(18.06.2020) காலை 11.00 மணியளவில் Zoom செயலி வாயிலாகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருநங்கை எழுத்தாளர் ஆ. ரேவதி அவர்கள் "திருநங்கையர் எழுத்துகள்" எனும் பொருண்மையில் உரையாற்றினார்.
பாலின
சமத்துவத்துக்காகக் குரல் கொடுக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர் ஆ. ரேவதி. இவர்
நாமக்கல்லில் பிறந்தவர். துரைசாமி என்பது இவரின்
இயற்பெயர். இளம் வயதிலேயே தனக்குள் பெண்தன்மை
இருப்பதனை உணர்ந்து தன்னைத் திருநங்கையர் கூட்டத்தோடு இணைத்துக் கொண்டவர். இவரின் வெள்ளை
மொழி, உணர்வும் உருவமும் ஆகிய இரு நூல்கள் உலக அளவில் தாக்கத்தையும் விவாதங்களையும்
விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கின்றன. வெள்ளை மொழி நூலினை நாடகமாக தொடர்ச்சியாக
நிகழ்த்தி வருகின்றார். கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் நிகழ்த்தியிருக்கிறார். திருநங்கை,
திருநம்பியரின் விடியலுக்காகப் போராடிவரும் இவரின் தொடர்ச்சியான பங்களிப்பினை உணர்ந்த
நியூயார்க் - கொலம்பியப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக பட்லர் நூலகத்தின் முகப்பில்
ரேவதியின் பெயரினைப் பல போராட்டங்களுக்கிடையில் இடம்பெறச் செய்துள்ளனர். ஹோமர், ஹெரடோட்டஸ்
சிசரோ, வெர்ஜில், அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்ற ஆண் எழுத்தாளர்களின் வரிசையில் பெண்
எழுத்தாளர்கள் ஒருவர் பெயரும் இடம்பெறாமல் இருந்தது. Women Study துறையினர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் போராடிப் பெண்
எழுத்தாளர்கள் சிலரின் பெயர்களைப் பொறித்தனர். ஆனால் அதனை நிர்வாகத்தினர் நீக்கிவிட்டனர்.
மீண்டும் 2009ஆம் ஆண்டு பெண் எழுத்தாளர்கள்
ஆறுபேரின் பெயர்களைப் பொறித்துள்ளனர். அவ்வரிசையில் ஆ.ரேவதியின் பெயரும், நூலகத்தில்
அவருடைய நூல்களும் இடம்பெற்றிருக்கின்றன.
இவர்
அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில்,
"காதல் என்பது மனித உயிருக்குப் பொதுவானது. ஆண் பெண் பேதம் எல்லாம் அதற்கு இல்லை.
உடலுக்குத்தான் விரும்புகிறார்களே ஒழிய உள்ளத்தை யாரும் பார்ப்பதில்லை" என வருத்தமாகப்
பதிவு செய்திருந்தார். இந்த நெருக்கடியான சூழலில் பொருளாதாரத்தாலும் மன உளைச்சலாலும்
பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நமக்காக நேரத்தை ஒதுக்கி மிக இன்றியமையாத விடயங்கள் குறித்து
எடுத்துரைத்தார். அதனின் ஒரு சிறுபகுதி :
"என்னை
எழுத்தாளர், திரைப்பட நடிகர், நாடகக் கலைஞர் என்றெல்லாம் சொல்கின்றார்கள். அப்படியெல்லாம்
ஒன்றுமில்லை. பெரியதாக ஒன்றும் படிக்கவில்லை, பத்தாவது வரைதான் படித்திருக்கின்றேன்,
எழுதினாலும்கூட எழுத்துப் பிழைகளோடுதான் எழுதுவேன். இலக்கணம் எல்லாம் தெரியாது. பெங்களூருவில்
உள்ள 'சங்கமா' என்ற தொண்டு நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக என்னை இணைத்துக் கொண்டேன்.
அந்த நிறுவனம் ஓரினஈர்ப்பாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோருக்காகச் செயல்படக்கூடியது.
அங்குள்ள நண்பர், பாமாவின் "கருக்கு" என்ற நாவலைக் கொடுத்தார். படிக்கத்
தொடங்கினேன், அதுதான் என்னுடைய முதல் வாசிப்பு. அந்த நூலினை அடிப்படையாக வைத்து உங்கள்
சமூகத்தின் வலிகளை எழுதுங்கள் என அவர் அறிவுறுத்தினார். 15 வயது முதல் 75 வயது வரையுள்ள
15 திருநங்கைகளின் வாழ்க்கையை நேர்காணல் எடுத்து நூலாக வெளியிட்டேன். அதுதான் 2004-இல் அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட "உணர்வும் உருவமும்" என்ற நூலாகும்.
அதுவரை இந்தியாவில் ஒரு திருநங்கையால் எழுதப்பட்ட திருநங்கையர் குறித்த நூல் வெளிவரவில்லை.
இதன் பின்னராக என்னுடைய வாழ்க்கை வரலாற்றினை "வெள்ளை மொழி" எனும் பெயரில்
எழுதினேன். நான்பட்ட வலிகளை எழுதினால் என்னை என்னென்ன செய்வார்கள் என்ற அச்சமிருந்ததால்
எழுதாமால் இருந்தேன். காவலர்கள் என்னை நிர்வாணமாக
நிற்க வைக்கப்பட்ட வலிகளை இப்போது பேசுவது போலவே இயல்பான நடையில் எழுதினேன். தன்னைப்
புனிதராகக் காட்டிக் கொள்ளவே எழுதவருகின்றார்கள் பலரும். நான் வலிகளை எழுதவேண்டும்
என்ற எண்ணத்தில் எழுத வந்தேன்.
வெள்ளைமொழி
என்ற நூல் முதலில் ஆங்கிலத்தில் "The Truth about me" என்ற பெயரில் வ.கீதா
அவரின் மொழிபெயர்ப்பில் வெளியானது. கன்னடத்தில் கெளரி லங்கேஷ் அக்கா "பதுக்கு
பயலு" எனும் பெயரில் து.சரஸ்வதி மொழிபெயர்த்த நூலைப் பதிப்பித்தார். "உணர்வும்
உருவமும்" ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த
இரண்டு நூல்களையும் 320 க்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டத்தில்
வைத்துள்ளனர் . இந்த இரண்டு நூல்கள் வெளிவந்த சமயத்தில்தான் முற்போக்கு இயக்கங்களில்
என்னைப் பேச அழைத்தனர். கல்லூரி, பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் என்னைக் கருத்தரங்குகளில்
பேச அழைத்தனர். எங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைக்குப்
பல முற்போக்கு இயக்கங்கள் முன்வந்தன.
இந்த
நூல்கள் வந்தபின்னர் நிறையபேர் எழுதவந்தனர்.
மூன்றாம்
பாலினம் என்றால் திருநங்கைகள் பற்றித்தான் பெரும்பாலும் பேசுகின்றனர். ஆனால் திருநம்பிகளைப்
பற்றி எண்ணுவதில்லை. எனவே அவர்களை எழுதவேண்டுமென நினைத்து பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களின்
வாழ்க்கையை "A Life in Trans activism" என்ற பெயரில் எழுதினேன். அது ஆங்கிலத்தில்
வெளிவந்திருக்கிறது. அதனை ஆங்கிலத்தில் நந்தினி முரளி மொழிபெயர்த்தார். அவர் இந்நூலின்
துணையாசிரியர்.
2017
இலிருந்து நாடகத்துறையிலுள்ளேன். என்னுடைய வெள்ளைமொழி நூலிலிருந்து சிலபகுதிகளை எடுத்து
எம்.கணேஷ் அவரின் இயக்கத்தில் கன்னட மாணவர்கள் கர்நாடகாவில் நாடகமாகப் போட்டனர். அவர்களோடு
இணைந்து நானும் நடிக்கத் தொடங்கினேன். தமிழில்
அதனை ஓரங்க நாடமாக்கப் பேராசிரியர் அ. மங்கை வழிகாட்டி வருகிறார்.
எனக்கு
வயது ஐம்பதிற்கும் மேலாகிறது. இதுவரை எங்கள்
விடியலுக்காகப் போராடிக் கொண்டேயிருக்கிறோம். என் உடல் இப்போது எதற்கும் ஒத்துழைப்பதில்லை.
பிச்சையெடுக்கவோ பாலியல் தொழில் செய்யவோ எனக்கு விருப்பமில்லை. கருத்தரங்குகளில், கூட்டங்களில்
பேசுவதற்காகக் கொடுக்கும் தொகை போதுமானதாக இல்லை.
வலிநிறைந்த
எழுத்துகளை எழுதுபவர்கள் குறித்து வாசித்து நம்மளவில் வருந்துகிறோமேயொழிய எங்களுக்காக
இந்தச் சமூகம் என்ன செய்திருக்கிறது. பொருளாதார ரீதியாக நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
இந்த கொரோனோ காலகட்டத்தில் படுமோசமான நிலையை நோக்கிச் சென்றுள்ளது.
இவ்வாறாகத்
தன் எழுத்துச் சூழல் பற்றிப் பேசினார். இதனைத் தொடர்ந்து நண்பர்கள் எழுப்பிய வினாக்களுக்கும்
விவாதங்களுக்கும் விடையளித்துப் பேசினார்.
விவாதத்தில்
சிறுபகுதி
வினா:
திருநங்கையரை மூன்றாம் பாலினம் என்று குறிப்பிடுவது சரியாக இருக்குமா ? அவர்களைக் குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் என்ன சொல்
பயன்படுத்தப்படுகிறது?
திருநங்கை,
திருநம்பி இவர்களைக் குறிக்க ஆங்கிலத்தில் தனித்தனி சொற்கள் பயன்படுத்தப்படுகின்றனவா?
ஆ.ரேவதி
: திருநங்கையரையோ, திருநம்பியரையோ மூன்றாம் பாலினம் எனச் சொல்வதில் தனிப்பட்ட முறையில்
எனக்கு உடன்பாடு இல்லை. திருநங்கையாகிய நாங்கள் பெண்ணாகவும் திருநம்பி ஆகியவர்கள் ஆணாகவும்
நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் எங்கள் பாலினத்தை ஆண் என்றோ அல்லது பெண்
என்றோ குறிப்பிட்டுக்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இச்சமூகம் எங்களுக்கு அப்படியான
நிலையைத் தருவதில்லை. எங்களைத் தனிமைப்படுத்திப் பார்க்கவே செய்கிறது. அவர்களில் ஒருவராக
எங்களை ஏற்றுக்கொள்ளாதபோது எங்களுக்கென தனித்த அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் நாங்கள்
உருவாக்கிக்கொள்ள முயல்கிறோம் எனும் பட்சத்தில் மூன்றாம் பாலினம் எனும் பதம் எங்களுக்குது
தேவைப்படுவதாய் அமைகிறது. மேலும் ஆங்கிலத்தில் இதனைக் குறிக்க Third Gender எனும் சொல்
பயன்படுத்தப்படுகிறது. திருநங்கைகளைக் குறிக்க Transwomen என்றசொல்லும் திருநம்பியரைக்
குறிக்க Transmen என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.
வினா:
திருநங்கை திருநம்பியரின் காதல், திருமண வாழ்க்கை இது பற்றியெல்லாம் தங்களின் கருத்து
என்ன ?
ஆ.ரேவதி
: சமூகத்தில் நிலவும் தற்போதைய சூழலில் காதல், இல்லறம் இதெல்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும்
சரியான முறையில் அமைகிறதா என்பதே அய்யம்தான். வரதட்சணைக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை
எடுக்கவியலும் இக்காலத்தில் கூட பெண்களின் சமயலறை அடுப்புகள் திடீரென வெடிக்கும் நிலையில்
தான் உள்ளது. இதில் எங்களின் காதலும் இல்லறமும் எவ்வகையில் பாதுகாப்பானதாய் அமையும்.
திருமண
பந்தத்தின் முதன்மை நோக்கமே குழந்தைப்பேறு தான். அதுஇல்லாத பட்சத்தில் எங்கள் திருமணம்
எவ்வாறு அமையும். ஒருவேளை காதலின் நோக்கில் மட்டும் ஒருவர் எங்களைத் திருமணம் செய்ய
முன்வந்தால் அவரை அவர் குடும்பமும் இச்சமுதாயமும் ஏற்றுக்கொள்ளுமா? எங்களோடு ஒருவர்
நட்பாகவோ, சகோதரப் பாசத்துடனோ, தாய்மை உணர்வோடோ பழகினால் கூட அவரை ஏளனமாகப் பேசும்
சமூகம் இது. இந்நிலையெல்லாம் மாறும்போது எங்களுக்கும் காதல், இல்லறம் இவையெல்லாம் சாத்தியமாகும்.
வினா:
நம் சமுதாயத்தின் குடும்ப அமைப்புமுறை அதிகாரங்களுக்குட்பட்டது. தந்தை, தாய், மகன்,
மகள் இவ்வாறான அதிகாரக் கட்டமைப்புகள் கொண்டது. அதேபோல் திருநங்கையர் ஒரு குடும்பமாக
வாழும்போது அங்கும் இதுபோல் அதிகாரக் கட்டமைப்புகள் உண்டா?
ஆ.ரேவதி
: ஏன் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கின்றீர்கள். இதனைப் பொதுசமூகத்திடம் கேட்க வேண்டும்.
இது மாறவேண்டுமென்பதே என் விருப்பம். ஆனால் எங்களுக்குள் சாதி, மதம் போன்ற பிரிவினைகள்
ஏதுமில்லை. எனக்குக் குருவாக இருந்தவர்கள் சொல்வதைக் கேட்டு நான் நடந்திருக்கிறேன்.
ஆனால் இப்போது என்னைவிட வயது குறைந்தவர்கள் என் மகள் போல் பேத்திபோல் இருப்பவர்களுக்கு
நான் முழு சுதந்திரம் அளித்திருக்கிறேன். அதிகாரக்கட்டமைப்புகளை நான் அவர்கள் மீது
செலுத்துவதில்லை. அவர்களையும் அவ்வாறே வழிநடத்துவேன்.
வினா
: மாற்றுப் பாலினத்தார்க்கென தனியான பள்ளி, கல்லூரி, கல்வி நிலையங்கள் இவ்வாறெல்லாம்
தொடங்கப்படுவது சரியா? இதைப்பற்ற உங்கள் கருத்தென்ன?
ஆ.ரேவதி
: தனிப்பட்ட முறையில் இவற்றிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. இது என்னுடைய சமூகம். இங்கிருப்பவர்கள்
எல்லோருமே என் உறவுகள். இவர்களோடு இணைந்திருக்கவே நான் விரும்புகிறேன்.
ஆனால்
என்னைப் போன்றோரின் அங்கீகாரத்திற்காக இச்சமூகம் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றால்
அதை நாங்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. பள்ளிகளில், கல்லூரிகளில் எங்களை யாரும்
சமமாக நடத்தாதபோது இது போன்ற முடிவுகளை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஒருவேளை நான்
படிக்கும் காலகட்டங்களில் இதுபோன்ற தனியான கல்விநிலையங்கள் இருந்திருந்தால் நானும் படித்து பட்டம் பெற்றிருக்கக்கூடும். எனவே இது போன்ற
முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.
வினா:
திருநங்கையர், திருநம்பியர் வாழ்வியல் முன்னேற என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்
என நினைக்கிறீர்கள் ?
ஆ.ரேவதி
: மாற்றுப் பாலினத்தவர்கள் கல்வி பெற வேண்டும். இச்சமுதாயத்தின் எல்லாவிதமான செயல்பாடுகளிலும்
அவர்கள் பங்குபெற வேண்டும். அவர்களுக்கென அரசியலமைப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும்.
அரசு வேலைவாய்ப்புகள், ஆட்சி அதிகாரங்கள் என அனைத்திலும் அவர்கள் பங்குகொள்ள வேண்டும்.
இச்சமூகம் என்னைப் போன்றவர்களை இன்னும் மரியாதையோடு
நடத்துவதில்லை. அரசமைப்புகளும் சுயதொழில் அமைப்புகளை ஏற்படுத்தி ஊதுபத்தி தயாரிக்கவும்,
சோப்புத் தயாரிக்கவும் பழக்குவதை விடுத்து எங்கள் வாழ்வாதாரங்களை உயர்த்தும் வகையில்
எங்களுக்குக் கல்வியிலும், ஆட்சி அதிகாரங்களிலும் சமஉரிமை வழங்கும்போது எங்கள் வாழ்வியல்
நன்முறையில் அமையும். எங்கள் சகோதர, சகோதரிகள் வாழ்வியல் முன்னேற வேண்டுமென 30 வருட
காலமாக நாங்கள் போராடுகிறோம். எங்கள் போராட்டம் வெற்றிபெறும் என்று நம்புகிறோம்.
நெருக்கடிகாலச்
சூழலில் நம்மோடு ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுத்த ஆளுமை ஆ.ரேவதி அவர்க்கு உளங்கனிந்த
நன்றிகள். நமது கூட்டத்தில் அவரைப் பேச வைக்குமாறு அறிவுறுத்தி நிகழ்வு நடைபெற உறுதுணையாக
இருந்த தோழர் பிரியா பாபுவிற்கு அன்புகலந்த நன்றியும் வணக்கமும்.
வெளியீடு
வெட்சி
இதழுக்கான திணைக்களம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக