புதன், 15 ஜூலை, 2020

என்னதான் நவீனத் தொழில்நுட்ப ஊடகங்கள் வந்தாலும் ஊர்மக்கள் நாட்டுப்புறக் கலை வடிவங்களையே விரும்புகிறார்கள் - உடுக்கையடிக் கலைஞர் மயில்சாமி

உடுக்கையடிக் கலைஞருடன் உரையாடல்

நேர்காணல் :: த.பரமேசுவரி,

படங்கள், ஒலி - ஒளிப்பதிவு :: கானகநாடன்

       

பொள்ளாச்சிக்கு அண்மையிலுள்ள தேவனாம்பாளைத்தைச் சார்ந்த நாட்டுப்புறக் கலைஞர் மயில்சாமியை நேரில் கண்டோம். மறைந்துவரும் உடுக்கையடிக் கலை பற்றியும் இன்றைய நிலையில் மக்கள் நாட்டுப்புறக் கலைகளை எவ்வாறு பார்க்கின்றனர் என்பது குறித்தும் தனது வாழ்நாள் கலை அனுபவங்களையும் பற்றி எடுத்துரைத்தார். மேலும் தாலாட்டுப் பாடல்கள் குறித்து அடுத்த இதழில் வெளியிட வேண்டும் எனவும், அதற்குத் தான் உதவுவதாகவும் தெரிவித்தார்.

        தாலாட்டுப் பாடல்கள் முற்றிலும் அழிவை நோக்கிச்செல்வதாகவும், தாலாட்டுப் பாடும் மரபே சுவடு அறியாது போகும் நிலையுள்ளாதாகவும் வருத்தம் தெரிவித்தார். நேர்காணலின்போது இடையிடையே தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதைக் கைகொண்டது வியப்பில் ஆழ்த்தியது. ‘‘அய்யா நான் கொஞ்சம் சின்ன வேலையிலெ இருக்கருங்க. ஒன்னுமில்லைங்க.. பாருங்க ஏணிமேல நின்னுட்டு இருக்கறங்க’’ என்றார். அவரின் நகைச்சுவையும் காலமேலாண்மையும் வியப்பாக இருந்தது. அவரைக் கண்டபின்னர்தான் குறிப்பாக, கொங்கு மண்டலத்தின் வட்டாரத்தின் தனித்தன்மை மரபுகளைப் பல வடிவங்களில் ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடனே, வளமார் கொங்கு என்னும் குறுங்கால ஆவணப்படுத்தும் திட்டம் வெட்சி இதழின் வாயிலாகப் போடப்பட்டுள்ளது. மேற்கொண்டு இதுபோன்ற ஆவணப்படுத்தங்கள் தொடரும். இனி, ஆரவாரமில்லா கலைஞனின் வாழ்க்கை இதோ.....!

வணக்கம் வணக்கம்! எங்கள் வளர்கொங்கு நாடு!

வாழ்விற்கு இனிதான விளங்கும் பண்பாடு!

வணக்கம் வணக்கம்! எங்கள் வளர்கொங்கு நாடு!

(உடுக்கையை இசைத்துக் கொண்டே பாடுகிறார்)

தங்களின் இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்க?

        வீட்டுக்கு ஒரே மகன். பள்ளியில் பெற்றோர்கள் ஆர்வத்தோடு சேர்த்தாங்க. படிப்பு எனக்கு மண்டையில் ஏறவில்லை. மேலும் நான் பள்ளிப்படிப்பைப் பெரிதும் விரும்பலை. பள்ளிப்பருவத்திலிருந்தபோது ஊர்கள் முழுதும் நாட்டுப்புறக் கலைகளை நிகழ்த்துவாங்க. இன்னைக்கி இருக்கிறமாதிரியா தொலைக்காட்சி, தொழில்நுட்பக் கருவிகளோ பெரிசா கிடையாதுங்க. பெண்களெல்லாம் ஒயிலாட்டம், கும்மியாட்டம் நிகழ்த்துவாங்க, ஆண்கள் வள்ளி திருமணத்தைக் கும்மிப்பாட்டாகப் படித்து ஆடுவாங்க. பொன்னர் - சங்கர், காத்தவராயன், மதுரைவீரன், கோவலன் - கண்ணகி போன்ற கதைகளை ஊர் முழுக்கப் பாடுவார்கள். மின் வசதியே இல்லாத காலகட்டத்தில் தீப்பந்தங்களைக் கொண்டும், மண்ணெண்ணெய் விளக்குகளைக் கொண்டும் தெருக்கூத்துகளை நிகழ்த்துவாங்க. இந்தப் பருவத்தில்தான் எங்கள் ஊருக்குப் பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர்க்குப் பக்கத்திலுள்ள காளியாபுரத்திலிருந்து ஆசிரியர் கந்தசாமி அவர்களின் தலைமையில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்த வந்திருந்தாங்க. அதை வேடிக்கைப் பார்க்கச் சென்றிருந்தோம். அவர்களின் நடிப்பையும் பாடல்களையும் பார்த்து நாமும் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அவரிடமே சென்று இந்நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுக் கொண்டேங்க.

          தற்பொழுது எனக்கு நான்கைந்து கதைகள் தெரியுமுங்க. காத்தவராயன் கதை, பொன்னர் - சங்கர், கோவலன் - கண்ணகி, மதுரைவீரன் கதை போன்றன. தொன்றுதொட்டு மணப்பாறைக்கு அண்மையிலுள்ள வீரப்பூர்த் திருவிழாவிற்குச் சென்றுவரும் மக்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதெண்ணி, தற்சமயத்தில் எங்குசென்றாலும், பொன்னர் - சங்கர் கதையை விரும்பிக் கேட்பதால் அதனையே முழுமைத் தொழிலாகச் செய்துவருகிறேன். என்னோடு என் குருநாதர் மகன் ஜீவா அவர்கள் கதைகளை நிகழ்த்தி வருகிறார். இக்கதைகளை நாங்கள் சேலம், கொடுமுடி, பழனி, ஈரோடு, ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி, உடுமலையைச் சுற்றியுள்ள இடங்களில் சென்று நிகழ்த்தி வந்துள்ளோம். அண்மையில் இக்கலையின்மீது ஆர்வங்கொண்டு வெளியும் கொண்டுசேர்க்க வேண்டும் என்று எண்ணி கிருஷ்ணசாமி வாத்தியார் என்பவர் பெங்களுர்க்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒருவாரகாலம் கலையை நிகழ்த்தினோம். மேலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் போன்ற இடங்களிலும் சென்று இந்நாட்டுப்புறக் கதைப்பாடல்களை நிகழ்த்தி வந்தோம். வாய்ப்பிருக்கும் இடங்களுக்குச் சென்றுவிடுவோம். இக்கலையின்மீது ஆரம்பித்திலிருந்தே ஆர்வமிருந்ததனால் இது என் வாழ்க்கையின் தொழிலாகவே மாறிபோச்சுங்க.         

   அய்ந்தாம் வகுப்புவரை படித்துள்ளேன். பத்துவயலிருந்து இக்கலையைக் கற்றுக்கொண்டேன். இக்கலையை நிகழ்த்தித்தான் எங்களின் குடும்ப வாழ்க்கையே நகருதுங்க. எனக்கு ஒரு மகன். தை, மாசி காலகட்டங்களில் நடைபெறும் விழாக்களில் ஊர்க்காரர்கள் எங்கள் ஊருக்கு வாங்க, எங்க ஊருக்கு வாங்க என்று போட்டிபோட்டுக்கொண்டு கூப்பிடுவாங்க. ஆனால், காலப்போக்கில் தற்சமயம் இசைக்கருவிகள் பல வந்துவிட்டதாலும், தொலைக்காட்சி நாடகங்கள் பெருகிவிட்டதாலும், மக்கள் போக்குவரத்து அதிகமாகி விட்டதாலும், இக்கலையின் மீதான மோகம் மக்களிடத்தில் குறைஞ்சிருச்சுங்க. ஆர்வமுள்ள சிலர் கூப்பிடுவதால் சென்று கலையை நிகழ்த்திவர்றங்க.

இக்கலையைக் கற்கவும், நிகழ்த்தவும் பெற்றோர்கள் ஒத்துக்கொண்டனரா?

       அப்பா, அம்மா அவர்கள் உடனே ஒத்துக்கவில்லை. வீட்டிற்கு ஒரே மகன், அதனால் படித்து வேலைக்குப் போ, ஊரைச் சுற்றிக்கொண்டுப் பாட்டுப்படிச்சிக்கிட்டு இருக்கவேண்டாம் என்று தடைசொன்னாங்க. ஆனாலும் ஆர்வமிருந்ததனால தடையையும் மீறிப்போனங்க. ஆனாலும், பிரியமில்லாமல் திரும்பி வந்துடுவானல்ல என்று அலட்சியமாக விட்டுவிட்டார்கள். அது எனக்கு வசதியாப்போச்சுங்க.

உங்கள் நிகழ்த்துக்கலை குறித்த அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்க?

    என்னுடைய ஆரம்பகாலகட்டம் ஒரு கூச்ச சுபாவத்துக்கோ இல்லை, படிக்கக்கூடாதுங் கறதோ எனக்கு மட்டுமில்லைங்க. கிராமத்துலெ எல்லார்கிட்டயுமே நாத்துநடவுறதனா ஒருபாட்டு, கல்யாணத்தூட்டுலெ குலவைப்பாட்டு, குழந்தை பிறந்துச்சுண்ணா இராரிப்பாட்டு, இழவூட்டுக்குப் போனா பாட்டு, இப்படியெல்லா செஞ்சாத்தான் நல்லாயிருக்கும் என்ற ஆர்வம் எல்லார்த்து மனசிலையும் வரும். இதையெல்லாம் பார்க்கும்போது எம்மனசுலெ ஒருவெறிமாரி வந்திருச்சு. எல்லாரும் இதைச் செய்யிறாங்க. நாமும் இதைக் கொஞ்சம் தெளிவாய்ச் செய்யலாம் என்ற எண்ணம் வந்திருச்சுங்க. ஆகையினால் கூச்ச சுபாவம் என்பது யாரிடமும் இல்லை. இருந்தும் என்னுடைய தனிப்பட்ட ஆர்வமே எனக்கு உயர்த்துச்சுங்க.

ஆரம்ப காலத்திலிருந்த உடுக்கையடியைப் போல இன்றைய நாட்டுப்புற நிகழ்ச்சிகளிலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காண்பிப்பதில்லை. உண்மைத்துவம் என்பது இன்று எவ்வாறு உள்ளது என உணர்கிறீர்கள்? அன்றைய இசைமைமரபு பற்றிச் சொல்லுங்கள்?

     ஆம். உண்மைத்துவம் இன்றைக்கு முற்றிலும் குலைஞ்சு போச்சுங்க. நாட்டுப்புறத்துலெ அடிக்கிறதுலெ ஓரளவுக்கு அதனுடைய வீச்சு இன்னைக்கும் குறையாம இருக்குது. உடுக்கை, பம்பை, சங்கு, சேகண்டி (சிகண்டி), மணி இவையெல்லாம் தேவ வாத்தியங்கள். கோயில்களுக்கும், சாமிகளுக்கும் உகந்தது. தவில், நாதஸ்வரம் மங்கள வாத்தியங்கள். தாரை, தப்பட்டை, உருமி, கொம்பு, துடும்பு இவையெல்லாம் அசுரவாத்தியங்கள். அசுரவாத்தியங்கள் போர்க்களத்துக்குப் போகிறவர்களுக்கு வீரத்தை உண்டுபண்ண அடிப்பாங்க. இராவணனின் தம்பி கும்பகர்ணனின் தூக்கத்தைக் கலைக்கவும், சண்டைக்கு உந்துபண்ணவும் காதில் கொம்பை வைத்து ஊதி, அவனுக்கு ரோசத்தை வரவழைத்தார்கள். இன்னைக்கும் நாட்டுப்புறத்தில் இதுபோன்றவற்றை இசைச்சா பெண்கள் பேயென்றும், சாமியென்றும் ஆடுகிறதைக் கண்டிருப்பீங்க. சிலிர்ப்பை உண்டுபண்ணும் வாத்தியங்கள் இவை.

    சிவனுக்கு உகந்தது உடுக்கை. இராமனுக்கு உகந்தது சங்கு, சேகண்டி. நாங்கள் வைத்து இருப்பது தேவ வாத்தியங்கள்.

து.கேள்வி : உடுக்கை சிவன் கையிலும் கொற்றவை கையிலும் உள்ளது. பம்பை எந்த தெய்வங்களுக்குரியது.?

        சக்தி பெரிசா, சிவன் பெரிசா என்ற குடும்பச் சண்டை வந்துச்சுங்க. நாம் உடைகளை உடுப்பு, உடுக்கை என்று சொல்கிறமாதிரி, சிவன் கையில் வைத்திருக்கும் வேலின் உறுப்பாகத்தான் உடுக்கை இருந்தது. ஈசுவரன் தான் பெரியவன் என்பதை நிறுவ தன்வேலிலிருந்த உடுக்கையை எடுத்து கலக்கலடபடப என்று அடிச்சார். இந்நிகழ்ச்சி சிதம்பரத்துலெ நடந்துச்சு. அப்பொழுதுதான் எங்களைப் போல்லுள்ளவங்க பாடுனாங்க. ‘‘மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட மாலாட நூலாட மறைதந்த பிரமனாட கோனாட குயிலாட வானூலக்க் கூட்டமெல்லாமாட குழந்தை முருகேசனாட குண்டலமிரண்டேழாட நரைதும்பையருகாட நந்திவானகமாட நாட்டியப்பெண்களாட வினையோட எனைப்பாட விரைந்தோடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே’’ என்கிற கவி அந்தத் தாண்டவத்துக்காகப் பாடப்பட்டது. அப்ப அந்த உடுக்கைக்குச் சிறப்பு வந்துதுங்க. ஆகவே அங்கத்துலெ இருந்ததெல்லாமே உடுக்கையா இருந்துதுங்க.

   சக்தி தன்னுடைய பலத்தை நிருபிக்க மேடையிலெ போயி ஆஆஆ எனச் சிரித்து உட்கார்ந்ததாலெ பம்பை ஆகிவிட்டாங்க. சக்திதான் பம்பை.   சிவன்தான் உடுக்கை. உடுக்கை சிவனின் உடைகளில் ஒன்று. அதாவது அங்கங்களில் ஒன்னா இருக்குது. அதுவும் வேலுடன் இணைந்துருக்குங்க. உடுக்கையெடுத்து அடிக்க. சக்தி அழகி வேடம்கொண்டு ஆடினாள். அழகின்னா பேய், பிசாசு, கோர உருவம் என்பர். பேயே பெரிசு. பாம்பேய்யாக மாறி ஆஆஆ எனச் சிரித்துக் கொண்டு ஆடினாள். (பாம் என்றால் மிகவும் பெரிய என்று பொருள்.) பாம்பேய்யே பம்பை என மருவிற்று. பெண்தெய்வத்திற்குரியது பம்பை.  

நிகழ்ச்சியில் உடுக்கையின் பயன்பாடு குறித்துச் சொல்லுங்கள்? 

   பஜனைகளில் எப்படி தம்புரா முக்கியமோ அதுபோலத்தான் உடுக்கையும் கூத்துகளில் முதன்மையானதுங்க. தம்புராவிற்கு இருக்கிற மாதிரியே நரம்பு இல்லைன்னா வார் போட்டு உடுக்கைக்கும் கட்டியிருப்போம். அதுதான் இசையை எடுத்து அதிர்ந்து கொடுக்கும். ஒரு உணர்வு அலையை ஏற்படுத்திக் கொடுக்குங்க. எம்பாட்டை ஒருவர் வாங்கிப் பாடுவார். பாடலைப் பகிர்ந்துகொண்டு பாடுவோம். ஆணும் பெண்ணுமாக இருந்து பாடுவோம். இரண்டுபேர் பாடும்பொழுது எசப்பாட்டு, இசைப்பாட்டு முறையில் அமைந்திருக்கும். சலிப்பிருக்காது. நல்ல கணபதியே நாளும் உனைத் தொழுதால் வினைதீரும்.. இதில் வினைதீரும் என்று எசையாக இன்னொருவர் எடுத்துப் பாடுவார். மணப்பாறைக்குப் பக்கத்துலெ வளநாட்டெ சுமார் 2000 வருசத்துக்கு முன்னால பொன்னர் சங்கர் ஆண்டு வந்தாங்க.. அவங்க ஆண்டு வரும்போது அந்த பகுதியெல்லா,

      மாதாமொரு மூணுமழை / மாதாமொரு மூணுமழை / வருடமொரு முப்போகமா / விளைஞ்சு வருசெந்நெல் / செந்நெல் விளைந்துவரும் / சிறுசம்பா விளைஞ்சிருக்கும் / பொன்னி வளநாட்டில் / மாடுகட்டிப் போரடித்தால் / மாடுகட்டிப் போரடித்தால் / மாளாது செந்நெல் என்று / பொன்னிவள நாட்டில் / யானைகட்டித் தாம்பாடும் / யானைகட்டித் தாம்பாடும் / அழகுபொன்னி வளநாட்டை / ஆண்டுவந்தாங்க இருவரும் (உடுக்கை அடித்துப் பாடிக்காட்டுகின்றார்.)  இதில் ஒருவர் நான் பாடப்பாட வாங்கிப் பாடுவார். அப்பத்தான் இந்த உடுக்கையடியே ஒரு முறையாக அடிக்கவும் அடுத்த நகர்விற்கும் வரும்.

நீங்கள் நிகழ்த்துக்கலையின்போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து சொல்லுங்கள். அதனை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

    கோபப்படுவதற்கான வாய்ப்பே இருக்காதுங்க. நல்ல கலைஞனுக்கு உடனே திட்ட வேண்டும் என்ற எண்ணம் வராது. ஏன் அவர்கள் கோபப்படுகிறார்கள் என்ற சிந்தனை நமக்குள் வரவேண்டும். காரணமில்லாமல் கோபப்படமாட்டார்கள். நம்மிடம் ஏதேனும் குறை இருக்குமோ என்ற எண்ணம் வரும். அந்தப் பக்குவம்தான் கலைஞனுக்கு மிகவும் அவசியம்.  கோபத்தைவிட பயம் எங்களுக்கு அதிகமா வரும். உடனே கோபப்படோனுன்னு எண்ணம் வந்திராது. நம்மமேலே ஏதேனும் குறையிருக்கும்னுதான் எண்ணம் வரும்.

இந்நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் தங்களுக்கான பொருளாதார நிலை எப்படி?

     ஒரு தொகைக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தப்போகிறோம் என்றால், தொகைக்குத் தக்கவாறு எங்களின் பங்களிப்பு இருக்கும். கொடுக்குற தொகைக்கு மேலே தொகை கொடுக்கறமாதிரியான இடத்துக்கும், மக்களின் தொகைக்குத் தக்கவாறு ஆட்களை எங்களோட சேர்த்திக் கொள்வோம். இரண்டுபேர் பாடுற இடத்துலெ இன்னும் இரண்டு பேரைச் சேர்த்திக் கொள்வோம். தெருக்கூத்தைத் தெளிவா செய்யலாம் என்ற ஆர்வம் வரும். விரிவுபடுத்திக் கொள்வோம். பொருளாதாரமும் எங்களின் போதிய அளவிற்கு மேலேயே இருந்துச்சு. பொழுதாவறைக்கும் காடுகரையிலெ பாடுபட்டுட்டு வர சனங்களுக்கு எங்களபோல ஆளுகதான் அவர்களோட சோர்வைக் களையறதாலெ நாங்க நடத்தும் நிகழ்ச்சிகள்  அவர்களின் கண்களுக்குக் குளிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். கூத்தாட்டம் பார்ப்பதே கண்ணுக்குக் குளிர்ச்சின்னு பழமொழியே சொல்லுவாங்க. அவர்களும் மனமுவந்து நன்கொடைகளை அள்ளித் தருவாங்க. அன்னைக்கு ஒன்னும் பொருள்களின் விலை பெரிசா இருக்காது. வரவும் அதிகமாத்தா இருக்கும். ஆனா இன்னைக்குப் போக்குவரத்திற்கே கொடுக்கும் தொகை பத்துவதில்லை.

         அன்பு பரிமாற்றத்திற்காகத்தான் இன்னைக்கு நிகழ்ச்சிகளை நடத்திட்டு இருக்கிறோம்.  பெரிசா வருமானம் இல்லெ. சில இடங்களில் நாங்க கேக்கிற தொகையைத் தராங்க. மக்களின் வருமானமும் குறைஞ்சதாலெ, பழையமுறையிலேயே நன்கொடை தராங்க. எங்களின் நட்புகளை இழந்துடக் கூடாதுந்தா நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியா நடத்திட்டு வர்றோம்.

இன்னைக்கும் மக்கள் தெருக்கூத்தை விரும்புகிறார்களா?

     இன்னைக்குப் பொன்னர் சங்கர் பற்றிய திரைப்படங்கள், புஸ்தகங்கள், நாடகங்கள் வந்திருக்கின்றன. அதனையும் மக்கள் பாக்கறாங்க. படிக்கறாங்க. இருந்தாலும் இந்த நாட்டுப்புற முறையிலெ நடத்துவதை மட்டுமே மக்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள். நாங்க நிகழ்ச்சி நடத்துறோம்னனு தெரிஞ்சா பத்து மைலுக்கு அக்கட்டெ இருந்தெல்லா வண்டியேறிட்டு வந்துருவாங்க. கூட்டத்துக்கு ஒன்னும் பஞ்சமிருக்காது. எப்படியும் அறுநூறு பேராவது குறைஞ்சது கூடிடுவாங்க.

      உடுக்கை இசைக்கருவியை இன்னும் பிரபலப்படுத்தனும். அழியாமல் இந்த தெருக்கூத்தைக் கொண்டுபோயி சேர்க்கணும் என்ற விருப்பத்துலெதான் இன்னைக்கும் தொடர்ந்து நிகழ்ச்சிகளுக்குப் போயிட்டு வரமுங்க.

(உலக ஒருமைப்பாட்டிற்காகப் பங்காற்றிய வேதாத்திரி மகிரிஷியின், எல்லாம் வல்ல தெய்வமது பாடலை உடுக்கையடித்துப் பாடிக் காட்டினார். அண்ணமார் கதைப்பாடலிலுள்ள கிளிவேட்டை நிகழ்வைப் பாடிக் காட்டுகிறார். பாடத்தொடங்கும் முன்னர், பாடலுக்கான பின்னணியைச் சொல்லிவிடுகின்றார். நிகழ்வின் மையத்தைக் கதையாகச் சொல்லி, பாடலில் முழுமையாக விவரித்துப் பாடுகின்றார்.)


மலர் 2, இதழ் - 1: 2019 மார்ச் - மே பருவ இதழில் வெளியான நேர்காணல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்

  வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்   இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழல் ப...