வெள்ளி, 31 ஜூலை, 2020

பெண்கவிஞர்களின் பெண்மொழிப் புனைவுகள் - முனைவர் இரா.தமிழரசி

நிகழ்வு - 7

30-07-2020, மாலை 6.00 மணியளவில் Google Meet செயலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் இரா.தமிழரசி அவர்கள் பெண்கவிஞர்களின் பெண்மொழிப் புனைவுகள் எனும் பொருண்மையில் உரையாற்றினார். உரையைக் கேட்க..

நிகழ்வு இனிதே நடந்தேற துணைநின்ற நறுநிழல் இராதாகிருஷ்ணன், #இராகுலன், #Asaimani arumugam ஆகியோர்க்கு நன்றிகள். நண்பர்கள் உரை மீதான விவாதங்களை முன்வைக்கலாம்.
வெட்சி நிகழ்வு#7: பெண் கவிஞர்களின் பெண்மொழிப் புனைவுகள் குறித்து முனைவர் தமிழரசி அவர்களின் உ
https://www.youtube.com/watch?v=BKTZTx7woio&feature=youtu.be&fbclid=IwAR2zsGbeXjXDuBFArPLX8phGjaw_KpE_cgL3nn04iEXeDnvAmTKfhFdEprk

புதன், 22 ஜூலை, 2020

கோவை ஞானி காலமானார் - இரங்கற் செய்திக்குறிப்பு

இரங்கல் செய்திக் குறிப்பு

தமிழாய்வுலகின் மூத்த அறிஞரும் போராளியுமான கோவை ஞானி அய்யா இன்று காலை 11.15 மணியளவில் காலமானார். இச்செய்தியறிந்து நமது திணைக்களம் ஆழ்ந்த துயரடைகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே நோயினால் பீடிக்கப்பட்டிற்ற அவரின் பொன்னுடல் இன்று நம்மிடமில்லை. ஆனால் அவரின் ஆன்மா எழுத்துகளிலும் அவரின் நட்புகளிலும் உறைந்திருக்கிறது. நம் கண்முன்னே இயற்கையைப் பேணிய மனிதர், இயற்கையின் அங்கம் நாம் என்பதை உணர்ந்து செயல்பட்ட உயிர்நேயங்கொண்டவர். தமிழை நவீனப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக இயங்கியும் பேசியும் எழுதியும் வந்தவர். மார்க்சியத்தைப் பெரியாரியத்தோடும், நம் அறிவுமரபோடும் இணைத்தவர். சங்க இலக்கியம், தொல்காப்பியம், சித்தர் மரபு, சைவ மரபு ஆகியவற்றை இணைத்து தமிழ்ச்சிந்தனை மரபை நவீனமாக்கியவர். தமிழ் இடதுசாரி ஆய்வுகளின் போதாமைகள் குறித்துப் பேசியவர். மண்ணுக்கேற்ற மரபைப் பேணுவது குறித்து எழுதியவர். தமிழ்க்கல்வி குறித்தும் சிந்தித்து எழுதியிருக்கிறார்.

தமிழ்ச்சிந்தனை மரபின் கொடையான திணைக்கோட்பாட்டை விரிவாக்கம் செய்தவர். அவரின் மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தி ஆய்வுகளைச் செய்ய உதவியவர். பல நூலகங்களுக்குத் தன் நூல்களைக் கொடையாக அளித்தவர். அவர் அடிப்படையில் பள்ளித் தமிழாசிரியர். இலக்கிய அமைப்புகளைக் கோவையில் நடத்தியவர். கவிஞர். நிகழ், தமிழ்நேயம் போன்ற சிற்றிதழ்களை நடத்தியவர். பன்முகங் கொண்ட ஆளுமை.

அவர் தமிழ்ச் சூழலுக்கு அளித்த கொடைகளில் சில, இந்திய தத்துவத்தில் பிரச்சனைகள் (புதுப்புனல் - 2015), மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் (1988), எண்பதுகளில் தமிழ் நாவல்கள் (1994), மார்க்சிய அழகியல் (2002), தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் (2008), செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் (2010), ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் (2012 - புதுப்புனல்), இன்று ஏன் தேவை சங்க இலக்கியம் (தொகுப்பாசிரியர்-2014).

தமிழாய்வில் ஏற்பட வேண்டிய நவீனம், புதியபுதிய முறையியல்கள் குறித்து அக்கறையுள்ளவர்.  

ஒருமுறை நமது குழுவிலுள்ள நண்பர்கள் சந்திக்கச் சென்றிருந்தபோது, நண்பர் ஜவகர் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். எங்களின் ஆய்வுகுறித்தும், ஆர்வம் குறித்தும் எடுத்துச் சொன்னபோது அவர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி முகத்தில் பொலிந்தது. நம்பிக்கையான, ஆர்வமுடைய இளந்தலைமுறையைக் கூடவே வைத்துள்ளீரென பெருமிதம் கொண்டார். எதிர்காலச் சூழல் குறித்தும் கவலைப்பட்டார். வயது பாராது நட்பு பாராட்டுபவர். அவர் எப்போதும் கையில் பகைமுரணைத் தொட்டதில்லை. நட்புமுரண் அவரின் வலிமை.

            நம்மிடமுள்ள ஊக்கமும் நம்பிக்கையெல்லாம் அவரின் எழுத்துகள்தான். அதனைக் கூடுமானவரை எடுத்துச் செல்வோம். வாசிப்போம். விவாதிப்போம்.

உடன்தானில்லை, அவர் நம்மோடே உள்ளார். நாம் அடைகின்ற சுயமரியாதை, பெறுகின்ற இனமானம், அறிவார்ந்த தமிழ்ச்சமூகம், உயிர்நேயம், யாவற்றிலிருந்தும் விடுதலை எங்கும் எங்குமாய் ஞானியே நிறைந்திருப்பார்.

 

வெற்றிடம்

வெற்றிடத்தில்

சில மலர்களை முளைக்கவிடு.

வெற்றிடமும் இப்பொழுது

நான் இல்லாமல்...

என் அருகில் நீ இல்லை

ஆனால்

என் நினைவாக நீ இருப்பாய்

உன் நினைவுகள்

எனக்குள் படுகின்றன.

 

நண்பனே நீ அழுகிறாய்

என்னையும் நினைக்கிறாய்

நன்றி.

எதற்காக நாம் அழுகிறோம்

கூடி நடந்தோம்

நடந்த தடங்களை நினைத்தா

நாம் நடந்து பதிந்த தடத்தில்

என் தடயம் விட்டுப் போனதற்கா

என்னை இழப்பதால்

உன் விழியில் எதையாவது

இழப்பதற்காகவா

எதற்காக அழுகிறாய்

அழ வைக்கிறாய்

சேர்ந்தே நடந்தோம்

சில தடயங்களை விட்டு

இனி முடியுமா

நான் இல்லாமல்

நீ நடக்க வேணும்

 

- கோவை ஞானி

(நன்றி : Pothi கவிதை முகநூல் பக்கத்திலிருந்து)

வெட்சி இதழுக்கான திணைக்களம்

நாள் : 22-07-2020

இடம் : திருவாரூர்


சனி, 18 ஜூலை, 2020

தமிழம் வலை

பொள்ளாச்சி நசன் அவர்கள் தொடங்கிய வலைதளம் 

தமிழ் மரபுசார்ந்த செய்திகளையும் தமிழ்க்கற்றல், கற்பித்தல் தொடர்பான செய்திகளையும் வெளியிட்டு வருகின்றது. நிறைய ஆவணப்படுத்தும் பணிகளை இந்த இணையதளம் செய்துள்ளது. ஓய்வுபெற்ற முதுநிலை பள்ளி ஆசிரியர். தொடர்ச்சியாகத் தமிழ்க் கற்றல், கற்பித்தல் தொடர்பாக இயங்கியும் எழுதியும் வருகின்றார். தமிழம் பண்பலையையும் நடத்தி வருகின்றார். மேலதிக விவரங்களுக்கு https://thamizham.net/.

தொடக்கநிலையினர்க்கான தமிழ்க்கற்றல் கையேடு http://www.thamizham.net/translate/view%20english.pdf

தமிழம் பண்பலையைக் கேட்க. http://www.thamizham.net/thamizhamfm.htm

திருக்குறளைப் படிக்க, இசைவடிவில் கேட்க http://www.thamizham.net/tkl300/index.html

தமிழ்ச் சிற்றிதழாளர்களின் விவரப் பட்டியல் http://www.thamizham.net/ith


azh/editorphoto/editor.htm

கா. கிரா கவிதைகள்


1

மீண்டெழுந்த இரவுகளில்

மாண்டுபோன கனவுகள்

மாறுதலைத் தேடித்தேடி

மர்மங்கள் பலகண்டு

காய்ந்துபோன காலங்களில்

ஓய்ந்துபோன நேரமென

தீர்ந்தழுத தீர்வுகளால்

அடையாளம் காணாதுபோன விதைகள்

இன்னும் மீளத்துடிக்கிறது

மீண்டும் அந்த இரவுகளில்!

(வெட்சி - 2018)


2

ஆதரவு இழந்த ஏடுகள்

அடையாளம் காணாது கிடக்க

அவிழ்ந்துபோன என் கால்கள்

அந்தரமாகத் தொடங்கின

மண்ணகன்ற சோலை

மாரழைத்தபடி மந்திரம் பாடியது

மாலை வண்ணம் மனமழைக்க

ஏடு அவிழ்ந்த கோடுகள்

நிழல் அவிழத் தொடங்கியதும்

அவிழ்ந்துபோன கால்களாலேயே

அவிழ்ந்துபோனது என்ஏடுகள்

 

(மார்ச் - மே 2019 பருவஇதழ்)

 

3

வேர் தொலைத்த கனவுகளுக்கு வண்ணம் பூச

ஈரக்குருதிகள்

கற்பனைக் களத்தில் புலம்பிக் கிடக்கின்றன

கருவுற்ற நினைவுகள் 

குருதியின் வாசனையில் 

முறிந்த விழுதுகளாய்க் கிடக்க

உணர்வுகளை மீட்டெடுக்க

குருதிகளுமில்லை, நினைவுகளுமில்லை

கனவுகள் மட்டும்

ஏதோ ஒரு களத்திற்காக 

மிச்சமாகியே கிடக்கிறது


                    (அக் - டிசம்பர், 2019 பருவஇதழ்) 

வியாழன், 16 ஜூலை, 2020

த.வ.அநார்யா கவிதைகள்

 

1

காயும் ஓடையின் சலசலப்பு

காதைக்கிள்ளும் நேரம் அது

காட்சிகள் கட்டிப்போட்டு

கண்களை கவிழ்த்துவிடும்

அது காதலி முகத்தைக் கூட

மறக்கச் செய்து விடும்.......

விழிநீரின் வழியமைப்பு போல

நினைவலைகள் தாண்டவமாடும்.

நிலவொளியின் நீள்ஒளி ஒன்று

மனதைக் குழப்பி

உணர்வை வேட்டையாடி

ஓயாமல் ஓய்ந்திருப்பது போல்

நினைக்கத் தோன்றும்.

வேலமரத்தின் வேதனைகள்

காற்றில் கேட்கும்,

அது காதுகளை எட்டும்போது

ஆலமரத்தைவிட மிகப் பெரிய

வலிகளைக் கொட்டும்.

வாய்ச்சொற்கள் வலுவிழந்து போகும்

சிறு இலையசைவினால் கூட .

காற்றின் நறுமணம்

காதால் கூட உணரப்படும்,

கண்ணால் கூட வாழ்த்தப்படும்.

புதுச்சூழல் அல்லவா.....

புதிய உணர்ச்சிகள் பூக்கத்தான் செய்யும்.

உதிர்ந்த பிறகு தெரியும்

என் அடுத்த சூழல் பற்றி....

தெரியாமல் கூட போகலாம்

யாருக்குத் தெரியும்..........

 

2

சுதந்திரக் காற்று அடிக்கிறது - என்று

சுற்றிவளைத்துக் குழப்பும் கூட்டங்களுக்கிடையில்

சூதானமாக தப்பிக்கலாம் என்று

சூதுகவ்வும் காலத்தில் நினைக்கும்

சுகவாசியான சிலர்களின்

சொப்பனங்கள் நிறைவுபெறுவது எப்போது?

 

மதிமயங்கி,  உடல் வதங்கி

மதிய சோற்றுக்கு பள்ளி அனுப்பும்

மக்களின் மனதில் உள்ள

அரசியல் பயம் குறைவுபெறுவது எப்போது?

 

உடம்பை வளர்க்க உயிர்களைக் கொல்லும்

பானம் அருந்த இரத்தம் உறிஞ்சும்

உயர்வர்க்க மூடர்களின்

அரசியல் அதிகாரம் மறைவுபெறுவது எப்போது?

 

கேள்விகள் கேட்டால் மட்டும்.....

மாறப்போவது ஒன்றுமில்லை.

தானாக மாறும் என்பது மூடத்தனம்,

மாற்றக் கொடு உன் மூலதனம்,

பின்பு கொண்டாடுவோம்

உண்மையான சுதந்திர தினம் ....

 

இன்றிருக்கும் உணர்ச்சியை

ஊதிப்பெருக்கினால் தவறில்லை.

தனிமையில் இறங்கி

தள்ளாடச் சொல்லவில்லை.

சேர்ந்தே இறங்குவோம் களத்தில் ....

சேர்ந்தே பெறுவோம்

சேர்ந்தே கொடுப்போம்

அது அடியானாலும் சரி.....


        2019 , மார்ச் - மே பருவ இதழில் வெளியானவை.



  

நிகழ்வு - 3 , த.செல்வராஜ் : : ஆ.சிவசுப்பிரமணியனின் வரலாறும் வழக்காறும்

10.05.2020 மாலை 4.00 மணிக்கு Zoom செயலி வாயிலாக நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் செல்வராஜ் தங்கவேல் ஆ.சிவசுப்பிரமணினின் வரலாறும் வழக்காறும் நூல்குறித்த அறிமுகத்தையும், கவிஞர் இரா.பூபாலன் - கார்த்திக் திலகன் எழுதிய அந்த வட்டத்தை யாராவது சமாதானப்படுத்துங்கள் என்ற நூலையும் அறிமுகம் செய்து உரையாற்றினார்.


செல்வராஜின் உரை

வரலாறும் வழக்காறும்


. சிவசுப்பிரமணியன்அவர்கள் நாட்டார் வழக்காற்றியல் துறையில் மிக முக்கியமான ஆய்வுகளைப் பல ஆண்டுகளாக செய்து வருபவர்அவர் எழுதியவரலாறும் வழக்காறும்என்கிற இந்த நூல் வரலாற்றின் மீது தாக்குதல்களைத் தொடுக்கிறதுவரலாற்றைக் கேள்விக்குட்படுத்துகிறதுபத்து ஆய்வுக்கட்டுரைகளைக் கொண்டிருக்கிற இந்த நூல் வரலாற்றின் மீதான நம் பார்வையை மாற்றக்கூடியதாய் அமைந்திருக்கிறது

இந்தியாவின் வரலாற்று வரைவை உருவாக்கிய ஐரோப்பியர்கள்  தன்னின உயர்வுவாத்திற்கு ஆட்பட்டவர்கள்இவர்கள் தங்களின் வரவால் தான், நாகரிகத்தின் ஒளியே நம்மீது பட்டது எனக் கருதினர். இதனால்  நம் நாட்டின் சமூகப்பண்பாட்டு வரலாற்றைப் புறக்கணித்து  நம் வரலாற்றை ஆண்ட மன்னர்களின் பட்டியலாக உருவாக்கினர்.

வரலாறு என்றால் மன்னர்கள் மட்டும் தானா? அதில் பொது மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஒரு எதிர்ப்புக்குரல் கூட எழவில்லையா? என்கிற கேள்விகளை எழுப்பும் நூலின் ஆசிரியர், வரலாறு என்பது பொதுமக்கள் சார்ந்த வரலாறாக எழுதப்படவில்லை என்கிறார்.  

வரலாற்றைப் பொதுமக்கள் சார்ந்ததாக எழுதுவதற்கு மக்களிடம் தொடர்ந்து வழங்கி வரும் கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள் மற்றும் சமூக நினைவுகள் போன்ற வழக்காறுகள் உதவுகின்றனஇவ்வழக்காறுகள் ஒரு இனத்தின் வாழ்வியலை, பண்பாட்டை, அவ்வினத்தின் மீதான ஆதிக்கத்தை   அடையாளப்படுத்தும் விதமாக உள்ளன. எனவே, இத்தகைய வழக்காறுகளைக் கொண்டு பொதுமக்கள் சார்ந்த வரலாற்றை எழுத முடியும் என்கிறார் ஆசிரியர்.

பழமொழிகள் நமக்கு வரலாற்றுச் செய்தியைப் புலப்படுத்தும் தன்மை உடையன என்பதைஆனை துரத்தினாலும் ஆனைக்காவில் ஒண்டாதேஎன்கிற பழமொழியானது தமிழ்நாட்டில் நிகழ்ந்த சைவ, வைணவ மோதல்களினால் உருவானதே என்று விளக்கும்போது வழக்காறுகளின் முக்கியத்துவம் தெரிகிறது.

குடியானவர்கள் பிராமணர்களுக்குரிமையான நிலங்களைக் கைப்பற்றும் செயலைத் தொடங்கியபோது, தம் உயிரைக் காப்பாற்றும் விதமாக பிராமணர்கள் பிராமணப் பேயைப் படைத்து அச்சுறுத்தியிருக்கிறார்கள்பிரம்மஹத்தி என்னும் தோசத்தை உருவாக்கியதன் பின்னணியில் பிராமணர்களின் வர்க்க நலனும், வருண நலனும் மறைந்துள்ளன என்பதைக் கூறும்போது வரலாற்றின் மறுபக்கத்தை நம்மால் பார்க்க முடியும்.

அரசு அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட ஆவணங்களில் உழைக்கும் மக்கள் பற்றியான செய்திகள் என்பது சரியாக இடம்பெறவில்லைஇத்தகைய வரலாற்று ஆவணங்களிலுள்ள செய்திகள் நடந்ததை நடந்தவாறு கூறாமல், அதிகாரிகளின் முகமாகவே இருக்கிறதுஅவற்றில் உண்மைகளோடு மிகுதியான புனைவுகள் கலந்திருப்பதைக் காணமுடிகிறதுஆனால், உண்மையான நிலையினை அவர்களது வழக்காறுகள் நமக்குப் புலப்படுத்தி விடுகின்றன.   மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் கதைப்பாடல்களிலிருந்து  அவர்களது வாழ்வியல் முறைமையை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.


கல்வெட்டுகள், இலக்கியங்கள், பயணக் குறிப்புகள், தொல்லியல் சான்றுகள், நாணயங்கள், அரசு ஆவணங்கள் ஆகியன வரலாற்று வரைவில் சான்றாதரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றனஇவை மட்டுமின்றி மக்களிடையே வழங்கும் வாய்மொழி வழக்காறுகளும், வழிபாட்டுமுறைகளும் வரலாற்று வரைவிற்கான சான்றுகளாக அமையும் தகுதியுடையன என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.  


 

                     


வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்

  வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்   இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழல் ப...