வியாழன், 16 ஜூலை, 2020

நூல் மதிப்புரை - க.வினோதா, இராஜ்கௌதமனின் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் - தமிழ்ச்சமூக உருவாக்கமும்

தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் சங்க இலக்கியத்தின் இருப்பு       

பழந்தமிழ் இலக்கியங்களின் ஒரு மீளாய்வாகப் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் - தமிழ்ச்சமூக உருவாக்கமும் என்ற நூலினைக் கூறலாம். இந்நூலை ராஜ்கௌதமன் எழுதியுள்ளார். வைதீகம், சமணம், பௌத்தம் என்ற பெரும் சொல்லாடல்களுக்குள் சங்க இலக்கியம், தொல்காப்பியம் எவ்வாறு பயணித்தது என்பதைக் குறிப்பிடும் நூலாக இது அமைகிறது. நூலில் கட்டுரைகள் அனைத்தும் இந்த அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

  சங்க இலக்கியத்தில் பாலியல் பற்றிய அறக்கவலை மிஷல் ஃபூக்கோ வழி என்னும் கட்டுரையில் ஆண்சார்ந்த ஒழுக்க நடவடிக்கைகள்தான் ஒழுக்கவிதிகளுக்கு அடிப்படை என்பதைக் கிரேக்க ரோமானியச் சிந்தனைகளுடன் ஃபூக்கோ ஆராய்ந்ததின்வழி தமிழ்ச்சிந்தனையோடு ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். நிலத்தையும், பெண்ணையும் ஆளுபவனாக ஆண் இருந்ததை விளக்குகிறார். தந்தைவழிச் சமூகஅமைப்பு செயல்படுத்தும் இடத்திலும் பெண்ணும் நிலமும் செயலூக்கம் இல்லாமல் ஆளுகைக்கு உட்பட்டு உலகம் முழுவதும் இருந்ததை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது. வரலாற்றில் பெண்ணும் நிலமும் தொடர்ந்து ஆளுகைக்கு உட்பட்ட ஒன்றாக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சங்ககால கட்டமைப்பிற்குள் உருவாக்கிய தோற்றுவாயாக இலக்கியங்கள் இருந்துள்ளது என்பது முக்கியமானது.  எனவே உருவாக்கப்பட்டது என்ற சிந்தனையின்                      பின்புலத்தில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

  அறிவுப் பொதுமையாக்கத்தில் தொல்காப்பிய கொடை எனும் கட்டுரையில் சங்கப்பாடல்களின் தொகுப்பு அரசியல் இது வரலாற்றில் தொடர்ந்து வந்ததையும் பிற்கால அரசியலில் வைதீகத்தின் தாக்கம் கட்டமைக்கப்பட்டதையும், வருணப்பாகுப்பாட்டின் உச்சம் வெளிப்படும் விதத்தினையும் விளக்கியுள்ளார். சமண, பௌத்த சிந்தனைகளுக்கு மாற்றாக வைதீகச் சிந்தனையை முழுவதுமாக எதிர்க்கும் பின்புலத்தில் கட்டுரையின் முதற்பகுதி அமைகிறது.

        தொல்காப்பியம் முழுவதும் சமணச் சிந்தனையை உள்வாங்கியதாகும். எனினும் வைதீகம் சார்ந்த கருத்தாடல்கள் புதிதாக வந்தவையல்ல. ஏற்கனவே உள்ள அறம், அரசியல், கதை, சடங்கு, புராணம், இதிகாசம், வேதம், யாகம் போன்றவைகளின் ஊடாகப் புலவர் மரபில் இருந்தன. தொல்காப்பிய உரைகளிலும் இப்போக்கே மேலோங்கி இருந்தது என்று கூறும் இந்நூலாசிரியர் பொருளதிகாரத்திற்குக் கொடுக்கும் அறிமுகம் தொல்காப்பியத்திற்கு முன்னுரையைப் போன்று அமைகிறது. சமூக ஒழுங்கமைவுகளைக் கூறும் மரபியலை அறிந்தபின் மற்ற இயல்களை அணுகினால் தெளிவு கிடைக்கும் என்கிறார்.  பிறகு அகத்திணை, புறத்திணைக்கான ஒழுங்கமைவினைக் கூறுகிறார். பிறகு களவியல், கற்பியல் எனும் இயல்களின் தேவை, கலந்த உரை அரசியல் போன்றவற்றைக் கூறுகிறார். பின்பு பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல் போன்றவைகள் தமிழ்மொழிக்கான தனித்தன்மைகளுடன் இருப்பதைக் கூறுகிறார்.

       பெண்களின் நான்கு நிலைகளும் அவற்றின் சடங்குகளும் எனும் கட்டுரையில் பெண்வாழ்வு சமூகத்தில் நான்கு நிலைகளில்  (பூப்பு, வதுவை, மகப்பேறு, கைம்மை) உள்ளதை விளக்குகிறார்.  பெண் தூய்மையாக்கத்தின் முழுக்குறியீடாக மாறிப்போனதைச் சங்கப்பாடல்களைக் கொண்டு விளக்குகிறார்.  தூய்மை என்ற கருத்தினுள் ஒதுக்கி வைக்கப்படுதலே மேலோங்கி இருக்கிறது. பெண்ணுக்கு வாரிசு எனும் ஒற்றைப் பொருளை மையப்படுத்தியே சங்க காலமும், சடங்கு முறைகளும் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.

       புறநானுற்றில் இனக்குழு சமூக எச்சங்கள் எனும் கட்டுரையில் மாந்தீரிகயுகம், சமயயுகம் இதற்கிடையில் இனக்குழு தோன்றியிருக்கக்கூடும் என்கிறார். கருப்பு மாந்தீரிக யுகத்தின் தொடர்ச்சி அதாவது எச்சம்தான் இறந்தவர் வழிபாடு என்கிறார். வேளாண்மையின் தொடக்கத்தில் உருவான பாதீடு என்ற கருத்தியல் வேளாண்மையின் உச்சத்தில் ஈகை என்றானது என்கிறார்.

   அகப்பாடல்களில் இனக்குழு சமூக எச்சங்கள் எனும் கட்டுரையில் அகப்பாடல்களில் வந்துள்ள புறச்செய்திகள் யாவும் அகஇலக்கணபிரிவு அல்ல அரசாண்ட, போரிட்ட, பாதீடு செய்தவர்களான சிற்றரசர்கள்முதல் உள்ள தலைவர்கள் பற்றிய தகவலாகும். அகப்பாடல்களைப் பாடிய நக்கீரன், மாமூலன், பரணர், கபிலன், ஔவை போன்றவர்கள் பகிர்ந்து உண்ணும் மரபே சிறந்தது என்றாலும் இவர்கள் யாவரும் பேரரசவைப் புலவர்கள் என்கிறார். இதிலும் பாதீடு, வேளாண்மை, போர், பண்டமாற்று என்பவைகள் எச்சங்களாகத் தொடர்பவை என்று விளக்குகிறார்.

     சங்க இலக்கியத்தில் புலையர் இழிசினர் இழிப்பிறப்பாளர் எனும் கட்டுரையில் வேடர்களின் நிலை மறத்தை அடிப்படையாக வைத்து சமூகமதிப்பு இருந்ததே தவிர இழிந்தவர்களாக இல்லை, மாறாக அச்சம் தரத்தக்கவர்களாக இருந்தனர். இதைப் போலவே பாணரை இழிசினர் என்று கருதும் போக்கும் பல்லவர் காலத்தில்தான் இத்தகைய போக்கு நிலவியது என்கிறார். இனக்குழு வாழ்க்கையில் இழிவு என்ற கருத்தாக்கம் இல்லாது இருந்தது. ஆனால் பேரரசு வந்தபொழுதுதான் தேவையற்றவர்கள் என்ற கருத்தாக்கம் நிலைபெற்றது, அப்பொழுதுதான் புலையர், இழிசினர், இழிப்பிறப்பாளர் போன்ற கருத்தாக்கம் வந்தது என்கிறார்.

    சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் கடவுள் உருவாக்கம் என்ற கட்டுரையில் கடவுள் என்ற கருத்தாக்கம் பெண்களை மையமிட்டதாக இருந்தது. சூர்பயம் தரக்கூடிய ஒன்றாக இருந்தது. முருகு என்பதும் முதலில் அத்தகைய நிலையிலிருந்து பிறகு கடவுள் தன்மைப் பெற்று பிறகு அதுவே பெருந்தெய்வ வழிபாடாக மாறியதை படிநிலை வளர்ச்சியோடு வைதீகச் சிந்தனை கலந்து தொடச்சியாக வருவதைக் கூறியுள்ளார்.

     சங்ககாலத் தமிழர் நாகரிகத்தில் உணவு என்ற கட்டுரை உணவுப்பொருள்களான நெல், வரகு, அவரை, எள், தினை போன்றவைகள் அரசுருவாக்கத்தோடு இணைந்து வந்ததை விளக்குகிறார். அறம், சடங்கு என்பவைகளுக்கு முகவராக உணவு அமைந்ததை விளக்குகிறார்.

         புறப்பாடல்களில் அகக்கூறுகளும் அகப்பாடல்களில் புறக்கூறுகளும்  எனும் கட்டுரையில் அகம் புறம் கட்டமைப்பிற்குள் அடங்காத தொல்திராவிட இலக்கியங்கள் இருந்தன. தொல்காப்பியத்தில் அகம் புறம் இணைவு உண்டென்று அவரே கூறி (பக்கம்.222) பிறகு கட்டுரை முடிவில் தொல்காப்பியம் இதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை (பக்கம். 242) என்றது முரண்தருவதாக உள்ளது.  இதன்பின் வடமொழி உள்ளே வந்ததுக்குப் பிறகுதான்  “எல்லைக்கோடுகள் அழிக்கப்பட்டன’’ (பக்கம்.222) என்பது ஆய்வுக்குரியது. ஏனெனில் தொல்காப்பியம் அகத்தையும் புறத்தையும் நெகிழ்ச்சியோடுதான் அணுகியுள்ளது. தனித்தனியாக இறுக்கமாக வரையறுத்தது       பிற்காலத்தில் வளர்ச்சி அடைந்திருக்கும்பொழுது முற்காலத்தில் வளர்திருக்குமா என்பதும் ஆய்வுக்குரியது. மகட்பாற் காஞ்சிப் பாடல்களில் யார் பெயரும் சுட்டாத பொழுதும் இதேபோன்று வெள்ளி வீதியார், நக்கண்ணையார் பாடல்கள் புறத்தில் சேர்த்ததில் உள்ள இடர்பாடுகளைக் விளக்குகிறார். இதற்கும் சங்கப் பாடல்களைத் தொல்காப்பியம் கொண்டுதான் தொகுத்தார்களா என்பது ஆய்வுக்குரியது.

            அகப்பாடல்களில் புறப்பாடலின் கூறுகள் என்ற கட்டுரையில் புறப்பாடல்களைப் பாடிய புலவர்கள் அகப்பாடல்களைப் பாடும்பொழுது கோசர், நன்னன், அன்னி, மிஞிலி, தித்தன், அகுதை, திதியன், அதிகன், அழிசி, மூவன், கழுவுள், வெளியன், மத்தி, பாணன், அறுவை, நள்ளி, ஆய், கடலன், வாணன், பிட்டன், தழும்பன், ஆட்டனந்தி, ஆதிமந்தி போன்றவர்களைப் பற்றிப் பாடியுள்ளனர் என்கிறார். அதே சமயத்தில் புறத்தில் பேரரசர்களைப் பாடியுள்ளனர். இது ஒருவகையில் முரண்போக்கைக் கட்டமைக்கும் வகையில் உள்ளது. தொல்திராவிட மரபில் அகமும், புறமும் இணைந்த ஒன்றைக் காணமுடிகிறது என்றும் அகம், புறம் பற்றிய பகுப்புகள்  எல்லாம் தொல்காப்பியமும், உரை மரபுகளும் பகுத்த முறை என்கிறார்.

    சங்க இலக்கியச் சிதறல்கள் சில எனும் கட்டுரையில் சங்ககால புலவர் மரபிற்குத் தமிழ்ஆக்கங்கள் மட்டுமின்றி சமஸ்கிருத, பிராகிருத, பாலிமொழி சாஸ்திரங்கள் பற்றித் தெரிந்திருக்கிறது. இவற்றோடு வழக்குகள், நம்பிக்கைகள், பழமொழிகள் இவற்றைப் படைப்பாக மாற்றும் திறனும் பெற்றிருந்தனர் என்கிறார்.

          பாட்டும் தொகையிலுமிருந்து முப்பால் மாறுபடும் இடங்கள் எனும் கட்டுரையில் வினை, பிறவி, அகிம்சை, நிலையாமை, நிருவாணம் முதலிய சமணக் கருத்துகளை மையமிட்டதாகவே திருக்குறள் இருக்கும் சூழலில் கி.பி. 250 முதல் 580 வரை அரசியல் விரிவாக்கத்தின் காரணமாகப் பாடல்கள் தொகுத்தல், உரையெழுதுதல் போன்ற பணிகள் நடைபெற்றன. இதன் பின்னணியில் திருக்குறளை வைதீக மையப்படுத்தும் வகையில் உரைகள் தோற்றம் பெற்றன. இக்காலக் கட்டத்தில்தான் வள்ளுவமாலை உயர்வு நவிற்சியாகச் சேர்க்கப்பட்ட ஒன்று என்கிறார். சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தை விடவும் வள்ளுவர்காலத் தமிழ்ச்சமூகம் கருத்தியல்கள் ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் பெரும் இடைவெளிகளும், மாற்றங்களும் நிறைந்தது என்கிறார்.

      இந்நூல் பொதுவாகச் சமண சமய கருத்துகளை வலியுறுத்தி வைதீகத்தை எதிர்க்கும் முகமாகக் கட்டுரைகள் தொகுத்துள்ளார். தமிழ்ச் சமூகத்தோடு ஊன்றிவிட்ட ஒன்றை அபத்தம் என்று எவ்வாறு விலக்க இயலும் என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது. இக்கருத்து தொல்காப்பியத்தில் துவங்கித் திருக்குறளில் முடிகிறது. பாட்டும் தொகையையும் முதலில் வைத்து தொல்காப்பியத்தை அதற்கு அடுத்து கூறுவதால் சங்க இலக்கியத்திற்குப் பிறகுதான் தொல்காப்பியம் என்ற கருத்தை வலியுறுத்துவதாக ஆசிரியரின் கருத்து உள்ளது. தொல்திராவிடக் கருத்துகள் நெகிழ்ச்சித் தன்மையைத் திரும்பவும் அளிக்கும். எனவே அம்மாதிரியான இலக்கியப் போக்குகளை முன்னெடுக்க வேண்டியதைக் கூறுவது சிறப்பானதாக அமைகிறது.


2019 - அக்- டிசம்பர் பருவ இதழில் வெளியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்

  வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்   இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழல் ப...