளைக் கருவிலேயே கண்டறிந்து கொல்வது மிகவும் கீழ்த்தரமான மனிதமற்ற செயல். தமிழ்ச் சூழலில் இக்குறும்படம் கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அது பேசுவது ஆழமான பிரச்சனை. பல விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டே இக்குறும்படம் எடுக்கப்பட்டது.
மூன்றாம் பாலினம் என்ற சொல்லாடல் தேவையில்லை. அது மீண்டும் ஆணாதிக்க சமூகத்தையே முன்னிலைப்படுத்தும். திருநங்கை, திருநம்பி, மாற்றுப் பாலினம் என்ற சொல்லாடலே மிகவும் பொருத்தமாக இருக்கும்.
அரசியல் அதிகாரத்தைத் திருநங்கைகள் கையில் எடுக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது. இது அம்பேத்கரின் கொள்கைகள் இதனை பேசுகின்றன. பல அரசியல் இயக்கங்களில் திருநங்கைகள் இன்று அதிகாரத்தில் உள்ளனர். அது இன்னும் வலுப்பட வேண்டும். சட்ட அதிகாரத்தை இயற்றும் இடத்திற்கு வரவேண்டும்.
நான் ஐந்தாறு ஆண்டுகளாகத் தமிழ் சமூகத்தில் திருநங்கைகள் வரலாற்று ஆய்வு என்னும் பொருண்மையில் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றேன். தொல்காப்பியத்திலிருந்தே நமக்கு திருநங்கைகள் குறித்த மாற்றுப்பாலினம் குறித்த பதிவுகள் கிடைக்கின்றன. சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி , பக்தி இலக்கியங்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் போன்றவற்றிலும் ஏராளமான பதிவுகள் உள்ளன . நாட்டார் வழக்காற்றிலும், வழிபாட்டு முறைகளிலும் திருநங்கையர் குறித்த சான்றுகள் உள்ளன. இதனை வரலாற்று நோக்கில் வைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
திரைப்படங்களில் திருநங்கையர் தவறானவர்களாக அடையாளப்படுத்தப் படுகின்றனர். கொச்சை சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அப்பு, ஐ, நர்த்தகி போன்ற படங்கள் அவ்வாறு சித்தரித்துள்ளன. இதனையெல்லாம் கண்டித்து பல போராட்டங்களை நிகழ்த்தி உள்ளோம்.
இந்தியச் சூழலை ஒப்பிடுகையில் தமிழ் சூழல் மிகவும் எங்களுக்குப் பல அரசு சார்ந்த முன்னெடுப்புகளை எடுத்துள்ளது . அதற்குப் பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனைப் பின்புலமுடைய ஆட்சியாளர்களே காரணம் . தன்னெழுச்சியாகவும் திருநங்கையர் பல துறைகளில் இன்று முன்னேறி உள்ளனர் . வட மாநிலங்களை ஒப்பிடுகையில் தென் மாநிலங்கள் எங்கள் விடயயத்தில் வளர்ச்சி அடைந்திருக்கின்றன . இன்னும் நல்ல முன்னெடுப்புகளை எடுப்போம் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.
எங்களுடைய திருநங்கையர் ஆவணக்காப்பகம் இரண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. கல்வி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், திருநங்கையர் குறித்த ஆராய்ச்சி தளத்தினை வலுப்படுத்துதல்.
எங்களுடைய நூலகத்தில் 200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் குறித்த நூல்கள் , 9000 த்திற்கும் மேற்பட்ட செய்தித் தரவுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
எங்களுடைய வலிமிகுந்த வாழ்க்கையை எழுதுவது இன்று எங்களுக்குச் சாத்தியமாகியுள்ளது முகநூல் வருகை எங்களுக்கு நல்ல களமாக இருக்கின்றது. திருநங்கை எழுத்தாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கின்றார்கள், அவர்களுள் ஆஷா பாரதி, ரேவதி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். எங்களுடைய நூல்களுள் விலகும் பனித்திரை, உணர்வும் உருவமும், வெள்ளை மொழி போன்ற நூல்கள் பல கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் உள்ளன. நந்தன், ஜனனம் போன்ற இதழ்களில் எங்களுடைய படைப்புகள் வெளியாகியுள்ளன . இந்திய அளவில் முதன்முதலாக திருநங்கையருக்கென்று மின்னிதழைத் தொடங்க ஏற்பாடு செய்து வருகின்றோம் காட்சி ஊடகத்திலும் எங்கள் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. Transmedia என்ற பெயரில் YouTube channel லைத் தொடங்கியுள்ளோம்.
எங்களுடைய விடுதலைக்காகக் கல்வியை நாங்கள் முன்னெடுத்து இருக்கின்றோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ச்சியாகத் திருமகள் குறும்பட இயக்குனர் ஆண்டிராஜன் குறும்படம் குறித்த தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் . சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற நீயா-நானா நிகழ்ச்சியில் பிரியா பாபுவைச் சந்தித்தேன். அந்நிகழ்ச்சியில் பேசிய பிரியாபாபு "மனதளவில் உடலளவில் ஆணை திருநங்கைகள் மகிழ்வாக வைத்துக்கொள்ள முடியும், என்ன குழந்தை மட்டும் பெற்று எடுக்க முடியாது." என்றார். அப்பேச்சு என்னுள் உந்துதலை ஏற்படுத்தியது. அதனுடைய தாக்கம்தான் திருமகள். எதார்த்தமற்ற படம்தான். ஆனால் நம்பிக்கையோடு எடுக்கப்பட்டுள்ளது. திருநங்கையர்க்கான குழந்தைப்பேறை மையப்படுத்தியே இப்படம் நகர்கின்றது. எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கு நன்றி.
இவ்வாறாக இன்றைய நிகழ்வு நல்லதொரு விவாதக் களமாக அமைந்தது. அடுத்த நிகழ்வில் மீண்டும் உரையாடுவோம்.
நன்றி
அன்புடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக