தாய்மொழிக் கல்வியின் தேவையைத் தமிழர்கள் உணரவேண்டிய காலமிது. வளர்ந்துவரும் நவீன உலகமயமாதற் சூழலில் ஆங்கிலமோகத்தால் கட்டுண்டு கிடைக்கும் தமிழர்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், வருங்கால தலைமுறையினர் தன்னுடைய தாய்மொழியில் எளிதில் உரையாடுவதற்கான சூழலை அமைத்துத் தருவது குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் குழந்தைகளினைத் தமிழ் வழியில் கற்க வைப்பதும், தனி அக்கறை எடுத்து குழந்தைகளுக்குத் தமிழைக் கற்றுத்தருதலாகும்.
தமிழர்கள் தங்களுக்கான தனித்துவத்தையும், மரபையும் உணர வேண்டிய
நேரமும் இது. இன்றைய நடுவண் அரசாங்கம் செய்து வரும் வடமொழித்திணிப்பு, தொல்லியல் ஆய்வுகள்
முடக்கம், செம்மொழி நிறுவனத்தினை முடக்க நினைப்பது போன்ற தமிழ்மொழி அழிப்புப் பணிகள்
ஒருபுறம். தமிழர்களே தமிழ்மொழிக் கல்வியை உணராது இருப்பது ஒருபுறம் எனத் தமிழ்ச்சூழல்
மோசமாக இன்று முகம்சுழிக்க வைக்கின்றது.
தமிழ் ஆராய்ச்சிப் பணிகளும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.
முன்பெல்லாம் (1900களில்) ஆராய்ச்சி நூல் ஒன்று வெளிவருகின்றது என்றால், தமிழ், தமிழர்
வரலாற்றில் எந்தவித அரசியல், சமுதாய, வரலாற்றியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது,
முன்னைய தமிழ்மரபின் தொன்மை, புதிய வாழ்விற்கான வழியென்ன? என்பது குறித்தான ஆர்வத்தைத்
தூண்டுவனவாய், எதிர்பார்ப்புகளையும் பரபரப்புகளையும் கொண்டிருப்பதாய் விளங்கின. ஆனால்,
இன்றைய ஆராய்ச்சியின் நிலையென்ன? நான்கு நூல்களைக் கையில் எடுத்துக் கொண்டு அதிலொரு
இரண்டு வரி, இதிலொரு நான்கு வரி என்று தொகுத்தும், மற்றவர்களின் கருத்தையே தன்னுடைய
ஆராய்ச்சிக் கருத்தாகத் திருடி, ஆய்வியல் பட்டத்தினைப் பெற்றுச் செல்லும் அவலநிலையில்
இருந்துகொண்டு இருக்கின்றது. கருத்துத் திருடல்கள் பெருகிபோய்விட்ட காலத்தில் இருக்கும்
நமக்கு விரல்விட்டு எண்ணும் அளவே அரிய ஆய்வு நூல்கள் வெளிவந்துகொண்டுள்ளன. இந்த அவலங்களை நாம் உணர்ந்து, நம்மை நாமே மாற்றிக்கொள்ளவதற்கானத்
தீர்வினை நல்குகின்றது பேராசிரியர் கி.நாச்சிமுத்துவின் ‘உலகம் தேடும் தமிழ்’.
தமிழறிஞர் வ.அய்.சுப்பிரமணியம், ச.வே.சுப்பிரமணியம் ஆகியோரின் சிந்தனைப் பள்ளியில் வளர்ந்தவர் பேராசிரியர் கி.நாச்சிமுத்து. தமிழ் இலக்கியக்கல்வியை இலக்கணம், அகராதியியல், மொழியியல், ஒப்பியல், மூலபாடத்திறனாய்வு, வரலாறு, மொழிபெயர்ப்பு என்ற துறைகளோடு இணைத்துக் கற்பிக்கும் முறையைப் பின்பற்றுபவர். இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள், தமிழ் தந்த சான்றோர்கள், கரையே(ற்)றுங் கருத்துகள், தமிழ் இடப்பெயராய்வு, சோழன் பூர்வபட்டயம் கூறும் கொங்கு நாட்டு ஊர்கள் (பெயராய்வும் வரலாறும்) போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
பேராசிரியர் கி.நாச்சிமுத்து பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் வெளியீடாக 2007 ஆம் ஆண்டில் வந்துள்ளது உலகம் தேடும் தமிழ் எனும் நூல். இந்நூலில் 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
1. செம்மொழி தமிழும் பிற திராவிட மொழிகளும், 2. தமிழ் செம்மொழி, உலக மொழி, வாழும் மொழி இனிசெய்வதென்ன, 3. புத்தாயிரத்தாண்டில் தமிழ் இலக்கியமும் உலகமயமாதலும், 4. ஐம்பதாண்டுகளில் தமிழர் வாழ்வியல் களமாற்றங்கள், 5. சங்க காலத்தில் தமிழ் வளர்ச்சி, 6. ஆங்கிலமயமாதல், 7. தமிழில் வடமொழி கற்பது வேறு, கலப்பது வேறு, 8. தமிழ் உச்சரிப்பு, 9. அகராதி முயற்சிகள், 10. ஜெர்மானிய மொழி படிக்க ஒரு அருமையான அகராதி தமிழ். ஜெர்மானிய உறவுக்கு ஒரு இணையற்ற மொழி உறவுப்பாலம், 11. தமிழியல் ஆய்வு - நேற்று இன்று நாளை, 12. நோக்கு நூல்களின் தேவை (இலக்கியம்)
12 கட்டுரைகளில் பெரும்பாலானவை, தமிழ்க்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், தமிழ்இலக்கியக்கல்வியில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் பேசுகின்றன.
‘செம்மொழி தமிழும் பிற திராவிட மொழிகளும்’ எனும் தலைப்பிலமைந்த கட்டுரை, திராவிட மொழிகளுக்கிடையேயான உறவை மூன்று நிலைகளில் எடுத்துரைக்கின்றது.
1. குடும்ப உறவு, அதனால் உண்டான பொதுமொழி அமைப்பு, இலக்கியப் பாரம்பரியம்.
2. நெருங்கி வாழ்ந்த காரணத்தால் ஏற்பட்ட பரஸ்பரக் கொடுக்கல்
வாங்கல்கள்.
3. மொழிச்சிறுபான்மையினராகவும் பெரும்பான்மையினராகவும் பொது
நிலப்பரப்பில் பொது ஆட்சியில் நெருங்கி ஒத்த மொழிச் சூழலில் வாழ்ந்த அல்லது வாழ்ந்துவரும்
ஒத்துணர்வு.
இந்த உறவுநிலைகளை திராவிட மொழிக்குடும்ப இலக்கியவியலாளர்கள்
உணரவில்லை. இதனால்தான், சங்க இலக்கியம், திருக்குறள் போன்றன தொல்திராவிட இலக்கியங்கள்.
தமிழுடன், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு போன்ற மொழிகள் இணைந்திருந்த காலத்தில்
தோன்றியன என்பதையுணராது, தமிழ் மொழிக்கு மட்டுமே உரிய இலக்கியங்களாகத் திராவிடர்கள்
எண்ணியிருப்பது வருந்தத்தற்குரியவொன்று என்கிறார் ஆசிரியர்.
வரலாற்று ஆய்வாளர்கள் திராவிட மொழிக்கூறுகளைச் சங்க இலக்கியங்களில்
காணக்கிடப்பதை எடுத்துரைத்துள்ளனர் என்றும், திராவிட மொழிகளையும், அவற்றிலுள்ள இலக்கியங்களைக்
கற்பதற்குப் பல்கலைக்கழகங்களில் அண்டை மாநில மொழித்துறைகளை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்துகிறார்
ஆசிரியர்.
‘தமிழ் செம்மொழி, உலக
மொழி, வாழும் மொழி இனிசெய்வதென்ன’, ‘புத்தாயிரத்தாண்டில்
தமிழ் இலக்கியமும் உலகமயமாதலும்’, ‘ஐம்பதாண்டுகளில் தமிழர் வாழ்வியல் கள மாற்றங்கள்’
ஆகிய மூன்று கட்டுரைகளும் தொழில்மயம், தேசியமயம், உலகமயம், பொருளாதாரமயம் என்ற அடிப்படையில்
தமிழர்கள் தமிழ்க்கல்வியையும், மொழியையும் சீரழித்துவரும் அவலங்களைப் பற்றி இயம்புகின்றார்
பேரா.கி.நாச்சிமுத்து.
இன்று பள்ளிக் கூடங்களில் ஆரம்பக் கல்வி முதல் பட்டப்படிப்புகள் வரை தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியைவிட ஆங்கிலக்கல்வியோ அல்லது இந்திவழிக் கல்வியோதான் இருக்கின்றது. ஆட்சிமொழியாகத்தான் தமிழில்லை. அரசு சின்னத்தில்கூட தமிழில்லை. அறிவிப்புப்பலகைகள், புகைவண்டிப் பயணச்சீட்டு, வங்கிகளில் தமிழில்லை. தமிழ்நாட்டிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பெயர்ப்பலகை இருக்க கோரிக்கை வைத்து அதன்மூலம், அவர்கள் பெயர்ப்பலகை வைக்கும் அவலநிலை உள்ளது. நம்முடைய அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குக் கூட அரசாங்காங்களை நோக்கி இருக்க வேண்டியுள்ளது.
நீதித்துறை, சமயத்துறை, வணிகத்துறை, இசைத்துறை, இதழியல் துறை
ஆகிய துறைகளில் தமிழ்மொழியின் ஆட்சியில்லை. எல்லாம் ஆங்கிலமும் இந்தியும்தான். தமிழ்
எங்குதான் இருக்கின்றது அல்லது எங்குதான் தமிழைத் தமிழர்கள் பயன்படுத்துகின்றார்கள்
என்றால், திரைப்படங்கள் போன்ற பொழுபோக்குக் கருவிகளில் மட்டுமே. அறிவுத்தளங்களிலிருந்து
தமிழை விடைபெறச் செய்துவிட்டோம். எந்தவொரு மொழி அறிவு, சிந்தனைத்தளங்களிலிருந்து வெளியேறுகிறதோ,
அந்த மொழி அழிவுநோக்கிச் செல்கின்றது.
நாடு போனால்கூட மீட்டுக்கொள்ளலாம். மொழி போனால் மீட்டுக்கொள்ள
முடியாது என்ற உண்மையைப் போலந்து நாட்டு வரலாற்றைச் சான்றாகக் காட்டுகின்றார் ஆசிரியர்.
123 ஆண்டுகள் நிலப்படத்தில் இல்லாமற் போன நாட்டை, மொழிப்பற்றும் மொழிவழிவந்த இலக்கியப்
பற்றுமே தங்கள் நாட்டை மீட்க வழிவகை செய்தது. யூதர்களும் ஹீப்ரு மொழி வழியேதான் தங்கள்
நாட்டையும் மீட்டனர் என்றும், தென்னாப்பிரிக்காவில் வாழ்கின்ற இந்திய மக்கள் தங்கள்
மொழி அழிந்தால், தங்களுக்கான இருப்பே போய்விடும் என்று கவலைப்படுகின்றார்கள் என தி
இந்துவில் வந்த செய்தியை மேற்கோளாகக் காட்டுகின்றார்.
மசாசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் மெல்லோன் பேராசிரியர்
கென்னத் கெனிஸ்டன் பெங்களுரில் அண்மையில் ஆற்றிய வுரையை மேற்கோள் காட்டு கின்றார்.
அதில், நாட்டுமொழிகளில் மென்பொருள் வராவிட்டால் இந்தியாவில் ஆளும் வர்க்கமான ஆங்கிலம்
தெரிந்த ஐந்து விழுக்காடு மெத்தபடித்த மேதாவிகளுக்கு மட்டும்தான் கணிப்பொறிப் பயன்கிடைக்கும்.
ஏனைய தொண்ணூற்றைந்து விழுக்காடு மக்களுக்கு இதன் பயன்கிடைக்காமல் போய் ஏற்றத்தாழ்வு
பெருமளவில் வளரும். அது மட்டுமின்றி ஆங்கில வழிப்பட்ட உலகளாவிய ஒருமைப்பாட்டின் கூறாக
இந்தியா ஆகிவிடும். எனவே உள்ளுர் நிலைகளுக்கேற்பத் தரப்படுத்தல் முதலியவற்றைச் செய்து,
இந்த செய்தியுகத்தின் பயன்களைத் தொண்ணூற்றைந்து விழுக்காடு மக்களுக்குக் கொண்டு செல்ல
வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.
கணினியை மொழி வளர்ச்சிக்கானதாக மாற்றாமல், திரைபடங்கள் பார்க்கவும்,
கணினி சாதகம் பார்ப்பதற்காகவும் பயன்படுத்திக் கொண்டிருப்பது தமிழ்ச்சமூகத்தின் அறிவுமரபை
ஒரு நிலையோடு நிறுத்திவிடுவது போன்றதாகிவிடும். எனவே, புதிய புதிய மென்பொருளைக் கொண்டு
தமிழைக் கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்க வேண்டும் என்கிறார்.
தமிழகத்தில் கல்வியறிவு இரட்டித்து இருந்தாலும், அறிவு வளர்ச்சி
வளர்ந் துள்ளதா என்றால் இல்லை. என்றுதான் சொல்ல வேண்டும். நூல்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில்
வந்தாலும், ஒரு தரமான நூல் 1000 படிகள் போடப்பட்டால், சொற்ப அளவிலே தான் விற்பனையாகின்றன.
தமிழ் மாணவர்களே தமிழ் நூல்களைக் கற்பதில்லை என்றும், தமிழாசிரியர்கள் பழைய இலக்கியங்களைக்
கற்பதில்லை என்பதோடு, புதிய நூல்களையும் வாசிப்பதில்லை என்ற ஆசிரியரின் ஆதங்கம் மெய்யானதாகபடுகின்றது.
நூல் வாசிப்பில் மலையாளிகள் முன்னோடிகளாக இருப்பதை ஆசிரியர் எடுத்துக்காட்டுவது சிறப்பு.
இலக்கியத்தின் பணி என்பது உலகமயமாதல் காரணமாக ஏற்படும் வாழ்க்கை
மாற்றம், தீமைகளுக்கு எதிராக மக்கள் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புவதாக இருக்க வேண்டும்
என்ற கருத்தை நாம் உணர வேண்டும்.
பிறமாநிலங்களில் பிறநாடுகளில் தமிழ்ப்பண்பாட்டை வளர்த்த தமிழ்
இல்லங்களை நிறுவல், அதுபோல, தமிழகத்திலும் பிற மொழி இல்லங்களை உருவாக்க வேண்டும். பிறமொழி
அகராதிகளை ஆக்கம் செய்ய வேண்டும்.
தமிழ்வழிக்கல்வி, தமிழில் பேசல் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்க
வேண்டும் என்பதை மேற்கண்ட கட்டுரைகள் எடுத்தியம்புகின்றன.
ஆங்கிலமயமாதல் என்ற கட்டுரை ஆங்கிலம், வடமொழி கற்பது தவறன்று.
ஆனால், அது பண்பாட்டு மாற்றத்திற்கு வழிகோலுகின்றது. எனவே, தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை
அளித்து கற்க வேண்டும். வேற்றுமொழிகளினைத் தெரிந்து கொள்வது தவறில்லை. வேற்றுமொழிகளிலுள்ள அறிவு மரபைக் கடன்வாங்கலாமேயொழிய வேற்றுமொழிச் சொற்களையல்ல என்ற ஆசிரியரின் கருத்து
மிக இன்றியமையாததாகப் படுகின்றது.
தமிழ்ப்பல்கலைக்கழகம் போன்ற ஆய்வு மையங்கள் தமிழிற்கு வேற்றுமொழி
அறிவுமரபினை மொழிபெயர்ப்பதை விட்டுவிட்டு நம்முடையதை மொழிபெயர்ப்பது தவறான வேலை என்ற
கருத்தும் சிந்திக்கத்தக்கது.
தமிழில் வடமொழி கற்பது வேறு கலப்பது வேறு என்னும் கட்டுரை, தினமணியில்
(12-10-1991) திரு.கே.எஸ். சீனிவாசன் எழுதிய தமிழில் வடமொழி என்ற கட்டுரையில் காணப்படும்
கருத்தியல் நோக்குப் பிழையைச் சுட்டிக்காட்டுவதாய் அமைகின்றது.
இத்தொகுப்பில் மிகமுக்கியமாகத் தமிழ் உச்சரிப்பு என்னும் கட்டுரை
அமைகின்றது. தமிழைக் கற்கத் தமிழர்கள் முன்வர வேண்டும் என்பது ஒருபுறம். அதனைப் பிழையின்றிப்
படித்தறிவது என்பது அதனைவிட இன்றியமையாதது. இன்று தொலைக்காட்சி, வானொலிகளில் பேசப்படும்
தமிழில் உச்சரிப்புப் பிழைகள் அதிகமிருப்பதாகவும், பள்ளி முதற்கொண்டு உச்சரிப்புப்
பயிற்சியைக் குழந்தைகளுக்கு ஆசிரியர்களும், ஆசிரியர்கள் முதலில் நன்கு உச்சரிக்கக்
கற்றுக் கொள்ளத் தங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உச்சரிப்புக் கையேடுகளை
அரசு வெளியிட்டு தமிழ் சரியான உச்சரிப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்
ஆசிரியர்.
தமிழ்நாட்டில் தமிழ் உச்சரிப்பு சரியில்லாமற் போனமைக்கு, இங்கு
நிலவும் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் செல்வாக்கும், தமிழரின் கல்வியறிவுக் குறைபாடும்
காரணமாக இருக்கக்கூடும் என்று கருதுகின்றார் பேராசிரியர்.
தமிழியல் ஆய்வு நேற்று - இன்று - நாளை எனும் கட்டுரையில், ஆரம்ப
காலத்திய ஆய்வின் வரலாறு, தமிழ் ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் எழுந்த
நிறுவனங்கள், இதழிகள், ஆய்வுத் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கின்றது.
தமிழாய்வினை மேற்கொள்ளும் ஊலகத்தமிழாராயச்சி நிறுவனம், சென்னை
ஆசியவியல் நிறுவனம், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், தஞ்சை சரசுவதி மகால், சென்னை
கீழ்திசைச் சுவடி நூல் நிலையம், உ.வே.சா நூலகம், தமிழக அரசு தொல்பொருளாய்வுத் துறை,
மைசூர் இந்திய மொழிகள் நிறுவனம், தமிழ் வளர்ச்சிக் கழகம், மணிவாசகர் பதிப்பகம் போன்றன
தமிழ் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள் ளன என்கிறார். 1981 ஆம் ஆண்டு
தோற்றுவிக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகமே தமிழ் உயர் ஆய்வின் தலையகம் என்றும்,
அந்நிறுவனம் தமிழாய்வில் தனக்கான தலைமையை நிலைநாட்ட முயல வேண்டும் என்றும், அதில் அந்நிறுவனம்
தோற்றால், தமிழாய்வின் தோல்வியாகவே கருதப்படும் என்றும் குறிப்பிடுகின்றார். இக்கருத்து
இன்றியமையாததாகப் படுகின்றது.
தமிழ்ப்பொழில், செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்க்கலை,
மொழியியல், நாட்டுப்புறவியல், மேலும், தமிழாய்வு, உயராய்வு, கூச்ட்டிடூ ஞிதடூtதணூஞு
போன்றன தமிழ் ஆராய்ச்சிக்கு
உதவிய, உதவுகிற இதழ்களைப் பட்டியலிடும் ஆசிரியர், தமிழகத்தில் வெளிவருகின்ற ஆராய்ச்சி
இதழ்களில் இன்னும் தரமும் எண்ணிக்கையும் கூட வேண்டும் என்கிறார். மலேசியா, சிங்கப்பூர்
ஆகிய நாடுகளில் தமிழ் இதழ்கள் தரமானதாகவும், ஒழுங்காகவும் வெளிவருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார்.
ஆய்வுத்திட்டங்களை மேற்கொள்ள நிறுவனங்கள் பலவிருந்தும் பேராசிரியர்கள்
தமிழாராய்ச்சிக்கு யாரும் முன்வருவதில்லை என்றும், அதற்கு ஆர்வக்குறைவு, ஆய்வில் ஈடுபடுவதற்குரிய
ஊக்கிகள் இன்மை, சோம்பல், முயற்சியின்மை, புதுமை நாட்டம் இன்மை, புத்தறிவுத் தேட்டமின்மை
என்றவற்றை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். இத்தன்மை கொண்ட பேராசிரியர்களிடம் பாடம்
கேட்கும் மாணவர்களுக்கும் பின்னாளில் இதே நிலைமைதான் என்பதில் சந்தேகமேயில்லை. முதுகலைப்
பாடத்திட்டங்கள் ஆய்வுநடையில் நடத்தப்பட வேண்டும் என்று பாடத்திட்டத்திலேயே குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஆய்வில் நாட்டம் இல்லா ஆசிரியர்கள் நூலில் உள்ளதை
முற்றோதல் செய்துவிட்டு போகும் நிலைதான் மத்தியப்பல்கலைக்கழகங்கள் முதல் கல்லூரிகள்
வரை நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. தொல்காப்பியத்தைக் கற்பிக்கும் போது பலவுரையாசிரியர்களை
ஒப்பிட்டு, உரையாசிரியர்களின் ஆய்வுப் பார்வையைக் கற்பிப்பதைவிட்டு, இன்னும் இளங்கலையில்
படித்த அடிப்படைகளையே இன்னும் எழுத்துக்கள் முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகை,
சொல் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகை, நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
என நான்கு வகை என நடத்திக் கொண்டிருப்பது அடிமுட்டாள்த் தனமானது. இந்தப் பணியை மாணவனே
செய்துகொள்வான். ஆய்வுநோக்கிலான பாடம் கற்பித்தலும், உரையாடல்களுமே இன்றைய மாணவர் சமுதாயத்திற்குத்
தேவை. அதனை விடுத்து தெரிந்த செய்திகளையே ஓதிக்கொண்டிருப்பது என்பது பாடத்தின் மீதும்,
அதனை நடத்தும் ஆசிரியர்கள் மீதும் வேண்டா வெறுப்பையே ஏற்படுத்தும் என்பது உண்மை.
கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் தமிழை மொழியியல்,
ஒப்பியல், பிறமொழிப்பயிற்சிகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து கற்பிக்க வேண்டும்
என்ற ஆசிரியரின் கூற்று ஏற்புடையதே. மேலும், இலக்கியக்கல்வியுடன் மானிடவியல், உளவியல்
போன்றவற்றையும், பயன்சார் ஆய்வுத்திட்டங்களையும் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்கின்றார்.
அந்த அடிப்படையில் இந்தத் தொகுப்பிற்கு இக்கட்டுரை தலைமையானதாகத்
தென்படுகின்றது.
நூலினது பெயர் : உலகம் தேடும் தமிழ்
ஆசிரியர் : கி.நாச்சிமுத்து
முதற்பதிப்பு : அக்டோபர், 2007
வெளியீடு : பேரா.கி.நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், 25/2, சுப்பையா நகர்,
பெரியநாயக்கன்பாளையம், எஸ்.ஆர்.கே.வி. அஞ்சல், கோவை - 641 020
பக்கங்கள் : 124
விலை : உரு. 60.00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக