புதன், 15 ஜூலை, 2020

நூல் அறிமுகம் : மணிமொழி - ஒருதுளி காதல் தேவை

நூல் அறிமுகம் : மணிமொழி

ஒருதுளி காதல் தேவை

            ‘‘சமூகக் குண்டியைக் கழுவி குளிப்பாட்டி, பவுடருக்குப் பதிலாக பிளீச்சிங் பவுடர் பூசி ஒப்பனை பண்ணும் சமூகத் தாய்மாரை, இந்த நன்றிகெட்ட சமூகம், நாயிலும், பன்றியிலும் கீழாக நடத்தும் அவலத்தைச் சித்தரிப்பதே மலர்வதியின் தூப்புக்காரி.’’ என்று நாவலின் முன்னுரையே அதன் ஆழத்தை அழுத்தமாக மனதில் பதிய வைக்கிறது.

            சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளருக்கான விருதுபெற்ற நாவல், தூப்புக்காரி. நாவலின் ஆசிரியர் கன்னியாகுமரியைச் சேர்ந்த மலர்வதி. துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் தூப்புக்காரி.

            இந்நாவல் நாகர்கோவில் மாவட்டத்தையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டது என்பதை இதன் மொழிநடை தெளிவுபடுத்துகிறது. தூப்புக்காரி என்பது வட்டார வழக்குச்சொல். துப்புரவுப்பணி செய்யும் பெண்களை இச்சொல் குறிக்கிறது.

            பீ என்ற வார்த்தையைக் கேட்டாலே முகம்சுழிக்கும் மனிதர்களுக்கு மத்தியில் பீக்குவியல்களையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிய கதைதான் தூப்புக்காரி.

            தனியார் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றும் கனகம், அந்தப் பணியிலிருந்து தன்தாயை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று போராடும் கனகத்தின் மகள் பூவரசி, சமூகக்கட்டமைப்புகளுக்குக் காதலை இரையாக்கும் பூவரசியின் காதலன் மனோ, துப்புரவுப் பணியைப் பெருமையாக எண்ணும் மாரி இவர்களின் வாழ்வியல் முறைகளையும், மனப் போராட்டங்களையும், எண்ணக் குமுறல்களையும் யதார்த்தமான மொழிநடையில் சொல்கிறது நாவல்.

            சூழ்நிலை காரணமாகத் துப்புரவு தொழில் செய்யும் தன் சாதிப் பெண்ணைத் தரக்குறைவாக நடத்தும் மனிதர்களின் மனநிலை ஒருபுறம். வசதி இல்லாத நேரத்திலும் தன்மகளை வேற்று சாதி ஆணுக்கு மணம் முடித்து வைக்கத் தயங்கும் தாயின் மனநிலை மறுபுறம். என இருவேறு நிலைகளைக் காணமுடிகிறது. சாதியக் கட்டமைப்புகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் சமூகத்தின் நிலையைத் தீர்மானித்துக் கொண்டிருப்பதை நாவல் தெளிவாய்க் காட்டுகிறது.

            மனோவிடமிருந்து தொடங்கும் கதை கனகத்தைப் பார்க்கும்போது வேறு கோணத்தை அடைகிறது. அவள் அள்ளும் மலத்தினால் நம்கைகள் கூசுகிறது. தூமத் துணியின் வாடை நம் நாசியையும் துளைக்கத்தான் செய்கிறது. நம்மாலும் எங்கோ ஒருவர் இப்படி பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற உணர்வை வாசகருக்கு அளிக்க ஆசிரியர் மறந்து விடவில்லை. அனைத்து நம்பிக்கைகளும் அற்றுப்போன பின் சமூகத்தின் அழுக்கால் தன் வாழ்வு சுத்தமாகும் என எண்ணி, காரணங்கள் ஏதுமின்றி சமூகத்தால் ஒதுக்கப்பட்டாலும் போராட்டத்தையே வாழ்வாக நடத்திய தன்னால் தன்மகளின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை என்ற ஏக்கத்தில் உயிரை விடும் எண்ணற்ற கனகங்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நாவல்.

            தூப்புக்காரியான தன்தாயை அதிலிருந்து வெளிக்கொண்டுவர எண்ணும் எதார்த்தவாதியாகத்தான் பூவரசியைக் காணமுடிகிறது. காதல் என்ற பெயரில் மனதையும் உடலையும் இழந்து, ஆணாதிக்கச் சமூகத்தில் வசைபெற்று வாழும் சராசரிப் பெண்ணாகக் காட்டப்படும் பூவரசி கதையின் முடிவில்தான் நாயகியாகத் தெரிகிறாள்.

            தாயின் இறப்புக்குப் பின்னர் தானும் தூப்புக்காரியாக மாறிய பூவரசியின் நிலையை எண்ணி வருந்தாமல் நம்மால் நாவலைக் கடக்க முடியவில்லை. அழுக்குகளோடு தன்மகளை வளர்த்து அழுக்கிலிருந்து அவளை உயர்த்த வேண்டும் என்ற பூவரசியின் எண்ணம் ஆயிரம் கனகங்களை நம்கண்முன் நிறுத்துகிறது. காதலின் பெயரால் கற்பை இழந்த ஆண், சமூகத்தில் எவ்வித பாதிப்புமின்றியும், கற்பை இழந்த பெண், இறுதிவரை இழிசொல்லோடும், துயரங்களோடும் வாழும் நிலையை நாவல் கூறுகிறது. 

            மாரியின் கதாப்பாத்திரம் தான் நாவலை வேறொரு கோணத்திற்குக் கொண்டு செல்கிறது எனலாம். சமூகத்தின் அழுக்கைச் சுத்தம் செய்யும் வேலையைப் பெருமையாக எண்ணுபவன் மாரி. சமூகத்தின் அழுக்கைச் சுத்தம் செய்பவர்களை அழுக்கு என்று சொல்லி ஒதுக்கி வைப்பதுதான் கொடுமை என்று, தன்னை ஒதுக்கி வைப்பவர்களைத் தைரியமாகச் சாடுபவன் மாரி. அழுக்காக இருப்பவர்களின் மனம் சுத்தமானது என்பதை மாரி இந்நாவலில் உணர்த்துகிறான். காதலால் ஏமாந்த பூவரசியை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்கிறான். அவளை மட்டுமின்றி அவள் குழந்தையையும் ஏற்றுக்கொண்டு அதைச் சமூகத்தில் உயர்த்த ஆசை கொள்கிறான்.

            சமூகக் கட்டமைப்புகளை மீறி செயல்பட முடியாத ஒருவனாக மனோ காட்டப்படுகிறான். கதையின் தொடக்கம் முதல் முடிவு வரை தன் ஆசைக்காக வாழமுடியாத, தன் எண்ணங்களை வெளியே சொல்ல முடியாத, அழுகின்ற தன்மகளை அணைத்துக் கொஞ்ச முடியாத சமூகத்திற்குப் பயந்த சராசரி மனிதனாகவே மனோ பயணிக்கிறான்.

            இந்த நான்கு பாத்திரங்களின் மூலம் சாதிய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஆணாதிக்கம், விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை நிலை ஆகியவற்றின் சாரங்களை நாவல் எடுத்தியம்புகிறது.

            ஈக்களிலும், புழுக்களிலும், நாற்றத்திலும் உழைத்து வாழ்வாதாரம் தேடும் மனிதர்களுடன் ஒருநிமிட நேரமாவது சென்று அமரும் மனிதநேய உணர்வைச் சமூகத்திற்கு அளித்திருக்கிறாள், தூப்புக்காரி.

            நம்மைச் சுத்தம் செய்ய, நம் அழுக்கோடு ஊறி, அழுக்காய் மாறி வாழும் மனிதர்களை, கண்ணில் அருவருப்போடு ஏளனமாய்க் கடந்து செல்லும் ஒவ்வொருவரின் பார்வையையும் தூக்குக்கயிற்றுக்கு இரையாக்குகிறாள், தூப்புக்காரி. 

            வாழ்க்கை என்னும் பயணத்தில்

            சறுக்கி விழும் போதும்

            தனியே தடுக்கிவிழும் போதும்

            சாய்ந்துகொள்ள

            ஒருதுளி காதல் தேவை.

            நம் ஒரு துளிக் காதல் துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வை மாற்றுமா எனத் தெரியாது. அவர்களின் துயரையேனும் மாற்றட்டும்.

           பெயர்  : தூப்புக்காரி

           ஆசிரியர் : மலர்வதி

           வெளியீடு : மதிபுக்ஸ்

           முதல்பதிப்பு : 2012

ஏழாம்பதிப்பு : 2017

மொழி : தமிழ்

வகை : நாவல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்

  வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்   இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழல் ப...