1
இரண்டொரு வாரத்திற்கு ஒருமுறை
அழுக்கேறிய பழைய ரூபாய் நோட்டென உலாவுவதாக
டி.பி யை மாற்றுகிறேன்
சதா குரைத்து ஊளையிட்டு
இங்குமங்கும் திரிந்து
சிலருக்காகத்
தன் இருப்பையும்
விசுவாசத்தையும் வெளியிடும் நாயென
ஸ்டேட்டஸில் அடிக்கடி குரைக்கிறேன்
வார்த்தைகளற்று
நிரம்பி வழியும் எமோஜிக்களால்
கடுகெனப் பேசிக்கொள்கிறேன்
யாருடனேனும் தொடர்பிலிருக்கிறேனா
என்றறிய
ஆன்லைனும் லாஸ்ட் சீனும்
குரலும் எழுதிய செய்தியும் சென்றடைந்ததற்கு
டிக்குகளும் புளூ டிக்குகளும்
மேலும்
அழகும் ஒப்பனையும் குலைந்துவிட்டதாய்
சீரான மாத இடைவெளிகளில்
வால்பேப்பரை மாற்றுகிறேன்
முன்புபோல் கடினமல்ல
அவ்வளவு எளிதில் அடுத்தவருக்கு
என்னை
உணர்த்திவிட முடிகிறது
2
அவர்கள்
என் கழுத்தில்
கத்தியை வைக்கின்றனர்
நான்
அவர்களது
வாழ்கையைப் பற்றி
சிந்தித்துக்கொண்டு
இருக்கிறேன்
3
பின்னிரவில் பெய்த கனமழையிலும்
நனையாமலிருந்த பசுவின் காம்புகளென
ஒரு சந்திப்பு
சாலை கடத்தலில்
விபத்துக்குள்ளான
பூனை நாயினை ஒத்திருந்தது
ஒரு பிரிவு
கீரியை விழுங்கி
அஜீரணக் கோளாறால்
அசைய முடியாத பாம்பென
தேங்கியிருக்கின்றன நினைவு முட்கள்
ஆட்டுக் குடலிலிருந்து
புழுக்கையை இழுத்து அகற்றும்
கசாப்புக் கடைக்காரனின்
தொழிலாய் நின்றது
நினைவுகளை அகற்றுதல்
--------- அக்டோபர் - டிசம்பர் 2019 மலர் : 2 இதழ் : 2 இல் வெளியான கவிதைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக