வியாழன், 16 ஜூலை, 2020

த.வ.அநார்யா கவிதைகள்

 

1

காயும் ஓடையின் சலசலப்பு

காதைக்கிள்ளும் நேரம் அது

காட்சிகள் கட்டிப்போட்டு

கண்களை கவிழ்த்துவிடும்

அது காதலி முகத்தைக் கூட

மறக்கச் செய்து விடும்.......

விழிநீரின் வழியமைப்பு போல

நினைவலைகள் தாண்டவமாடும்.

நிலவொளியின் நீள்ஒளி ஒன்று

மனதைக் குழப்பி

உணர்வை வேட்டையாடி

ஓயாமல் ஓய்ந்திருப்பது போல்

நினைக்கத் தோன்றும்.

வேலமரத்தின் வேதனைகள்

காற்றில் கேட்கும்,

அது காதுகளை எட்டும்போது

ஆலமரத்தைவிட மிகப் பெரிய

வலிகளைக் கொட்டும்.

வாய்ச்சொற்கள் வலுவிழந்து போகும்

சிறு இலையசைவினால் கூட .

காற்றின் நறுமணம்

காதால் கூட உணரப்படும்,

கண்ணால் கூட வாழ்த்தப்படும்.

புதுச்சூழல் அல்லவா.....

புதிய உணர்ச்சிகள் பூக்கத்தான் செய்யும்.

உதிர்ந்த பிறகு தெரியும்

என் அடுத்த சூழல் பற்றி....

தெரியாமல் கூட போகலாம்

யாருக்குத் தெரியும்..........

 

2

சுதந்திரக் காற்று அடிக்கிறது - என்று

சுற்றிவளைத்துக் குழப்பும் கூட்டங்களுக்கிடையில்

சூதானமாக தப்பிக்கலாம் என்று

சூதுகவ்வும் காலத்தில் நினைக்கும்

சுகவாசியான சிலர்களின்

சொப்பனங்கள் நிறைவுபெறுவது எப்போது?

 

மதிமயங்கி,  உடல் வதங்கி

மதிய சோற்றுக்கு பள்ளி அனுப்பும்

மக்களின் மனதில் உள்ள

அரசியல் பயம் குறைவுபெறுவது எப்போது?

 

உடம்பை வளர்க்க உயிர்களைக் கொல்லும்

பானம் அருந்த இரத்தம் உறிஞ்சும்

உயர்வர்க்க மூடர்களின்

அரசியல் அதிகாரம் மறைவுபெறுவது எப்போது?

 

கேள்விகள் கேட்டால் மட்டும்.....

மாறப்போவது ஒன்றுமில்லை.

தானாக மாறும் என்பது மூடத்தனம்,

மாற்றக் கொடு உன் மூலதனம்,

பின்பு கொண்டாடுவோம்

உண்மையான சுதந்திர தினம் ....

 

இன்றிருக்கும் உணர்ச்சியை

ஊதிப்பெருக்கினால் தவறில்லை.

தனிமையில் இறங்கி

தள்ளாடச் சொல்லவில்லை.

சேர்ந்தே இறங்குவோம் களத்தில் ....

சேர்ந்தே பெறுவோம்

சேர்ந்தே கொடுப்போம்

அது அடியானாலும் சரி.....


        2019 , மார்ச் - மே பருவ இதழில் வெளியானவை.



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்

  வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்   இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழல் ப...