வியாழன், 16 ஜூலை, 2020

இர.சம்பத்குமார் கவிதைகள்

 

1

ஐந்தாறு ஈக்களைத் தின்று

செறித்த பல்லியிடம்


சகுனம்

கேட்கிறார்கள்

பல்லியின் சகுனத்தில்

கசிந்து கொண்டிருக்கிறது

சில ஈக்களின் இரத்தம். 


(வெட்சி - 2017 இதழில் வெளியானது)

 

2

குறிஞ்சி நிலத்திலிருந்து

கவிதை எழுதத் தொடங்கினேன்

தேயிலைகளின் இடையே

வாழப்பழகாத புலியொன்று

உறுமியபடி கண்ணீர் விட்டது

 

கவிதைக்கு தோதாய்

முல்லை நிலம் வந்தேன்

நெடுஞ்சாலைக்காக வெட்டப்பட்ட

மரத்தின் இறுதி வேரின் குருதி

நெஞ்சை இறுக்கியது

 

மருதம் தேடி

வேகமெடுத்த கவிதைக்கு

காவேரியின் புலம்பலால்

மார்பு கணத்தது

 

நெய்தலிடம் சென்று

கவிதை முறையிட

தம் அலை நாவல்

கடலும் புலம்பியது

 

மனத்தை பாலை நிலமாக்கி

திரும்பிய கவிதைக்குத்தான்

இப்பொழுது நான்

ஆறுதல் சொல்லியாக வேண்டும்


2019 , மார்ச் - மே பருவ இதழில் வெளியானது.

நூல் மதிப்புரை நி.கனகராசு, பேரா. கி.நாச்சிமுத்துவின் உலகம் தேடும் தமிழ்

 

     தாய்மொழிக் கல்வியின் தேவையைத் தமிழர்கள் உணரவேண்டிய காலமிது. வளர்ந்துவரும் நவீன உலகமயமாதற் சூழலில் ஆங்கிலமோகத்தால் கட்டுண்டு கிடைக்கும் தமிழர்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், வருங்கால தலைமுறையினர் தன்னுடைய தாய்மொழியில் எளிதில் உரையாடுவதற்கான சூழலை அமைத்துத் தருவது குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் குழந்தைகளினைத் தமிழ் வழியில் கற்க வைப்பதும், தனி அக்கறை எடுத்து குழந்தைகளுக்குத் தமிழைக் கற்றுத்தருதலாகும்.

     தமிழர்கள் தங்களுக்கான தனித்துவத்தையும், மரபையும் உணர வேண்டிய நேரமும் இது. இன்றைய நடுவண் அரசாங்கம் செய்து வரும் வடமொழித்திணிப்பு, தொல்லியல் ஆய்வுகள் முடக்கம், செம்மொழி நிறுவனத்தினை முடக்க நினைப்பது போன்ற தமிழ்மொழி அழிப்புப் பணிகள் ஒருபுறம். தமிழர்களே தமிழ்மொழிக் கல்வியை உணராது இருப்பது ஒருபுறம் எனத் தமிழ்ச்சூழல் மோசமாக இன்று முகம்சுழிக்க வைக்கின்றது.

     தமிழ் ஆராய்ச்சிப் பணிகளும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. முன்பெல்லாம் (1900களில்) ஆராய்ச்சி நூல் ஒன்று வெளிவருகின்றது என்றால், தமிழ், தமிழர் வரலாற்றில் எந்தவித அரசியல், சமுதாய, வரலாற்றியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது, முன்னைய தமிழ்மரபின் தொன்மை, புதிய வாழ்விற்கான வழியென்ன? என்பது குறித்தான ஆர்வத்தைத் தூண்டுவனவாய், எதிர்பார்ப்புகளையும் பரபரப்புகளையும் கொண்டிருப்பதாய் விளங்கின. ஆனால், இன்றைய ஆராய்ச்சியின் நிலையென்ன? நான்கு நூல்களைக் கையில் எடுத்துக் கொண்டு அதிலொரு இரண்டு வரி, இதிலொரு நான்கு வரி என்று தொகுத்தும், மற்றவர்களின் கருத்தையே தன்னுடைய ஆராய்ச்சிக் கருத்தாகத் திருடி, ஆய்வியல் பட்டத்தினைப் பெற்றுச் செல்லும் அவலநிலையில் இருந்துகொண்டு இருக்கின்றது. கருத்துத் திருடல்கள் பெருகிபோய்விட்ட காலத்தில் இருக்கும் நமக்கு விரல்விட்டு எண்ணும் அளவே அரிய ஆய்வு நூல்கள் வெளிவந்துகொண்டுள்ளன.  இந்த அவலங்களை நாம் உணர்ந்து, நம்மை நாமே மாற்றிக்கொள்ளவதற்கானத் தீர்வினை நல்குகின்றது பேராசிரியர் கி.நாச்சிமுத்துவின் ‘உலகம் தேடும் தமிழ்’.

    தமிழறிஞர் வ.அய்.சுப்பிரமணியம், ச.வே.சுப்பிரமணியம் ஆகியோரின் சிந்தனைப் பள்ளியில் வளர்ந்தவர் பேராசிரியர் கி.நாச்சிமுத்து. தமிழ் இலக்கியக்கல்வியை இலக்கணம், அகராதியியல், மொழியியல், ஒப்பியல், மூலபாடத்திறனாய்வு, வரலாறு, மொழிபெயர்ப்பு என்ற துறைகளோடு இணைத்துக் கற்பிக்கும் முறையைப் பின்பற்றுபவர். இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள், தமிழ் தந்த சான்றோர்கள், கரையே(ற்)றுங் கருத்துகள், தமிழ் இடப்பெயராய்வு, சோழன் பூர்வபட்டயம் கூறும் கொங்கு நாட்டு ஊர்கள் (பெயராய்வும் வரலாறும்) போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.                                      

    பேராசிரியர் கி.நாச்சிமுத்து பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் வெளியீடாக 2007 ஆம் ஆண்டில் வந்துள்ளது உலகம் தேடும் தமிழ் எனும் நூல். இந்நூலில் 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

       1. செம்மொழி தமிழும் பிற திராவிட மொழிகளும், 2. தமிழ் செம்மொழி, உலக மொழி, வாழும் மொழி இனிசெய்வதென்ன, 3. புத்தாயிரத்தாண்டில் தமிழ் இலக்கியமும் உலகமயமாதலும், 4. ஐம்பதாண்டுகளில் தமிழர் வாழ்வியல் களமாற்றங்கள், 5. சங்க காலத்தில் தமிழ் வளர்ச்சி, 6. ஆங்கிலமயமாதல்,  7. தமிழில் வடமொழி கற்பது வேறு, கலப்பது வேறு, 8. தமிழ் உச்சரிப்பு, 9. அகராதி முயற்சிகள், 10. ஜெர்மானிய மொழி படிக்க ஒரு அருமையான அகராதி தமிழ். ஜெர்மானிய உறவுக்கு ஒரு இணையற்ற         மொழி உறவுப்பாலம்,  11. தமிழியல் ஆய்வு - நேற்று இன்று நாளை, 12. நோக்கு நூல்களின் தேவை (இலக்கியம்)

    12 கட்டுரைகளில் பெரும்பாலானவை, தமிழ்க்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், தமிழ்இலக்கியக்கல்வியில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் பேசுகின்றன.

      ‘செம்மொழி தமிழும் பிற திராவிட மொழிகளும்’ எனும் தலைப்பிலமைந்த கட்டுரை, திராவிட மொழிகளுக்கிடையேயான உறவை மூன்று நிலைகளில் எடுத்துரைக்கின்றது.              

         1. குடும்ப உறவு, அதனால் உண்டான பொதுமொழி அமைப்பு, இலக்கியப் பாரம்பரியம்.

         2. நெருங்கி வாழ்ந்த காரணத்தால் ஏற்பட்ட பரஸ்பரக் கொடுக்கல் வாங்கல்கள்.

    3. மொழிச்சிறுபான்மையினராகவும் பெரும்பான்மையினராகவும் பொது நிலப்பரப்பில் பொது ஆட்சியில் நெருங்கி ஒத்த மொழிச் சூழலில் வாழ்ந்த அல்லது வாழ்ந்துவரும் ஒத்துணர்வு.

    இந்த உறவுநிலைகளை திராவிட மொழிக்குடும்ப இலக்கியவியலாளர்கள் உணரவில்லை. இதனால்தான், சங்க இலக்கியம், திருக்குறள் போன்றன தொல்திராவிட இலக்கியங்கள். தமிழுடன், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு போன்ற மொழிகள் இணைந்திருந்த காலத்தில் தோன்றியன என்பதையுணராது, தமிழ் மொழிக்கு மட்டுமே உரிய இலக்கியங்களாகத் திராவிடர்கள் எண்ணியிருப்பது வருந்தத்தற்குரியவொன்று என்கிறார் ஆசிரியர். 

 வரலாற்று ஆய்வாளர்கள் திராவிட மொழிக்கூறுகளைச் சங்க இலக்கியங்களில் காணக்கிடப்பதை எடுத்துரைத்துள்ளனர் என்றும், திராவிட மொழிகளையும், அவற்றிலுள்ள இலக்கியங்களைக் கற்பதற்குப் பல்கலைக்கழகங்களில் அண்டை மாநில மொழித்துறைகளை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஆசிரியர்.

   ‘தமிழ் செம்மொழி,       உலக   மொழி, வாழும் மொழி இனிசெய்வதென்ன’, ‘புத்தாயிரத்தாண்டில் தமிழ் இலக்கியமும் உலகமயமாதலும்’, ‘ஐம்பதாண்டுகளில் தமிழர் வாழ்வியல் கள மாற்றங்கள்’ ஆகிய மூன்று கட்டுரைகளும் தொழில்மயம், தேசியமயம், உலகமயம், பொருளாதாரமயம் என்ற அடிப்படையில் தமிழர்கள் தமிழ்க்கல்வியையும், மொழியையும் சீரழித்துவரும் அவலங்களைப் பற்றி இயம்புகின்றார் பேரா.கி.நாச்சிமுத்து.

      இன்று பள்ளிக் கூடங்களில் ஆரம்பக் கல்வி முதல் பட்டப்படிப்புகள் வரை தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியைவிட ஆங்கிலக்கல்வியோ அல்லது இந்திவழிக் கல்வியோதான் இருக்கின்றது. ஆட்சிமொழியாகத்தான் தமிழில்லை. அரசு சின்னத்தில்கூட தமிழில்லை. அறிவிப்புப்பலகைகள், புகைவண்டிப் பயணச்சீட்டு, வங்கிகளில் தமிழில்லை.                                   தமிழ்நாட்டிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பெயர்ப்பலகை இருக்க கோரிக்கை வைத்து அதன்மூலம், அவர்கள் பெயர்ப்பலகை வைக்கும் அவலநிலை உள்ளது. நம்முடைய அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குக் கூட அரசாங்காங்களை நோக்கி இருக்க வேண்டியுள்ளது.

   நீதித்துறை, சமயத்துறை, வணிகத்துறை, இசைத்துறை, இதழியல் துறை ஆகிய துறைகளில் தமிழ்மொழியின் ஆட்சியில்லை. எல்லாம் ஆங்கிலமும் இந்தியும்தான். தமிழ் எங்குதான் இருக்கின்றது அல்லது எங்குதான் தமிழைத் தமிழர்கள் பயன்படுத்துகின்றார்கள் என்றால், திரைப்படங்கள் போன்ற பொழுபோக்குக் கருவிகளில் மட்டுமே. அறிவுத்தளங்களிலிருந்து தமிழை விடைபெறச் செய்துவிட்டோம். எந்தவொரு மொழி அறிவு, சிந்தனைத்தளங்களிலிருந்து வெளியேறுகிறதோ, அந்த மொழி அழிவுநோக்கிச்      செல்கின்றது.

     நாடு போனால்கூட மீட்டுக்கொள்ளலாம். மொழி போனால் மீட்டுக்கொள்ள முடியாது என்ற உண்மையைப் போலந்து நாட்டு வரலாற்றைச் சான்றாகக் காட்டுகின்றார் ஆசிரியர். 123 ஆண்டுகள் நிலப்படத்தில் இல்லாமற் போன நாட்டை, மொழிப்பற்றும் மொழிவழிவந்த இலக்கியப் பற்றுமே தங்கள் நாட்டை மீட்க வழிவகை செய்தது. யூதர்களும் ஹீப்ரு மொழி வழியேதான் தங்கள் நாட்டையும் மீட்டனர் என்றும், தென்னாப்பிரிக்காவில் வாழ்கின்ற இந்திய மக்கள் தங்கள் மொழி அழிந்தால், தங்களுக்கான இருப்பே போய்விடும் என்று கவலைப்படுகின்றார்கள் என தி இந்துவில் வந்த செய்தியை மேற்கோளாகக் காட்டுகின்றார்.

     மசாசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் மெல்லோன் பேராசிரியர் கென்னத் கெனிஸ்டன் பெங்களுரில் அண்மையில் ஆற்றிய வுரையை மேற்கோள் காட்டு கின்றார். அதில், நாட்டுமொழிகளில் மென்பொருள் வராவிட்டால் இந்தியாவில் ஆளும் வர்க்கமான ஆங்கிலம் தெரிந்த ஐந்து விழுக்காடு மெத்தபடித்த மேதாவிகளுக்கு மட்டும்தான் கணிப்பொறிப் பயன்கிடைக்கும். ஏனைய தொண்ணூற்றைந்து விழுக்காடு மக்களுக்கு இதன் பயன்கிடைக்காமல் போய் ஏற்றத்தாழ்வு பெருமளவில் வளரும். அது மட்டுமின்றி ஆங்கில வழிப்பட்ட உலகளாவிய ஒருமைப்பாட்டின் கூறாக இந்தியா ஆகிவிடும். எனவே உள்ளுர் நிலைகளுக்கேற்பத் தரப்படுத்தல் முதலியவற்றைச் செய்து, இந்த செய்தியுகத்தின் பயன்களைத் தொண்ணூற்றைந்து விழுக்காடு மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.

     கணினியை மொழி வளர்ச்சிக்கானதாக மாற்றாமல், திரைபடங்கள் பார்க்கவும், கணினி சாதகம் பார்ப்பதற்காகவும் பயன்படுத்திக் கொண்டிருப்பது தமிழ்ச்சமூகத்தின் அறிவுமரபை ஒரு நிலையோடு நிறுத்திவிடுவது போன்றதாகிவிடும். எனவே, புதிய புதிய மென்பொருளைக் கொண்டு தமிழைக் கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்க வேண்டும் என்கிறார்.

      தமிழகத்தில் கல்வியறிவு இரட்டித்து இருந்தாலும், அறிவு வளர்ச்சி வளர்ந் துள்ளதா என்றால் இல்லை. என்றுதான் சொல்ல வேண்டும். நூல்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் வந்தாலும், ஒரு தரமான நூல் 1000 படிகள் போடப்பட்டால், சொற்ப அளவிலே தான் விற்பனையாகின்றன. தமிழ் மாணவர்களே தமிழ் நூல்களைக் கற்பதில்லை என்றும், தமிழாசிரியர்கள் பழைய இலக்கியங்களைக் கற்பதில்லை என்பதோடு, புதிய நூல்களையும் வாசிப்பதில்லை என்ற ஆசிரியரின் ஆதங்கம் மெய்யானதாகபடுகின்றது. நூல் வாசிப்பில் மலையாளிகள் முன்னோடிகளாக இருப்பதை ஆசிரியர் எடுத்துக்காட்டுவது சிறப்பு.

    இலக்கியத்தின் பணி என்பது உலகமயமாதல் காரணமாக ஏற்படும் வாழ்க்கை மாற்றம், தீமைகளுக்கு எதிராக மக்கள் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புவதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை நாம் உணர வேண்டும்.

     பிறமாநிலங்களில் பிறநாடுகளில் தமிழ்ப்பண்பாட்டை வளர்த்த தமிழ் இல்லங்களை நிறுவல், அதுபோல, தமிழகத்திலும் பிற மொழி இல்லங்களை உருவாக்க வேண்டும். பிறமொழி அகராதிகளை ஆக்கம் செய்ய வேண்டும்.

   தமிழ்வழிக்கல்வி, தமிழில் பேசல் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை மேற்கண்ட கட்டுரைகள் எடுத்தியம்புகின்றன.        

     ஆங்கிலமயமாதல் என்ற கட்டுரை ஆங்கிலம், வடமொழி கற்பது தவறன்று. ஆனால், அது பண்பாட்டு மாற்றத்திற்கு வழிகோலுகின்றது. எனவே, தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை அளித்து கற்க வேண்டும். வேற்றுமொழிகளினைத் தெரிந்து கொள்வது தவறில்லை. வேற்றுமொழிகளிலுள்ள அறிவு மரபைக் கடன்வாங்கலாமேயொழிய வேற்றுமொழிச் சொற்களையல்ல என்ற ஆசிரியரின் கருத்து மிக இன்றியமையாததாகப் படுகின்றது.

    தமிழ்ப்பல்கலைக்கழகம் போன்ற ஆய்வு மையங்கள் தமிழிற்கு வேற்றுமொழி அறிவுமரபினை மொழிபெயர்ப்பதை விட்டுவிட்டு நம்முடையதை மொழிபெயர்ப்பது தவறான வேலை என்ற கருத்தும் சிந்திக்கத்தக்கது.   

         தமிழில் வடமொழி கற்பது வேறு கலப்பது வேறு என்னும் கட்டுரை, தினமணியில் (12-10-1991) திரு.கே.எஸ். சீனிவாசன் எழுதிய தமிழில் வடமொழி என்ற கட்டுரையில் காணப்படும் கருத்தியல் நோக்குப் பிழையைச் சுட்டிக்காட்டுவதாய் அமைகின்றது. 

     இத்தொகுப்பில் மிகமுக்கியமாகத் தமிழ் உச்சரிப்பு என்னும் கட்டுரை அமைகின்றது. தமிழைக் கற்கத் தமிழர்கள் முன்வர வேண்டும் என்பது ஒருபுறம். அதனைப் பிழையின்றிப் படித்தறிவது என்பது அதனைவிட இன்றியமையாதது. இன்று தொலைக்காட்சி, வானொலிகளில் பேசப்படும் தமிழில் உச்சரிப்புப் பிழைகள் அதிகமிருப்பதாகவும், பள்ளி முதற்கொண்டு உச்சரிப்புப் பயிற்சியைக் குழந்தைகளுக்கு ஆசிரியர்களும், ஆசிரியர்கள் முதலில் நன்கு உச்சரிக்கக் கற்றுக் கொள்ளத் தங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உச்சரிப்புக் கையேடுகளை அரசு வெளியிட்டு தமிழ் சரியான உச்சரிப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார் ஆசிரியர்.                                             

       தமிழ்நாட்டில் தமிழ் உச்சரிப்பு சரியில்லாமற் போனமைக்கு, இங்கு நிலவும் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் செல்வாக்கும், தமிழரின் கல்வியறிவுக் குறைபாடும் காரணமாக இருக்கக்கூடும் என்று கருதுகின்றார் பேராசிரியர்.          

      தமிழியல் ஆய்வு நேற்று - இன்று - நாளை எனும் கட்டுரையில், ஆரம்ப காலத்திய ஆய்வின் வரலாறு, தமிழ் ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் எழுந்த நிறுவனங்கள், இதழிகள், ஆய்வுத் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கின்றது.

         தமிழாய்வினை மேற்கொள்ளும் ஊலகத்தமிழாராயச்சி நிறுவனம், சென்னை ஆசியவியல் நிறுவனம், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், தஞ்சை சரசுவதி மகால், சென்னை கீழ்திசைச் சுவடி நூல் நிலையம், உ.வே.சா நூலகம், தமிழக அரசு தொல்பொருளாய்வுத் துறை, மைசூர் இந்திய மொழிகள் நிறுவனம், தமிழ் வளர்ச்சிக் கழகம், மணிவாசகர் பதிப்பகம் போன்றன தமிழ் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள் ளன என்கிறார். 1981 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகமே தமிழ் உயர் ஆய்வின் தலையகம் என்றும், அந்நிறுவனம் தமிழாய்வில் தனக்கான தலைமையை நிலைநாட்ட முயல வேண்டும் என்றும், அதில் அந்நிறுவனம் தோற்றால், தமிழாய்வின் தோல்வியாகவே கருதப்படும் என்றும் குறிப்பிடுகின்றார். இக்கருத்து இன்றியமையாததாகப் படுகின்றது.

   தமிழ்ப்பொழில், செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்க்கலை, மொழியியல், நாட்டுப்புறவியல், மேலும், தமிழாய்வு, உயராய்வு, கூச்ட்டிடூ ஞிதடூtதணூஞு போன்றன தமிழ்      ஆராய்ச்சிக்கு உதவிய, உதவுகிற இதழ்களைப் பட்டியலிடும் ஆசிரியர், தமிழகத்தில் வெளிவருகின்ற ஆராய்ச்சி இதழ்களில் இன்னும் தரமும் எண்ணிக்கையும் கூட வேண்டும் என்கிறார். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் இதழ்கள் தரமானதாகவும், ஒழுங்காகவும் வெளிவருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார்.

 ஆய்வுத்திட்டங்களை மேற்கொள்ள நிறுவனங்கள் பலவிருந்தும் பேராசிரியர்கள் தமிழாராய்ச்சிக்கு யாரும் முன்வருவதில்லை என்றும், அதற்கு ஆர்வக்குறைவு, ஆய்வில் ஈடுபடுவதற்குரிய ஊக்கிகள் இன்மை, சோம்பல், முயற்சியின்மை, புதுமை நாட்டம் இன்மை, புத்தறிவுத் தேட்டமின்மை என்றவற்றை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். இத்தன்மை கொண்ட பேராசிரியர்களிடம் பாடம் கேட்கும் மாணவர்களுக்கும் பின்னாளில் இதே நிலைமைதான் என்பதில் சந்தேகமேயில்லை. முதுகலைப் பாடத்திட்டங்கள் ஆய்வுநடையில் நடத்தப்பட வேண்டும் என்று பாடத்திட்டத்திலேயே குறிப்பிடப்பட்டிருந்தாலும்,  ஆய்வில் நாட்டம் இல்லா ஆசிரியர்கள் நூலில் உள்ளதை முற்றோதல் செய்துவிட்டு போகும் நிலைதான் மத்தியப்பல்கலைக்கழகங்கள் முதல் கல்லூரிகள் வரை நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. தொல்காப்பியத்தைக் கற்பிக்கும் போது பலவுரையாசிரியர்களை ஒப்பிட்டு, உரையாசிரியர்களின் ஆய்வுப் பார்வையைக் கற்பிப்பதைவிட்டு, இன்னும் இளங்கலையில் படித்த அடிப்படைகளையே இன்னும் எழுத்துக்கள் முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகை, சொல் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகை, நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகை என நடத்திக் கொண்டிருப்பது அடிமுட்டாள்த் தனமானது. இந்தப் பணியை மாணவனே செய்துகொள்வான். ஆய்வுநோக்கிலான பாடம் கற்பித்தலும், உரையாடல்களுமே இன்றைய மாணவர் சமுதாயத்திற்குத் தேவை. அதனை விடுத்து தெரிந்த செய்திகளையே ஓதிக்கொண்டிருப்பது என்பது பாடத்தின் மீதும், அதனை நடத்தும் ஆசிரியர்கள் மீதும் வேண்டா வெறுப்பையே ஏற்படுத்தும் என்பது உண்மை.

 கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் தமிழை மொழியியல், ஒப்பியல், பிறமொழிப்பயிற்சிகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து கற்பிக்க வேண்டும் என்ற ஆசிரியரின் கூற்று ஏற்புடையதே. மேலும், இலக்கியக்கல்வியுடன் மானிடவியல், உளவியல் போன்றவற்றையும், பயன்சார் ஆய்வுத்திட்டங்களையும் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்கின்றார்.

 அந்த அடிப்படையில் இந்தத் தொகுப்பிற்கு இக்கட்டுரை தலைமையானதாகத் தென்படுகின்றது.

            
    ஆக, பேராசிரியர் கி.நாச்சிமுத்துவின் உலகம் தேடும் தமிழ் எனும் இக்கட்டு ரைத் தொகுப்பு நூல், ஆங்கில மோகத்தினால் நாம் இழக்கும் தமிழ் மொழியின் வளர்ச்சி, இன்றைய ஆய்வின் மோசமாதன நிலைகளைச் சுட்டிக் காட்டுவதோடு அதற்கானத் தீர்வுகளையும் முன்வைப்பது பாராட்டுதற்குரியது. வெறுமனே ஒருவர் மீது குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டிராமல், அதற்கானத் தீர்வுகளைத் தருவதே ஒரு கற்றறிருந்த சான்றோரின் பணி என்பதை மெய்ப்பிக்கும் வண்ணமாய் உலகம் தேடும் தமிழ் எனும் நூல் அமைந்துள்ளது. மேற்சொன்ன தமிழ்க்கல்வியை மட்டும் செயல்படுத்தினால் கட்டாயம் தமிழை உலகமே தேடும்.

நூலினது பெயர் : உலகம் தேடும் தமிழ்

ஆசிரியர் : கி.நாச்சிமுத்து

முதற்பதிப்பு : அக்டோபர், 2007

வெளியீடு :    பேரா.கி.நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், 25/2, சுப்பையா நகர்,

பெரியநாயக்கன்பாளையம், எஸ்.ஆர்.கே.வி. அஞ்சல், கோவை - 641 020

பக்கங்கள் : 124

விலை : உரு. 60.00    



நூல் மதிப்புரை - க.வினோதா, இராஜ்கௌதமனின் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் - தமிழ்ச்சமூக உருவாக்கமும்

தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் சங்க இலக்கியத்தின் இருப்பு       

பழந்தமிழ் இலக்கியங்களின் ஒரு மீளாய்வாகப் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் - தமிழ்ச்சமூக உருவாக்கமும் என்ற நூலினைக் கூறலாம். இந்நூலை ராஜ்கௌதமன் எழுதியுள்ளார். வைதீகம், சமணம், பௌத்தம் என்ற பெரும் சொல்லாடல்களுக்குள் சங்க இலக்கியம், தொல்காப்பியம் எவ்வாறு பயணித்தது என்பதைக் குறிப்பிடும் நூலாக இது அமைகிறது. நூலில் கட்டுரைகள் அனைத்தும் இந்த அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

  சங்க இலக்கியத்தில் பாலியல் பற்றிய அறக்கவலை மிஷல் ஃபூக்கோ வழி என்னும் கட்டுரையில் ஆண்சார்ந்த ஒழுக்க நடவடிக்கைகள்தான் ஒழுக்கவிதிகளுக்கு அடிப்படை என்பதைக் கிரேக்க ரோமானியச் சிந்தனைகளுடன் ஃபூக்கோ ஆராய்ந்ததின்வழி தமிழ்ச்சிந்தனையோடு ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். நிலத்தையும், பெண்ணையும் ஆளுபவனாக ஆண் இருந்ததை விளக்குகிறார். தந்தைவழிச் சமூகஅமைப்பு செயல்படுத்தும் இடத்திலும் பெண்ணும் நிலமும் செயலூக்கம் இல்லாமல் ஆளுகைக்கு உட்பட்டு உலகம் முழுவதும் இருந்ததை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது. வரலாற்றில் பெண்ணும் நிலமும் தொடர்ந்து ஆளுகைக்கு உட்பட்ட ஒன்றாக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சங்ககால கட்டமைப்பிற்குள் உருவாக்கிய தோற்றுவாயாக இலக்கியங்கள் இருந்துள்ளது என்பது முக்கியமானது.  எனவே உருவாக்கப்பட்டது என்ற சிந்தனையின்                      பின்புலத்தில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

  அறிவுப் பொதுமையாக்கத்தில் தொல்காப்பிய கொடை எனும் கட்டுரையில் சங்கப்பாடல்களின் தொகுப்பு அரசியல் இது வரலாற்றில் தொடர்ந்து வந்ததையும் பிற்கால அரசியலில் வைதீகத்தின் தாக்கம் கட்டமைக்கப்பட்டதையும், வருணப்பாகுப்பாட்டின் உச்சம் வெளிப்படும் விதத்தினையும் விளக்கியுள்ளார். சமண, பௌத்த சிந்தனைகளுக்கு மாற்றாக வைதீகச் சிந்தனையை முழுவதுமாக எதிர்க்கும் பின்புலத்தில் கட்டுரையின் முதற்பகுதி அமைகிறது.

        தொல்காப்பியம் முழுவதும் சமணச் சிந்தனையை உள்வாங்கியதாகும். எனினும் வைதீகம் சார்ந்த கருத்தாடல்கள் புதிதாக வந்தவையல்ல. ஏற்கனவே உள்ள அறம், அரசியல், கதை, சடங்கு, புராணம், இதிகாசம், வேதம், யாகம் போன்றவைகளின் ஊடாகப் புலவர் மரபில் இருந்தன. தொல்காப்பிய உரைகளிலும் இப்போக்கே மேலோங்கி இருந்தது என்று கூறும் இந்நூலாசிரியர் பொருளதிகாரத்திற்குக் கொடுக்கும் அறிமுகம் தொல்காப்பியத்திற்கு முன்னுரையைப் போன்று அமைகிறது. சமூக ஒழுங்கமைவுகளைக் கூறும் மரபியலை அறிந்தபின் மற்ற இயல்களை அணுகினால் தெளிவு கிடைக்கும் என்கிறார்.  பிறகு அகத்திணை, புறத்திணைக்கான ஒழுங்கமைவினைக் கூறுகிறார். பிறகு களவியல், கற்பியல் எனும் இயல்களின் தேவை, கலந்த உரை அரசியல் போன்றவற்றைக் கூறுகிறார். பின்பு பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல் போன்றவைகள் தமிழ்மொழிக்கான தனித்தன்மைகளுடன் இருப்பதைக் கூறுகிறார்.

       பெண்களின் நான்கு நிலைகளும் அவற்றின் சடங்குகளும் எனும் கட்டுரையில் பெண்வாழ்வு சமூகத்தில் நான்கு நிலைகளில்  (பூப்பு, வதுவை, மகப்பேறு, கைம்மை) உள்ளதை விளக்குகிறார்.  பெண் தூய்மையாக்கத்தின் முழுக்குறியீடாக மாறிப்போனதைச் சங்கப்பாடல்களைக் கொண்டு விளக்குகிறார்.  தூய்மை என்ற கருத்தினுள் ஒதுக்கி வைக்கப்படுதலே மேலோங்கி இருக்கிறது. பெண்ணுக்கு வாரிசு எனும் ஒற்றைப் பொருளை மையப்படுத்தியே சங்க காலமும், சடங்கு முறைகளும் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.

       புறநானுற்றில் இனக்குழு சமூக எச்சங்கள் எனும் கட்டுரையில் மாந்தீரிகயுகம், சமயயுகம் இதற்கிடையில் இனக்குழு தோன்றியிருக்கக்கூடும் என்கிறார். கருப்பு மாந்தீரிக யுகத்தின் தொடர்ச்சி அதாவது எச்சம்தான் இறந்தவர் வழிபாடு என்கிறார். வேளாண்மையின் தொடக்கத்தில் உருவான பாதீடு என்ற கருத்தியல் வேளாண்மையின் உச்சத்தில் ஈகை என்றானது என்கிறார்.

   அகப்பாடல்களில் இனக்குழு சமூக எச்சங்கள் எனும் கட்டுரையில் அகப்பாடல்களில் வந்துள்ள புறச்செய்திகள் யாவும் அகஇலக்கணபிரிவு அல்ல அரசாண்ட, போரிட்ட, பாதீடு செய்தவர்களான சிற்றரசர்கள்முதல் உள்ள தலைவர்கள் பற்றிய தகவலாகும். அகப்பாடல்களைப் பாடிய நக்கீரன், மாமூலன், பரணர், கபிலன், ஔவை போன்றவர்கள் பகிர்ந்து உண்ணும் மரபே சிறந்தது என்றாலும் இவர்கள் யாவரும் பேரரசவைப் புலவர்கள் என்கிறார். இதிலும் பாதீடு, வேளாண்மை, போர், பண்டமாற்று என்பவைகள் எச்சங்களாகத் தொடர்பவை என்று விளக்குகிறார்.

     சங்க இலக்கியத்தில் புலையர் இழிசினர் இழிப்பிறப்பாளர் எனும் கட்டுரையில் வேடர்களின் நிலை மறத்தை அடிப்படையாக வைத்து சமூகமதிப்பு இருந்ததே தவிர இழிந்தவர்களாக இல்லை, மாறாக அச்சம் தரத்தக்கவர்களாக இருந்தனர். இதைப் போலவே பாணரை இழிசினர் என்று கருதும் போக்கும் பல்லவர் காலத்தில்தான் இத்தகைய போக்கு நிலவியது என்கிறார். இனக்குழு வாழ்க்கையில் இழிவு என்ற கருத்தாக்கம் இல்லாது இருந்தது. ஆனால் பேரரசு வந்தபொழுதுதான் தேவையற்றவர்கள் என்ற கருத்தாக்கம் நிலைபெற்றது, அப்பொழுதுதான் புலையர், இழிசினர், இழிப்பிறப்பாளர் போன்ற கருத்தாக்கம் வந்தது என்கிறார்.

    சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் கடவுள் உருவாக்கம் என்ற கட்டுரையில் கடவுள் என்ற கருத்தாக்கம் பெண்களை மையமிட்டதாக இருந்தது. சூர்பயம் தரக்கூடிய ஒன்றாக இருந்தது. முருகு என்பதும் முதலில் அத்தகைய நிலையிலிருந்து பிறகு கடவுள் தன்மைப் பெற்று பிறகு அதுவே பெருந்தெய்வ வழிபாடாக மாறியதை படிநிலை வளர்ச்சியோடு வைதீகச் சிந்தனை கலந்து தொடச்சியாக வருவதைக் கூறியுள்ளார்.

     சங்ககாலத் தமிழர் நாகரிகத்தில் உணவு என்ற கட்டுரை உணவுப்பொருள்களான நெல், வரகு, அவரை, எள், தினை போன்றவைகள் அரசுருவாக்கத்தோடு இணைந்து வந்ததை விளக்குகிறார். அறம், சடங்கு என்பவைகளுக்கு முகவராக உணவு அமைந்ததை விளக்குகிறார்.

         புறப்பாடல்களில் அகக்கூறுகளும் அகப்பாடல்களில் புறக்கூறுகளும்  எனும் கட்டுரையில் அகம் புறம் கட்டமைப்பிற்குள் அடங்காத தொல்திராவிட இலக்கியங்கள் இருந்தன. தொல்காப்பியத்தில் அகம் புறம் இணைவு உண்டென்று அவரே கூறி (பக்கம்.222) பிறகு கட்டுரை முடிவில் தொல்காப்பியம் இதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை (பக்கம். 242) என்றது முரண்தருவதாக உள்ளது.  இதன்பின் வடமொழி உள்ளே வந்ததுக்குப் பிறகுதான்  “எல்லைக்கோடுகள் அழிக்கப்பட்டன’’ (பக்கம்.222) என்பது ஆய்வுக்குரியது. ஏனெனில் தொல்காப்பியம் அகத்தையும் புறத்தையும் நெகிழ்ச்சியோடுதான் அணுகியுள்ளது. தனித்தனியாக இறுக்கமாக வரையறுத்தது       பிற்காலத்தில் வளர்ச்சி அடைந்திருக்கும்பொழுது முற்காலத்தில் வளர்திருக்குமா என்பதும் ஆய்வுக்குரியது. மகட்பாற் காஞ்சிப் பாடல்களில் யார் பெயரும் சுட்டாத பொழுதும் இதேபோன்று வெள்ளி வீதியார், நக்கண்ணையார் பாடல்கள் புறத்தில் சேர்த்ததில் உள்ள இடர்பாடுகளைக் விளக்குகிறார். இதற்கும் சங்கப் பாடல்களைத் தொல்காப்பியம் கொண்டுதான் தொகுத்தார்களா என்பது ஆய்வுக்குரியது.

            அகப்பாடல்களில் புறப்பாடலின் கூறுகள் என்ற கட்டுரையில் புறப்பாடல்களைப் பாடிய புலவர்கள் அகப்பாடல்களைப் பாடும்பொழுது கோசர், நன்னன், அன்னி, மிஞிலி, தித்தன், அகுதை, திதியன், அதிகன், அழிசி, மூவன், கழுவுள், வெளியன், மத்தி, பாணன், அறுவை, நள்ளி, ஆய், கடலன், வாணன், பிட்டன், தழும்பன், ஆட்டனந்தி, ஆதிமந்தி போன்றவர்களைப் பற்றிப் பாடியுள்ளனர் என்கிறார். அதே சமயத்தில் புறத்தில் பேரரசர்களைப் பாடியுள்ளனர். இது ஒருவகையில் முரண்போக்கைக் கட்டமைக்கும் வகையில் உள்ளது. தொல்திராவிட மரபில் அகமும், புறமும் இணைந்த ஒன்றைக் காணமுடிகிறது என்றும் அகம், புறம் பற்றிய பகுப்புகள்  எல்லாம் தொல்காப்பியமும், உரை மரபுகளும் பகுத்த முறை என்கிறார்.

    சங்க இலக்கியச் சிதறல்கள் சில எனும் கட்டுரையில் சங்ககால புலவர் மரபிற்குத் தமிழ்ஆக்கங்கள் மட்டுமின்றி சமஸ்கிருத, பிராகிருத, பாலிமொழி சாஸ்திரங்கள் பற்றித் தெரிந்திருக்கிறது. இவற்றோடு வழக்குகள், நம்பிக்கைகள், பழமொழிகள் இவற்றைப் படைப்பாக மாற்றும் திறனும் பெற்றிருந்தனர் என்கிறார்.

          பாட்டும் தொகையிலுமிருந்து முப்பால் மாறுபடும் இடங்கள் எனும் கட்டுரையில் வினை, பிறவி, அகிம்சை, நிலையாமை, நிருவாணம் முதலிய சமணக் கருத்துகளை மையமிட்டதாகவே திருக்குறள் இருக்கும் சூழலில் கி.பி. 250 முதல் 580 வரை அரசியல் விரிவாக்கத்தின் காரணமாகப் பாடல்கள் தொகுத்தல், உரையெழுதுதல் போன்ற பணிகள் நடைபெற்றன. இதன் பின்னணியில் திருக்குறளை வைதீக மையப்படுத்தும் வகையில் உரைகள் தோற்றம் பெற்றன. இக்காலக் கட்டத்தில்தான் வள்ளுவமாலை உயர்வு நவிற்சியாகச் சேர்க்கப்பட்ட ஒன்று என்கிறார். சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தை விடவும் வள்ளுவர்காலத் தமிழ்ச்சமூகம் கருத்தியல்கள் ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் பெரும் இடைவெளிகளும், மாற்றங்களும் நிறைந்தது என்கிறார்.

      இந்நூல் பொதுவாகச் சமண சமய கருத்துகளை வலியுறுத்தி வைதீகத்தை எதிர்க்கும் முகமாகக் கட்டுரைகள் தொகுத்துள்ளார். தமிழ்ச் சமூகத்தோடு ஊன்றிவிட்ட ஒன்றை அபத்தம் என்று எவ்வாறு விலக்க இயலும் என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது. இக்கருத்து தொல்காப்பியத்தில் துவங்கித் திருக்குறளில் முடிகிறது. பாட்டும் தொகையையும் முதலில் வைத்து தொல்காப்பியத்தை அதற்கு அடுத்து கூறுவதால் சங்க இலக்கியத்திற்குப் பிறகுதான் தொல்காப்பியம் என்ற கருத்தை வலியுறுத்துவதாக ஆசிரியரின் கருத்து உள்ளது. தொல்திராவிடக் கருத்துகள் நெகிழ்ச்சித் தன்மையைத் திரும்பவும் அளிக்கும். எனவே அம்மாதிரியான இலக்கியப் போக்குகளை முன்னெடுக்க வேண்டியதைக் கூறுவது சிறப்பானதாக அமைகிறது.


2019 - அக்- டிசம்பர் பருவ இதழில் வெளியானது.

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் வெட்சி இதழ் அறிமுகம்


17.11.2019 அன்று நடைபெற்ற பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 79-ஆவது சந்திப்பில் வெட்சி இதழ் குறித்து மணிமொழி செய்துவைத்தார். 

அவரின் உரை 

    வெட்சி இதழ் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலக்கிய மாத இதழாகத் தொடங்கப்பட்டு தற்போது இலக்கியக் காலாண்டிதழாக வெளிவருகிறது. தமிழாய்வு உலகில் விளிம்பு நிலையிலிருக்கும் ஆய்வாளர்கள் படைப்பாளர்கள் ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர்களின் படைப்புகளை தமிழாய்வுலகிற்கு வழங்குவதே வெட்சி இதழின் நோக்கமாகும்.

  4 ஆண்டுகளாக இந்நோக்கில் செயல்பட்டு தற்போது ஐந்தாமாண்டில் காலெடுத்து வைத்திருக்கிறது வெட்சி. 
    
    வெட்சி என்பது மலரின் பெயர். அது கொத்தாக மலரும் ஒரு மலர். தனியாக மலராது. அதேபோல் தான் வெட்சி இதழும். இதில் கவிதை, ஓவியம், கட்டுரை என இலக்கியங்களும் பல்வேறு துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளும் தமிழாய்வாளர்கள், கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்களும் இடம்பெறுகின்றன.

    தமிழாய்வுலகில் இன்றைய ஆய்வுப்போக்குகளின் நிலை அனைவரும் அறிந்த ஒன்றுதான். இன்றைய தமிழாய்வுகள் பெரும்பாலும் சுயவிளம்பரங்களாகவும் பிரச்சாரத்தன்மையுடையனவாகவுமே உள்ளன. திரைப்படப் பாடல்களில்   நடத்தப்படும் ஆய்வுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சங்க இலக்கிய ஆய்வுகளுக்கோ இலக்கண ஆய்வுகளுக்கோ கொடுப்பதில்லை என்பது வருந்தத்தக்க ஒன்று. சங்க இலக்கியங்களைப் புதுமையோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போக்குகள் மிகவும் அருகியுள்ளது எனலாம். அப்படி தமிழ் சார்ந்த புதுமையான ஆய்வுகளை, பிறதுறை சார்ந்த ஆய்வுகளை ஆய்வாளர்களை அவ்வளவு எளிதில் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

    கவிதை போன்ற இலக்கியங்களிலும் வெளிப்படையாகப் பொருள் புரிவது மட்டுமே கவிதை எனவும் பிறவற்றைக் கவிதையாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலையே பெரும்பாலும் நிலவுகிறது. 

 வைரமுத்து கவிதைகளை இரசிக்கும் அளவுக்கு மனுஷ்யபுத்ரன் கவிதைகளையோ சுகிர்தராணி கவிதைகளையோ யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களின் எழுத்துகளை ஒரு குறிப்பிட்ட குழு அரசியலுக்குள் அடக்கிவிடுகின்றனர். இத்தகையோரின் எழுத்துகளும் ஆய்வுகளும் புறக்கணிக்கப்பட்ட எழுத்துகளாகின்றன. இதுபோன்ற புறக்கணிக்கப்பட்ட, ஆய்வுலகிற்கு அறியப்படாத எழுத்தாளர்களை, ஆய்வாளர்களை தமிழுலகிற்கு அறியப்படுத்தவே வெட்சி இதழ் முயற்சிக்கிறது. அந்த முயற்சியை ஓரளவு நிறைவேற்றி வருகிறது. 

    14ஆம் வெட்சி இதழில் இடம்பெற்ற தமிழ் வட்டார வழக்குகளின் ஒப்பியல் அகராதி மிகவும் பயனுள்ளதொரு முயற்சியாக அமைந்தது. 

     16ஆம் இதழில் உடுக்கையடிக் கலைஞர் மயில்சாமி அவர்களின் நேர்காணல் இடம்பெற்றிருந்தது. இன்றைய நிலையில் பழங்கலைகளுக்கு மதிப்பில்லை; திரைப்படம் போன்றவை மட்டுமே அனைவராலும் இரசிக்கப்படுகின்றன என்றவொரு பொதுக்கருத்து நிலவுகிறது. ஆனால் மயில்சாமி தனது நேர்காணலில், "விஞ்ஞானம் வளர்ந்துள்ள காலகட்டத்திலும் நேரடியாகக் களத்திற்குச்சென்று நிகழ்த்தும் கலைகளை மக்கள் இரசிக்கத்தான் செய்கிறார்கள்";என்று கூறுவதன் மூலம் உண்மை நிலையினை அறிந்து கொள்ள முடிகிறது.

    17ஆம் இதழில் என்.தியாகராசன் அவர்களின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது. இவர் 91 வருடங்களாக பூம்புகார் பற்றி ஆய்வு செய்து சங்க இலக்கியங்களில் பூம்புகார் குறித்த செய்திகள் பலவற்றை அடையாளங்கண்டு கூறியுள்ளார். 
இந்த இதழின் மற்றுமொரு ஸ்வாரஸ்யமான கட்டுரை தி.மோகன்ராஜ் எழுதிய 'மொழியமைப்படிப்படையில் நகைச்சுவைத் துணுக்குகள்' என்னும் கட்டுரை. இன்றைய ஆய்வுகளே நகைச்சுவையானவையாக இருக்கும்போது நகைச்சுவையை வைத்தே ஆய்வு செய்திருப்பது வியப்பான ஒன்றாக இருந்தது. 
   
    வான்மதி கண்டு
   மதியிழந்த பறவை
   மீதமுள்ள உதிரம் கொண்டு
   வலசை வரத்துடிக்கிறது
   இடியைத்தாங்கும் இறகுகள் 
   ஈரப்பனியைத் தாங்க முடியவில்லை
   எஞ்சியுள்ள துடிப்போசையில் நீட்டிப் பாய்கிறது 
   மின்னல் இமைகள்
என்னும் கவிதை மிகவும் சிறப்பாக இருந்தது. மிகப்பெரும் துன்பம் தாங்கும் இதயம் சிறு புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இக்கவிதை அழகோடு உணர்த்துகிறது.

    அதிகாரங்களை மீறி விடுதலை பெற எத்தனிக்கும் குரலாய் ஒலிக்கிறது
    
        சிறைமீண்ட பருவமொன்றில் 
        அணிசேர்க்கும் தும்பிகளின்
        நிமித்தங்களில் உறைந்திருக்கிறது
        பெருவெளியைக் கடக்கும் 
        என் உயிர்ப்பு
என்னும் கவிதை.
 
இந்த வாழ்வை இரசிக்க
பெரிய பிரயத்தனங்கள் 
தேவையில்லை
நீ
ளு
ம்
ஒரு பனியிரவு
ஒரு கோப்பைத் தேனீர்
ஒரு நீ
ஒரு நான்
ஒரு
சொ
ட்
டு 
காதல்
ஒரு சாளரம்
தனித்த நிலவு
இலேசான
தூ
வா
ம்
இதழ் கசியும் முத்தம்
கோர்த்த இரு கரங்கள்
யாருமற்ற நெடும்பாதை
வழியெங்கும் கொட்டிக்கிடக்கும்
மஞ்சள் பூக்கள்
இவை போதுமென அதிரூபனே
வா கொஞ்சம் வாழ்ந்துதான் பார்ப்போம்
இந்த வாழ்வைத் திகட்டாது இரசிக்க...

வாழ்வை மனநிறைவோடு, மகிழ்வோடு வாழ பணமோ வேறெதுவுமோ தேவையில்லை.

    ஒருதுளி அன்பிருந்தால் போதும் வாழ்க்கை அழகாகும் என்பதை இக்கவிதை உணர்த்துகிறது
ஆதரவு இழந்த ஏடுகள்
அடையாளம் காணாது கிடக்க
அவிழ்ந்துபோன என் கால்கள்
அந்தரமாகத் தொங்கின
மண்ணகன்ற சோலை
மாரழைத்தபடி மந்திரம் பாடியது
மாலை வண்ணம் மனமழைக்க
ஏடு அவிழ்ந்த கோடுகள்
நிழல் அவிழத் தொடங்கியதும்
அவிழ்ந்துபோன கால்களாலேயே 
அவிழ்ந்து போனது என் ஏடுகள்
கனவுகளைத் தொலைத்து சமூகத்தைத் தொடரும் தனிமை நிறைந்த உயிரின் குரல்

 தமிழியல் ஆய்வு, இலக்கியம் என இவற்றுக்கு மட்டுமின்றி சமூகப்பிரச்சனைக்கும் அதன் தீர்வுக்குமான ஆலோசனைகளையும் வெட்சி இதழ் வழங்குகிறது.

    தற்போது வந்த இதழில் இந்தித் திணிப்பு குறித்த அண்ணாவின் உரை ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

   இனி வரும் வெட்சி இதழ்களில் நவீன மார்க்சியம், பெண்ணியம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள், பிறதுறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள், விளிம்புநிலையில் உள்ள திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், பெண் எழுத்தாளர்கள், புலம்பெயர்த் தமிழர்கள் ஆகியோரின் படைப்புகளையும்
சிறுவர் இலக்கியங்கள், மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், அறியப்படாத மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரையும் அறிமுகப்படுத்தினால் இன்னும் சிறப்பான நிலையை இதழ் அடையும்.
------

மனதைக் கவரும் வெட்சி
********************************
     கடந்த ஞாயிறு 17.11.2019 அன்று நடைபெற்ற பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 79-ஆவது சந்திப்பில் வெட்சி இதழ் அறிமுகம் செய்யப்பட்டது. தொல்காப்பியர் திருநாள் சிறப்பு இதழாக பதிப்பித்துள்ளார்கள்... துவக்ககால படைப்பாளர்கள் மற்றும்   வளரும் படைப்பாளர்களுக்கான அங்கீகாரக் களமாகிறது.. தமிழ்த்துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் தொல்காப்பியம் குறித்தான, மொழி குறித்தான ஆய்வுக்கட்டுரைகளால் நிரம்பியுள்ளது...

    அட்டைப்பட ஓவியம், நேர்காணல், கவிதைகள், நூல் அறிமுகம் என மிளிர்கிறது... 
          
    நண்பர் கனகராஜ் கல்லூரியில் பயிலும் காலத்தே வெட்சி இதழை சொந்த முயற்சியில் நிறைய மாணவர்களின் படைப்புகளுடன் நண்பர்களோடு இணைந்து நடத்திக் கொண்டிருந்தார்...
      
    கடந்த சில வாரங்களுக்கு முன் அம்சப்ரியா அவர்களின் இல்லத்தில் ஓரிரு ஆண்டுக்குப் பின் வெட்சி இதழைப் பார்த்தேன்... அதே உத்வேகத்துடன் வண்ண அட்டைப் படத்துடன் பெரிய வடிவிலான இதழோடு முன் நிற்கிறார்...நண்பருக்கு இனிய வாழ்த்துகள் ...
இதழை அறிமுகப் படுத்திய பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திற்கு பெரும் மகிழ்வுகள்...

(நன்றி .: ப.காளிமுத்துவின் முகநூல் பதிவிலிருந்து.....)




நிகழ்வு - 1 இராகுலன் கவிதைகள் குறித்து - ப.காளிமுத்து உரையாடல்

    வெட்சி காலாண்டிதழ் -  கவிதை வாசிப்புக் கலந்துரையாடல் நிகழ்வு - 1 25.04.2020, காலை 11.00 மணியளவில் Zoom செயலி வாயிலாக நடைபெற்றது. ராஜன் ஆத்தியப்பனின் "திணையிலி", சல்மாவின் "இந்தமண் என்னை மூடும் பொழுது", இராகுலனின் "இரண்டாம் இருதயம்", சம்பத்குமாரின் பெயரிடப்படாத கவிதை ஆகிய கவிதைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. படைப்பு இலக்கியத்தையும் விவாத முறைகளையும் வளர்த்தெடுக்கும் விதமாக இதழ் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கூட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தோழமைகள் க.வினோதா, அஜய்சுந்தர், சம்பத்குமார், ப.காளிமுத்து, மணிமொழி, கா.விக்னேஷ், கானகநாடன், வெற்றிச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய பார்வைகளை முன்வைத்தனர். 

 இராகுலன் கவிதைகள் குறித்து - ப.காளிமுத்து உரையாடல்

    ஒரு படைப்பாளிக்கு கவிதை வசப்படும் சமயத்தில் தன் சிரசின் மீது அமர்ந்திருக்கும் ஓர் அழகிய தொப்பியை அதன் மீது அணிந்து அழகு பார்க்கிறான்... குறை, நிறைகளை நேர்த்தியாக்குகிறான்... பகடி செய்கிறான்... அது காட்டும் திசையில் பயணிக்கவும் செய்கிறான்...ஒரு துரோகத்தையோ, ஒரு சூழ்ச்சியையோ செய்தவனை " உனக்கெல்லாம் இதயம்ன்னு ஒன்னு இருக்குதா இல்லையா...?" என யாரோ ஒருவர் கேட்டுக் கொண்டிருப்பதை நாம் எப்பொழுதாவது எதிர்கொண்டிருக்கக்கூடும்... அப்படியான, மனித ஈரமிக்க உயிராய் இதயம் இருந்து கொண்டுதான் இருக்கிறது...
 துடித்துக் கொண்டிருக்கும் அவரவர்களின் இதயம் கூறிக் கொண்டிருப்பதென்ன...? உறவுகளின் மகிழ்வை, ஓர் அபூர்வ காலத்தை, ஒரு மனிதனின் மகிமையை என உணர்ந்துகொண்டும் தான் உணர்ந்தவற்றை அல்லது கண்டுகொண்டதை அதேயளவு பூரிப்போடு யாரிடமாவது கடத்திக்கொள்ள இயலுமா என காத்திருக்கவே செய்கிறது

    இரத்தச் சுத்திகரிப்பு, உடலியக்கம் என்பவை ஒருவகையில் இதயத்திற்கு உயிர் இட்ட கட்டளைகள்.. இரண்டாவது இதயத்தின் பயன் யாது? அது புறமிருந்து அகத்தை இயக்குவதாகத் தோன்றுகிறது.. அது சக மனிதன் மீதான, உயிர்கள் மீதான, அன்றாடைய சூழல் மீதான உணர்வுகளைக் கொண்டு துடித்துக் கொண்டிருக்கிறது.. அவைகளையே மூலப் பொருளாகவும் கொண்டு இயங்கச் செய்கிறது.. 
*************************
கவிதை........
இரண்டாம் இருதயம்

ஒவ்வொருவருக்குள்ளும்
துடித்துக் கொண்டிருக்கிறது
அவர்களது கற்பனைகள் குறித்த
அவர்களது இரண்டாம் இருதயம்

அவர்கள் இறந்தபின்
அது தன் துடிப்பை வேகப்படுத்தி
பிற உடலுக்குள் பொருந்தி இயங்கலாம்
வான்வெளிகளில் தன்
கற்பனையின் திடவடிவத்தைக் கட்டிக்கொண்டிருக்கலாம்
எங்கும் உடலின்றி நிர்வாணமாகவும் திரியலாம்..
                          - இராகுலன்.
                          -வெட்சி காலாண்டிதழ் - இதழ் எண் :16.

அது கவிதையில் குறிப்பிட்டவாறு உடல்களற்ற, வெறுப்பற்ற, வஞ்சகமற்ற ஆகச் சிறந்த மனிதத்தையே நிர்வாணத்தின் மேனியாகக் காணலாம்..

    இரண்டாம் இருதயம் கவிதை வாசகமனதில் தங்களுக்கான இரண்டாம் இதயம் பற்றி வினா எழுப்புகிறது... அவனைச் சோதித்துப் பார்க்கச் செய்கின்றது.. துடித்துக் கொண்டிருக்கக்கூடும் இல்லையெனில் இரண்டாவது இதயத்தை உயிர்ப்பிக்கத் தூண்டுகிறது.
----------------------------------------------------
அடுத்த கவிதை...

மையத்தில் நான்
தேடுவதற்குள்
பார்ப்பதற்குள்
அறிந்து கொள்வதற்குள்
புரிந்து கொள்வதற்குள்
கற்பதற்குள்
நேசிப்பதற்குள்
அடைவதற்குள்
கடப்பதற்குள்
உணர்வதற்குள்
வெளியேறுவதற்குள் 
செத்து விடுகிறேன்.
                                        -இராகுலன்
                                          வெட்சி காலாண்டிதழ் - இதழ் எண்: 16.

    இக்கவிதை நிகழ்காலத்தை நினைவு கூறச் செய்கிறது ... தனிமனிதத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, ஒரு வாழ்வை முழுமையாக்கிக் கொள்வற்கு, ஒரு பட்டினியைச் சகித்துக் கொள்வதற்கு, ஒரு தனிமையைக் கடப்பதற்கு என ஒவ்வொன்றிற்கும் செத்துத்தான் போகவேண்டியுள்ளது இம்மண்ணில்...

    மரணத்தைப் புரிந்து கொள்வதற்கு மரணித்துத்தான் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை..நெருங்கியிருப்பவர்களின் கடைசிப் பொழுதையோ..யாராவது மரணத்தையோ நினைவுபடுத்தல் போதுமானதாகிறது.. அப்படியான மரணத்தின் ஒத்திகையை அடிக்கடி நிகழ்த்த வேண்டியுள்ளது...

    

புதன், 15 ஜூலை, 2020

நிகழ்வு - 6 "இலக்கிய ஒப்பாய்வும் மொழிபெயர்ப்பும் : சங்க அகப்பாடல்கள் , மன்யோசு காதற்பாடல்களை முன்வைத்து "

வெட்சி காலாண்டிதழ்
நிகழ்வு : 6
04.07.2020
"இலக்கிய ஒப்பாய்வும் மொழிபெயர்ப்பும் : சங்க அகப்பாடல்கள் , மன்யோசு காதற்பாடல்களை முன்வைத்து " எனும் பொருண்மையில் ஜப்பான்-கக்சுயின் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பேராசிரியராக இருந்து தமிழ் - யப்பானிய இலக்கிய ஒப்பாய்வு மற்றும் மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட
பேராசிரியர் ச.மனோன்மணி அவர்கள் உரையாடினார். அதனை வெட்சி இதழுக்கான வலையொளியில் பதிவேற்றியுள்ளோம். நண்பர்கள் விவாதங்களை முன்வைக்கலாம்.
பதிவேற்ற உதவிய #Tamil Bharathan, #Aasaimani arumugan ஆசைமணி ஆகியோர்க்கு நன்றிகள்.
இலக்கிய ஒப்பாய்வும் மொழி பெயர்ப்பும் | ச. மனோன்மணி அவர்களின் உரை

நிகழ்வு - 4 ஈழத்துத் தமிழாய்வு வரலாறும் போக்குகளும்

வெட்சி காலாண்டிதழ்
நிகழ்வு : 4
16.06.2020
ஈழத்துத் தமிழாய்வுகளின் வரலாறும் போக்குகளும் எனும் பொருண்மையில்
பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் உரையாடினார். அதனை வெட்சி இதழுக்கான வலையொளியில் பதிவேற்றியுள்ளோம். நண்பர்கள் முழுதும் உரையைக் கேட்டு விவாதத்தை முன்வைத்தால் சிறப்பாக இருக்கும்.
பதிவேற்ற உதவிய #Tamil Bharathan, #Aasaimani arumugan ஆசைமணி ஆகியோர்க்கு நன்றிகள்.

ஈழத்து தமிழாய்வுகளின் வரலாறும் போக்குகளும் | பேரா. அருணாச்சலம் சண்முகதாஸ் அவர்களின் உரை

வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்

  வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்   இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழல் ப...